நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் நேர்காணல்கள் அண்மைய நாட்களாக தமிழக தொலைக் காட்சிகளில் ஒலிபரப்பப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
கடந்த 8 ஆண்டுகளாக தமிழக அரசியலில் தனது குரலை ஓங்கி ஒலிக்கச் செய்து கொண்டிருக்கிறார் சீமான். ஈழ விடுதலைப் போராட்டத்தில் இருந்து தமிழக அரசியல் வரை அத்தனை பிரச்சினைகள் குறித்தும் பேசும் அவர் தமிழ்த் தேசியத்தின் விடுதலை, தமிழர் ஆட்சி மலர வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்.
திராவிடக் கட்சிகள், தேசியக் கட்சிகள் போன்றவற்றோடு கடும் போட்டி போட வேண்டிய நிலையில் இருக்கிறது நாம் தமிழர் கட்சி. முதலில் ஒரு இயக்கமாக ஆரம்பித்து, பின்னர் கட்சியாக அதனை மாற்றியிருக்கும் சீமான் தமிழகத்தை தமிழர் மட்டுமே ஆட்சி செய்ய வேண்டும் என்பதில் உறுதியாகப் பேசிவருகிறார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக ஊடக விவாதங்களின் போது யார் தமிழன்? என்ற கேள்வியினால் கடுமையாகக் கொதித்துப் போயிருக்கிறார் சீமான்.
தமிழர்களையே யார் தமிழன் என்று கேட்க வைத்திருக்கிறது இந்த நாடு என்று ஆதங்கப்படும் அவர், இந்த இழி நிலை வந்திருப்பது வேதனையானது என்றும் குறிப்பிட்டிருந்தார்.
நேற்றைய தினமும் ஒரு தனியார் தொலைக்காட்சியின் பேட்டியில், நேர்காணல் செய்பவர் யார் தமிழன் என்று கேட்ட கேள்விக்கு கடுமையான பதிலை வழங்கியிருக்கிறார் சீமான்.
இதேவேளை, தமிழகத்தில் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் எடப்பாடி, பன்னீர்செல்வம் தலைமையிலான ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில், ஆட்சி மாற்றம், தேர்தல் என்று பெரும் சர்ச்சைகள் நடந்து கொண்டிருக்கின்றன. கமல ஹாசன், ரஜினி காந்த் என்று பெரும் சினிமா நட்சத்திரங்கள் தேர்தல் களத்தில் இறங்குவதற்குத் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள்.
சினிமா என்னும் பிம்பத்தை வைத்துக் கொண்டு தமிழ்நாட்டை சிதைக்காதீர்கள். நாங்கள் எங்கள் மக்களை ஆள்கிறோம் என்பது தான் அவரின் பேச்சாக இருக்கிறது.
ரஜினிகாந்தை நான் சினிமாவில் எதிர்க்கவில்லை. நாற்பது ஐம்பது ஆண்டுகளாக அவர் தமிழ் சினிமாவில் இருக்கிறார். அவரின் திரைப் படங்களில் பார்த்து ரசிக்கிறோம். கை தட்டிக் கொண்டாடுகிறோம். ஆனால் அரசியலில் மட்டுமே எதிர்க்கிறேன்.
நாங்கள் ஆட்சி செய்கிறோம் எங்களுக்கு வழிகாட்டியாக இருங்கள் என்றும் கோருகிறார். ஆனால் ஆட்சி செய்யப் போகிறோம் முதல்வராகப் போகிறோம் என்று வராதீர்கள் என்பது அவரின் எதிர்ப்பாக இருக்கிறது.
இன்னும் நாங்கள் போராடிக் கொண்டு தான் இருக்கிறோம். எங்கள் உரிமையை மீட்டெடுக்கும் வரை போராடுவோம் என்கிறார் அவர்.