கொல்கத்தாவில் உள்ள ஹரிதேவ்பூர் பகுதியை சேர்ந்தவர் அமர்குமார்சன்யால் (வயது 82). துறைமுக ஊழியராக இருந்து ஓய்வு பெற்றவர். இவர் தனது மனைவி கசிராணி (70)யுடன் தனியாக வசித்து வந்தார்.
இவர்களது வீட்டுக்கு உறவினர் ஒருவர் எப்போதாவது வந்து செல்வார். மற்றபடி யாரும் வருவது இல்லை. கடந்த 4 நாட்களாக அவர்களது வீடு பூட்டியே கிடந்தது. வெளியில் யாருடைய நடமாட்டமும் இல்லை.
இவர்கள் வீட்டில் தினமும் செய்தி பத்திரிகை வாங்குவது வழக்கம். அந்த பத்திரிகைகள் வீட்டு முன்பு குவிந்து கிடந்தது. எனவே அக்கம் பக்கத்தினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்கள் வீட்டு கதவை தட்டி பார்த்தனர். திறக்கவில்லை.
இதுபற்றி போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றனர். அங்கு படுக்கையில் அமர்குமார்சன்யால் இறந்து கிடந்தார். அவர் அருகில் கசிராணி நின்று கொண்டிருந்தார்.
அவரிடம் போலீசார் கேட்டபோது எந்த பதிலும் சொல்லவில்லை. கணவர் இறந்த அதிர்ச்சியில் மனநிலை பாதிப்படைந்து அவர் செயல்படாமல் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அமர்குமார்சன்யால் உடலை கைப்பற்றி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். கசிராணி பாதுகாப்பு மையத்தில் சேர்க்கப்பட்டார்.