ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் குறை பிரசவத்தில் பிறந்து 400 கிராம் எடையே இருந்த குழந்தையை காப்பாற்றி டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர்.
குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைகளை காப்பாற்றுது என்பது மிகப்பெரிய சவாலான விஷயமாகும். அதிலும் மிக குறைந்த மாதங்களில் பிரசவம் ஆகி இருந்தால் அந்த குழந்தை பிழைப்பது மிக அரிது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் குறை பிரசவத்தில் பிறந்து 400 கிராம் எடையே இருந்த குழந்தையை காப்பாற்றி டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஒரு தம்பதிக்கு திருமணமாகி 35 ஆண்டுகளுக்கு பிறகு குழந்தை பாக்கியம் ஏற்பட்டது. கர்ப்பத்தை தாங்கி கொள்ளும் அளவுக்கு அந்த பெண்ணின் உடல்நிலை இல்லை.
கர்ப்பமாகி பாதி மாதங்கள் ஆகி இருந்த நிலையில் அவருக்கு கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு ரத்த அழுத்தம் ஏற்பட்டது. ஜெய்ப்பூரில் உள்ள ஜிவன்தா குழந்தைகள் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அவருக்கு அல்ட்ரா சோனாகிராபி பரிசோதனை செய்து பார்க்கப்பட்டது. இதில், வயிற்றில் இருந்த குழந்தைக்கு ரத்தம் போகவில்லை என்பது தெரிய வந்தது.
எனவே, குழந்தை உயிர் இழக்கும் நிலை உருவானது. குழந்தையை காப்பாற்றுவதற்காக உடனடியாக சிசேரியன் செய்து வெளியே எடுக்க டாக்டர்கள் முடிவு செய்தனர்.
அதன்படி கடந்த ஜூன் மாதம் 15-ந்தேதி ஆபரேஷன் செய்து குழந்தை வெளியே எடுக்கப்பட்டது. அது பெண் குழந்தை. வெளியே எடுத்த போது குழந்தை 400 கிராம் எடை மட்டுமே இருந்தது. 8.6 அங்குல நீளம் கொண்டிருந்தது. குழந்தையின் பாதம் விரல் நகத்தை விட சற்று மட்டுமே பெரிதாக இருந்தது.
இவ்வளவு சிறிய குழந்தையை காப்பாற்றுவது மிக கடி னம் என கருதினார்கள். ஆனாலும், விசேஷ இங்கு பேட்டர் கருவியில் வைத்து குழந்தையை காப்பாற்றுவதற்கான முயற்சியில் ஈடுபட்டனர்.
குழந்தையின் நுரையீரல் சரியாக வளர்ந்திருக்கவில்லை. எனவே, குழந்தையால் சுவாசிக்கவும் முடியவில்லை. கருவிகள் உதவியுடன் குழந்தை சுவாசிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. குழந்தை வாயால் உணவை உட்கொள்ளும் அளவுக்கும் வளர்ச்சி அடையவில்லை.
எனவே, குழந்தையின் உடலுக்கு தேவையான சத்துக்கள் அனைத்தும் ரத்தம் மூலம் செலுத்தப்பட்டது. இதனால் படிப்படியாக குழந்தை வளர்ச்சி அடைந்தது.
சிகிக்சை அளித்த 7-வது வாரத்தில் வாயால் உணவு உட்கொள்ளும் அளவுக்கு வளர்ந்தது. இதனால் கரண்டி மூலம் வாயில் பாலை ஊற்றினார்கள்.
அதை குடித்தாள். இதன் காரணமாக குழந்தையின் வளர்ச்சி வேகம் இன்னும் அதிகரித்தது. 6 மாதங்கள் தொடர்ந்து ஆஸ்பத்திரியிலேயே வைத்திருந்து சிகிச்சை அளித்தனர்.
இதையடுத்து குழந்தை முழு வளர்ச்சி அடைந்து உடல் நலமும் முழுமையாக சீரானது. தற்போது 2 கிலோ 400 கிராம் எடை உள்ளது. இதனால் நேற்று குழந்தையை ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்தார்கள். இது தொடர்பாக குழந்தைக்கு சிகிச்சை அளித்த டாக்டர் ஜாங்கிட் கூறியதாவது:-
இந்திய துணை கண்டத்தில் இவ்வளவு குறைவான எடை கொண்ட குழந்தை உயிர் பிழைத்ததில்லை. மொகாலியில் 2012-ம் ஆண்டு ரஜினி என்ற குழந்தை 450 கிராம் எடையுடன் பிறந்தது. அந்த குழந்தை காப்பாற்றப்பட்டது. இதுதான் காப்பாற்றப்பட்ட குறைந்த எடை கொண்ட குழந்தையாக இருந்தது.
இப்போது 400 கிராம் குழந்தை காப்பாற்றப்பட்டு இருக்கிறது. தெற்கு ஆசியாவிலேயே இந்த குழந்தைதான் இவ்வளவு எடை குறைந்த நிலையில் இருந்தும் காப்பாற்றப்பட்டுள்ளது.
குழந்தைக்கு நோய் தொற்று ஏற்படாமல் பாதுகாப்பது தான் எங்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது. மிகுந்த போராட்டத்துக்கு பிறகு குழந்தையை காப்பாற்றி இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.