அமைச்சர் மகிந்த அமரவீர வானூர்தி மூலம் பலாலி வானூர்தி தளம் நோக்கி பயணித்துக்கொண்டிருந்தபோது, பாதை மாறி பயணித்த விமானியின் வானூர்தி செலுத்துவதற்கான அனுமதிப்பத்திரம் தடை செய்யப்பட்டுள்ளது.
சிவில் வானூர்தி சேவை அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் எம் எம் சி நிமல்சிறி தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பில் விசேட விசாரணையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
தைப்பொங்கல் உற்சவம் ஒன்றில் கலந்துகொள்வதற்காக அமைச்சர் மகிந்த அமரவீர நேற்றைய தினம் தனியார் உலங்கு வானுர்தி ஒன்றின் மூலம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தார்.
எனினும் வானூர்தியின் பாதை மாறி தலைமன்னார் நோக்கி பயணித்துள்ளது.
விமானி பலாலி வானூர்தித் தளத்திற்கான பாதை சரியாக தெரியாததின் காரணமாக, பாதை மாறியதாக அமைச்சரின் பாதுகாப்பு அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து தலைமை பாதுகாப்பு அதிகாரியின் கையடக்க தொலைபேசியின் வரைபட உதவியுடன் பலாலி வானூர்தித் தளத்திற்கு பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பலாலி வானூர்தித் தளத்திற்கு செல்ல ஒரு மணித்தியாலம் மாத்திரமே தேவைப்படும்.
எனினும் நேற்றைய பயணத்திற்கு இரண்டு மணித்தியாலங்கள் பிடித்துள்ளன.
அத்துடன் வானுர்தி தரையிறக்கப்படும்போது வானூர்தியின் எரிபொருளும் தீர்ந்திருந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதனை தொடர்ந்து இலங்கை வான்படையின் உதவியுடன் வானூர்தி தரையிறக்கப்பட்டுள்ளது.