மெரினாவில் அரங்கேறிய நிகழ்வு : தட்டிக்கேட்ட பெண் காவலருக்கே இந்த நிலையா?!

சென்னை மெரினா சர்வீஸ் ரோட்டில் உள்ள தடுப்புகளை சொகுசு காரில் வந்தவர்கள் சிலர் இடித்து தள்ளினர்.

large_lady-police-5660

இதனைத் தட்டிக் கேட்ட பெண் காவலரை அந்த காரில் இருந்தவர்கள் தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டி உள்ளனர். இதனையடுத்து புகாரின்பேரில் அவர்களை காவல்துறையினர் தற்போது வலைவீசி தேடி வருகின்றனர்.

சென்னை அண்ணாசாலை காவல் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வரும் சித்ரா என்ற பெண் காவலர் நேற்று முன்தினம் இரவு விவேகானந்தர் இல்லம் எதிரே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.

அவர் பணியில் இருந்த சமயத்தில் அதாவது இரவு 10.30 மணியளவில் மெரினா சர்வீஸ் சாலையிலிருந்து காமராஜர் சாலையை நோக்கி சொகுசு கார் ஒன்று வேகமாக வந்தது.

அப்போது, அந்த சொகுசு காரானது சர்வீஸ் சாலையின் முடிவில் அமைக்கப்பட்டிருந்த தடுப்புகளை இடித்து தள்ளிவிட்டு சர்வீஸ் ரோட்டில் இருந்து காமராஜர் சாலைக்கு வந்தது. இதனை பார்த்த பெண் காவலர் சித்ரா, உடனே அந்த காரை தடுத்து நிறுத்தி அவர்களை கண்டித்துள்ளார்.

இதனால் பெண் காவலர் சித்ராவுக்கும், அந்த காரில் இருந்த நான்கு பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

கடும் வாக்குவாதத்தின் போது அந்த சொகுசு காரில் இருந்த 4 பேரும், காவலர் சித்ராவை தகாத வார்த்தைகளில் பேசியதோடு மட்டுமல்லாமல் மிரட்டியதாக கூறப்படுகிறது.

இத்தகைய சம்பவத்தினால் பெரிதும் மனமுடைந்த ஏட்டு சித்ரா, அந்த நான்கு பேரின் மீது மெரினா காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்த புகாரின் அடிப்படையில் அவர்களின் மீது வழக்குப்பதிவு செய்து, பெண் காவலர் சித்ரா கூறிய காரின் எண்ணை வைத்து அந்த 4 பேரை தற்போது தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.