ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்த கீதா குப்தா பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
இவருடைய கணவர் முகேஷ் குப்தா கடந்த 2016 ம் ஆண்டு மாரடைப்பால் மரணமடைந்தார். இதனால் கீதா குப்தா மிகவும் மனமுடைந்தார். இவர்களின் மகள் சன்கித்தா பணிக்காக குருகிராம் நகருக்கு இடம்பெயர்ந்தார். இது கீதாவிற்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்தியது.
சன்கித்தா வாரந்தோறும் தனது தாயை சென்று பார்த்து வந்தார். இருப்பினும் அவர் தனிமையில் வாடிவருவதை உணர்ந்த சன்கித்தா தனது தாய்க்கு மறுமணம் செய்து வைக்க முடிவு செய்தார்.
குழந்தைகள் உடனிருந்தாலும் வாழ்க்கைத்துணை மிகவும் அவசியம் என்பதால் கீதாவிற்கு மேட்ரிமோனியில் வரன் தேட தொடங்கினார்.
அவருக்கு பல வரன்கள் வந்தன. இது குறித்து தனது தாயிடம் கூறியது போது அவர் ஆட்சேபம் தெரிவித்தார்.
கீதாவின் உறவினர்களும் மறுமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் பல தடைகளை மீறி சன்கித்தா கீதாவிற்கு நல்ல வரனை தேர்ந்தெடுத்தார்.
பன்ஸ்வாரா பகுதியைச் சேர்ந்த வருவாய்த்துறை ஆய்வாளர் கே.ஜி.குப்தாவிற்கும் தனது தாய்க்கும் திருமணம் நடத்தி வைத்தார்.
கடந்த மாதம் நடைபெற்ற திருமணத்திற்கு பிறகு தனது தாய் கீதா மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக சன்கித்தா கூறினார்.
சமூகத்தில் விதவைகள் மறுமணம் செய்வதற்கு பல எதிர்ப்புகள் கிளம்பும். அதையும் மீறி தனது விதவை தாய்க்கு மறுமணம் செய்து வைத்த சன்கித்தாவிற்கு சமூக ஊடகங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.