உலக புகழ்பெற்ற அலங்காநல்லூரில் வெகுவிமரிசையாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடைந்தது. இதில் சிறந்த ஜல்லிக்கட்டு காளைகளாக 9 காளைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
மதுரை அவனியாபுரம், பாலமேடு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டி முடிவடைந்ததை அடுத்து, உலக புகழ்பெற்ற அலங்காநல்லூரில் இன்று காலை 8 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டி துவங்கியது. போட்டியினை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வமும் கொடியசைத்து ஆரம்பித்து வைத்தனர். வெகுவிமரிசையாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி தற்போது நிறைவடைந்துள்ளது. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 571 காளைகளும் 697 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர்.
இதனையடுத்து பேசிய மதுரை ஆட்சியர் வீரராகவராவ், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு பிரச்னையின்றி விதிப்படி நடந்ததற்கு அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். போட்டியில், சிறந்த ஜல்லிக்கட்டு காளைகளாக 9 காளைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. ஒரே சுற்றில் 8 காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர் அஜய்க்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ஆட்சியர் வீரராகவராவ் ஆகியோர், காரை பரிசாக வழங்கினர். ஒரே சுற்றில் 6 காளைகளை பிடித்தவருக்கு 2ஆம் பரிசும், 3ஆம் பரிசை காவலர் ஒருவரும் பெற்றுள்ளார்.