தமிழீழத்தை மீட்டெடுப்பதற்காக எழுந்து வா என்று அறைகூவல் விடுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் பாடலை சுதந்திரக் கட்சியின் பரப்புரைக் கூட்டத்தில் ஒலிபரப்பியமை தொடர்பில், அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தன்னுடன் பேசவோ தன்னைத் திட்டவோ இல்லை என்று தெரிவித்தார் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளர் அறிமுக நிகழ்வு யாழ். நகரில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது.
நிகழ்வில், தமிழீழ விடுதலைப் புலிகளின் எழுச்சிப் பாடல் ஒலிக்க விடப்பட்டிருந்தது. இது தெற்கில் உடனடியாகவே அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்தச் சம்பவத்தின் மூலம் தமிழீழத்தை மைத்திரி ஆதரிக்கிறாரா என்று நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் மூத்த புதல்வருமான நாமல் ராஜபக்ச உடனடியாகவே கேள்வி எழுப்பியிருந்தார்.
இதையடுத்து தமது கட்சிக் கூட்டத்தில் புலிகளின் பாடலை ஒலிபரப்பியமைக்காக அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன, நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனை அலைபேசியில் அழைத்துத் திட்டினார் என்று நேற்றுத் தகவல் வெளியானது.
கொழும்பு அரசியல் பரப்பிலும் இந்த விடயம் சிலாகித்துப் பேசப்பட்டது.
‘‘நானும் சமூகவலைத் தளத்தில் இந்தத் தகவலைப் பார்தேன். அதில் எந்த உண்மையும் இல்லை. அப்படி ஒரு சம்பவம் நடக்கவேயில்லை. செய்தியைப் பார்த்துச் சிரித்தேன்.
என்னைப் பொறுத்தவரை எமது நிகழ்வில் நாம் ஒலிபரப்பிய பாடல், தமிழர் எழுச்சிக்கான பாட்டு. இதை எந்தவித உள்நோக்கத்துடனும் பார்க்கத் தேவையில்லை.
நாங்கள், சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கோ, அரசுக்கோ ஆதரவு தருவதற்காக தமிழர் உணர்வுகளைவிட்டு, உணர்சிகளை விட்டு போக வேண்டும் என்ற தேவையில்லை. அதே உணர்வு உணர்ச்சி எப்போதுமே இருக்கும்.
தமிழ்த் தலைமைகள் எங்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும்போது நாங்கள் நித்திரையாக இருக்கக்கூடாது என்பதற்கான பாட்டுத்தான் அது என்றார்.
நாமலின் கேள்விக்குத் தான் உரிய தருணத்தில் உரிய பதில் அளிப்பார் என்றும் அவர் தெரிவித்தார்.