ஆசை வார்த்தை கூறி வாலிபர்களிடம் மோசடி! வெளிநாடுகளில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்த சுருதி!

திருமண ஆசை வார்த்தை கூறி வாலிபர்களிடம் மோசடி செய்த பணத்தில் வெளிநாடுகளில் சுருதி சொகுசு வாழ்க்கை வாழ்ந்தது போலீசாரின் விசாரணையில் அம்பலமாகி உள்ளது.
Capturegfgdggsds

திருமண ஆசை காட்டி என்ஜினீயர்கள் உள்ளிட்ட பணக்கார வாலிபர்களை மயக்கி கோடிக்கணக்கில் பண மோசடி செய்த கோவையை சேர்ந்த சுருதி (வயது 21) என்ற இளம்பெண்ணை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

இவரது மோசடிக்கு தாய் சித்ரா (47), தம்பி சுபாஷ் (19), சுருதியின் வளர்ப்பு தந்தை பிரசன்ன வெங்கடேஷ் (37) ஆகியோர் உடந்தையாக இருந்து உள்ளனர்.

அவர்களும் கைது செய்யப்பட்டு உள்ளது. இந்த நிலையில் அவர்கள் 4 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டனர்.

‘ஆடி போனால் ஆவணி’ என்ற படத்தில் சுருதி கதாநாயகியாக நடித்து உள்ளார். ஆனால் அந்த படம் இன்னும் வெளியாகவில்லை. சினிமாவில் ஜொலிக்க முடியாமல் போனதால் ஏமாற்றம் அடைந்த சுருதி தனது தாயுடன் சேர்ந்து பணக்கார வாலிபர்களை வலையில் வீழ்த்தி கோடிக்கணக்கான பணத்தை மோசடி செய்து ஆரம்பரமாக வாழ்ந்து உள்ளார்.

நட்சத்திரமாக ஜொலிக்க வேண்டிய சுருதி கைதியானது குறித்து போலீசார் கூறியதாவது:–

சுருதியின் சொந்த ஊர் கடலூர். இவரது தந்தை வியாபாரம் செய்து வந்தார். புதுச்சேரியில் உள்ள தனியார் சி.பி.எஸ்.இ. பள்ளியில் படித்த இவர் நுனி நாக்கில் ஆங்கிலம் பேசுவார்.

அவரது தந்தை திடீரென விபத்தில் இறந்து விட்டதால் வாழ்க்கை தலைகீழாக மாறியது. இதைத்தொடர்ந்து சுருதியின் தாயார் சித்ரா திருமண தகவல் மையம் தொடங்கினார்.

அப்போதுதான் திருமண புரோக்கரான பிரசன்ன வெங்கடேசின் அறிமுகம் கிடைத்தது. அவர் இணையதளத்தில் திருமண வரன் தேடி விண்ணப்பிக்கும் பணக்கார வாலிபர்கள், என்ஜினீயர்கள் குறித்து சித்ராவுக்கு தகவல் தெரிவித்தார்.

மேலும் அவர்களிடம் மோசடி செய்தால் போலீசில் புகார் கொடுக்க மாட்டார்கள், நாம் மாட்டி கொள்ள மாட்டோம் என கூறி அதற்கான திட்டத்தையும் வகுத்து கொடுத்து உள்ளார்.

இந்த திட்டத்தை சுருதி மூலம் நிறைவேற்ற சித்ரா முடிவு செய்தார். ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்ட சுருதி, இந்த திட்டத்துக்கு சம்பதித்ததுடன், தனது புகைப்படங்களை பணக்கார வாலிபர்களுக்கு அனுப்பினார்.

சுருதியின் அழகில் மயங்கி வாலிபர்கள் தொடர்பு கொண்டதும் அவர்களுடன் வாட்ஸ் அப், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் சுருதி நட்பை வளர்ப்பார். அப்போது தனது கவர்ச்சி படங்களை அவர்களுக்கு அனுப்பி வைத்து மயக்கிஉள்ளார்.

திருமண முடிவுக்கு வாலிபர்கள் வரும்போது, தனது தாய்க்கு மூளையில் கட்டி உள்ளது. ஆபரே‌ஷனுக்கு பணம் தேவைப்படுகிறது என கூறி பணம் கறப்பதை வாடிக்கையாக தொடங்கினார்.

வெளிநாட்டு டாக்டர்களிடம் தனது தாய்க்கு மருத்துவம் பார்க்க வேண்டும் என்று கூறி தனது வலையில் வீழ்ந்தவர்களிடம் கோடிக்கணக்கில் பணத்தை கறந்து உள்ளார்.

அந்த பணத்தில் குடும்பத்தோடு வெளி நாடுகளுக்கு சென்று அங்கு ஆடம்பர ஓட்டல்களில் தங்கியும், சுற்றுலா சென்றும் சொகுசு வாழ்க்கை வாழ்ந்தார்.

இவர்களிடம் ஏமாந்த பாலமுருகன் ஜெர்மனியில் என்ஜினீயராக வேலை பார்த்தார். அவர் சுருதியின் தாய் சித்ராவுக்கு மருத்துவம் பார்ப்பதற்காக குடும்பத்துடன் லண்டனுக்கு டிக்கெட் எடுத்து கொடுத்தார். அதன்படி கடந்த ஆண்டு சுருதி தனது குடும்பத்தினருடன் லண்டன் சென்று வந்தார்.

கடந்த 2011–ம் ஆண்டு முதல் இருந்தே இவர்கள் மோசடியில் ஈடுபட்டு உள்ளனர். சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வாலிபர்களிடம் பல கோடி ரூபாயை அவர்கள் மோசடி செய்துள்ளனர். இதுவரை 8 மோசடி வழக்குகள் இவர்கள் மீது பதிவாகி உள்ளது.

ஒவ்வொருவரிடம் பணத்தை கறந்ததும் அங்கிருந்து இடத்தை மாற்றி அடுத்த இடத்துக்கு சென்று விடுவார்கள். மேலும் ஒவ்வொருவரிடமும், ஒவ்வொரு பெயரில் பழகி வந்துள்ளனர்.

சுருதியும், அவரது தாயும் மேலும் பல பணக்கார வாலிபர்களை மோசடி செய்து இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இந்த மோசடிக்கு மேலும் பலர் உடந்தையாக இருக்கலாம் எனவும் போலீசார் கருதுகின்றனர்.

இதற்காக சுருதியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்து உள்ளனர். இதற்காக போலீசார் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்து அனுமதி பெறுவதற்கு தேவையான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையில் சுருதி கைது செய்யப்பட்டது குறித்து தகவல்கள் வெளியானதும் பல வாலிபர்கள் கோவை சைபர் கிரைம் போலீசாரை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்துள்ளனர். அவர்களை பற்றிய விவரங்களை போலீசார் தெரிவிக்க மறுத்து விட்டனர்.

இந்த நிலையில் கோவையில் வசித்து வந்த சுருதி வீட்டில் இருந்து விலை உயர்ந்த 14 செல்போன்கள், 30 பவுன் நகை, ஒரு கார், ரூ.4 லட்சம் மதிப்புள்ள மேக்–அப் செட் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இதுகுறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.