அண்மையில் நாடு கடத்தப்பட்ட தமிழ் குடும்பம் ஒன்று பாரிய அச்சுறுத்தலுக்கு முகங்கொடுத்துள்ளதாக கனேடிய ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
நாடு கடத்தப்பட்டவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு சுமார் 8 மணித்தியாலங்கள் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. இதன் காரணமாக தாம் இன்னமும் அச்சத்துடன் உள்ளதாக குறித்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
கடந்த டிசம்பர் 3ம் திகதி லியோனி பவித்ரா லோரன்ஸ் என்ற மாணவி மற்றும் அவரது குடும்பத்தினர் கனடாவிலிருந்து நாடு கடத்தப்பட்டனர்.
இந்நிலையில் நாங்கள் இன்னமும் பாதுகாப்பாக உணரவில்லை என 22 வயதான பவித்ரா தெரிவித்துள்ளார்.
நாடு கடத்தப்பட்டதன் பின்னர் முதல் முறையாக இந்த வாரம் கனேடிய ஊடகமொன்று அந்த குடும்பத்தினரிடம் தொடர்பு கொண்டு தற்போதைய நிலை குறித்து விசாரித்துள்ளது.
லோரன்ஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் கடந்த 5 வருடங்களாக கனடாவில் வசித்து வந்தனர். இந்நிலையில் பவித்ராவின் குடியுரிமையில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக அவரும் அவரது குடும்பத்தினரும் கடந்த டிசம்பர் மாதம் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.
தொடர்ந்தும் இந்த குடும்பத்தினர் கனடாவில் வசிப்பதற்கு Quebec அரசியல்வாதிகளிடமிருந்து பல அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்ட போதிலும், குடிவரவு அமைச்சர் Ahmed Hussen அதனை விரும்பவில்லை என்று லோரன்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
“இனிமேல் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. எமது நியாயத்துக்காக போராடிய அனைவரையும் நான் நினைத்துப் பார்க்கின்றோம். இந்த பெடரல் அரசாங்கம் எங்களை கைவிடாது என்று நாங்கள் உண்மையில் நினைத்தோம்” என லியொன் லோரன்ஸ் தெரிவித்துள்ளார்.
“டிசம்பர் 4 ம் திகதி இலங்கையை வந்தடைந்த போது, அதிகாரிகள் விமான நிலையத்தில் எட்டு மணி நேரம் தடுத்து வைத்தனர், மூன்று வெவ்வேறு பிரிவுகள் எம்மிடம் விசாரணை மேற்கொண்டன.
நாம் நாடு திரும்பிய போதிலும், பாதுகாப்பு கருதி குடும்ப உறுப்பினர் நமது சொந்த பகுதிக்கு செல்ல அச்சமடைந்தனர். நம்மை இலகுவாக அடையாளம் கண்டுவிட முடியும். அதனால் இலங்கையின் தலைநகரமான கொழும்பில் தற்காலிகமாக வீடு ஒன்றை கொள்வனவு செய்து குடும்பத்தினர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.” என லோரன்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பிரச்சினைக்கு ஒரு தீர்வு கிடைக்கும் என நம்பியிருந்தோம். கனேடிய குடிவரவு அமைச்சர் செய்திக்காக காத்திருந்ததாக அவர் தெரிவித்துள்ளார். தற்காலிக விசா ஏனும் மீளவும் கிடைக்கும் என நாம் எதிர்பார்த்தோம். உயிர் அச்சுறுத்தல் உள்ளமையினால் சொந்த ஊருக்கு செல்ல முடியாது. எனினும் தலைநகர் கொழும்பில் வேலை தேடுவதென்பது கடினமான ஒரு விடயமாகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.