விடுதலைப் புலிகளால் வெளியிடப்பட்ட தமிழர் நாட்காட்டி மீண்டும் வெளிவந்துள்ளது!

விடுதலைப் புலிகளால் வெளியிடப்பட்ட தமிழர் நாட்காட்டி மீண்டும் வெளிவந்துள்ளது!

தமிழ் புத்தாண்டு என அழைக்கப்படும் தைப்பொங்கல் திருநாளான இன்று, புதிய திருவள்ளுவர் ஆண்டு பிறந்துள்ளது. அதாவது தமிழரின் பண்டைய நாட்காட்டிக் கணிப்பின்படி புதிய தமிழ் ஆண்டு பிறந்துள்ளது.

அந்தவகையில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தொன்மத் தமிழ்க் குடிகளால் கையாளப்பட்டு வந்த தமிழ் நாட்காட்டியை தற்காலத்திற்கேற்ப வடிவமைத்து வெளியிட்டிருக்கின்றார் கிளிநொச்சியைச் சேர்ந்த மின் பொறியியலாளரான மகேந்திரராசா.

தொன்மத் தமிழரின் நாட்காட்டி தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் அவர்களது நிழல் அரச நின்வாகத்திற்குட்பட்ட பிரதேசங்களில் பாவனையில் இருந்துள்ளது. தமிழரது சரித்திர நிகழ்வுகள், நினைவு கூரப்படவேண்டிய நிகழ்வுகள் மற்றும் உலக விடயங்களைத் தாங்கியதாக தமிழ் நாட்காட்டி 2009ஆம் ஆண்டு காலத்திற்கு முன்னர் விடுதலைப் புலிகளின் பிரதேசத்தில் பயன்படுத்தப்பட்டது.

இதனடிப்படையிலேயே கிளி நொச்சியைச் சேர்ந்த மகேந்திரராசா குறித்த நாட்காட்டியை புதிய வடிவில், மலர்ந்திருக்கும் இன்றைய தமிழர் திருநாளன்று வெளியிட்டிருக்கிறார். இதில் தமிழ்த் தேசிய நிகழ்வுகள் மற்றும் உலகின் முக்கியமான விடயங்கள் என்பன உள்ளடக்கப்பட்டுள்ளன.

இந்த நாட்காட்டியில் தமிழரது மாதங்கள் மற்றும் நாள்கள் பற்றிய விளக்கங்களும் கொடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். தற்காலத்தில் கிரகோரியன் நாட்காட்டியைப் பொதுவாகப் பயன்படுத்திவரும் உலக மக்களிடையே குறிப்பிட்ட சில பழம்பெரும் நாகரிகங்களைச் சேர்ந்த மக்கள் அல்லது இனக் குழுமங்கள் தமக்கென்று தொன்றுதொட்ட நாட்காட்டியைப் பாவனையில் வைத்துவருகின்ற நிலையில் தமிழர் நாகரிகத்தினைப் பறைசாற்றுவதாய் மகேந்திரராசாவின் நாட்காட்டியும் அமையும் என்பதில் ஐயமில்லை!