அரசாங்கம் மீது கேப்பாபுலவு மக்கள் குற்றச்சாட்டு!!

யுத்ததில் பாதிக்கப்பட்ட தமக்கு கொடுக்க வேண்டிய நிதியை ஸ்ரீலங்கா அரசாங்கம் இராணுவத்திற்கு வழங்கியுள்ளதாக கேப்பாபுலவு நில மீட்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். அரசியல்வாதிகள் தம்மை கைவிட்டது போல் பொது அமைப்புக்களும் தம்மை கவனிப்பாரற்று விட்டுள்ளதாகவும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

தமது நிதியை அரசாங்கம் இராணுவத்திற்கு வழங்கியதாக கேப்பாபுலவு மக்கள் குற்றச்சாட்டு

கேப்பாபுலவு மக்களுக்கு சொந்தமான காணிகளில் இராணுவத்தினர் அபகரித்துள்ள காணிகளில் இருந்து  133.4 ஏக்கர் காணிகள் கடந்த  28 ஆம் திகதி  விடுவிக்கப்பட்டது. இதன்போது கேப்பாபுலவு பகுதியில்  111.5 ஏக்கர்  காணிகளும் சீனியாமோட்டை பகுதியில் மான 21.84 ஏக்கர் காணிகளுமாக மொத்தமாக  133.34 ஏக்கர்  காணிகள் விடுவிக்கப்பட்டன.

கேப்பாபுலவு மக்களுக்கு சொந்தமான காணியில் ஒரு பகுதி விடுவிக்கப்பட்டநிலையில் 104 குடும்பங்களுக்கு சொந்தமான 181 ஏக்கர் காணிகளை விடுவிக்கும் வரை தமது போராட்டம் தொடருமென தெரிவித்து  இன்று செவ்வாய்க்கிழமை  322 ஆவது நாளாகவும்  தொடர்ந்து போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

இந் நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமக்கு எதுவித உதவியையும் ஸ்ரீலங்கா அரசாங்கம் செய்யவில்லை என அவர்கள் குற்றம் சுமத்துகின்றனர். இதேவேளை கேப்பாபுலவில் ஒரு பகுதியை மட்டுமே விடுவித்து தமக்கு ஸ்ரீலங்கா அரசாங்கம் வஞ்சகம் செய்துவிட்டதாகவும் அவர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.