தந்தை மீது கொலை வழக்கு, மூன்று வயது மகள் மரணம்!!

அமெரிக்காவில் கேரள தம்பதியரின் மூன்று வயது தத்துக் குழந்தை உயிரிழந்த வழக்கு விசாரணையில், அக்குழந்தையின் தந்தை மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஷெரின் மேத்யூஸ் என்ற அந்த குழந்தையின் உடலை பிரேத பரிசோதனை செய்ததில், “வன்செயல்” காரணமாக அவள் இறந்தது தெரியவந்ததை அடுத்து இவ்வழக்கு செய்யப்பட்டது.

டெக்சாஸில், குழந்தையை தத்தெடுத்து வளர்த்த வெஸ்லி மேத்யூஸ், அவளை தண்டிப்பதற்காக அதிகாலை மூன்று மணியளவில் வீட்டின் வெளியே நிற்க வைத்த போது அவள் காணாமல் போனதாக தெரிவித்திருந்தார்.

இரண்டு வாரங்களுக்குப் பின், வீட்டில் இருந்து அரை மைல் தூரத்தில் உள்ள சுரங்கப்பாதையில் குழந்தையின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

குழந்தையின் தாய் மற்றும் தந்தை

தற்போது வழக்கு விசாரணையின் போது, வெஸ்லி கூறிய நிகழ்வுகளில் பல முரண்பாடுகள் இருந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில்தான், குழந்தையை கொலை செய்ததாக தந்தை மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில், அவருக்கு ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை விதிக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரேதப் பரிசோதனை முடிவுகள் வெளியானதை அடுத்து, குழந்தையை அவர் கொலை செய்ததை அதிகாரிகள் உறுதி செய்தனர். ஆனால், குழந்தை இறந்ததற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை.

ஆதாரங்களை மாற்றியது, குழந்தையை காயப்படுத்தியது மற்றும் கைவிட்டது ஆகிய குற்றங்களும் வெஸ்லி மேத்யூ மீது பதிவு செய்யப்பட்டுள்ளது.

குழந்தையை பார்த்துக் கொள்ளாமல் கைவிட்ட குற்றத்திற்காக, அவரது மனைவி மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இச்சம்பவத்தை தொடர்ந்து, குழந்தைகள் காப்பகத்தில் சேர்க்கப்பட்டு இந்த தம்பதியின் மற்றொரு மகள், தற்போது உறவினர்களுடன் வசித்து வருகிறார்.

குழந்தையை தத்தெடுத்து வளர்த்த பெற்றோரை முறையாக “மதிப்பீடு செய்ய தவறியதாக”, அவர்கள் ஷெரினை தத்தெடுத்த ஹோல்ட் இன்டர்நேஷனல் நிறுவனம் மீது இந்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது