தமிழீழ விடுதலை புலிகளின் கட்டளைத் தளபதி கேணல் கிட்டு உட்பட இந்திய கடலில் வீரச்சாவை தழுவிய வீரர்களின் சிந்தனைகள் மற்றும் கொள்கையில் தொடர்ந்தும் பயணிப்போம் என ஜனநாயக போராளிகள் கட்சி தெரிவித்துள்ளது.
இந்திய- இலங்கை கூட்டு சதியால் சர்வதேச கடலில் கேணல் கிட்டு உயிர்தியாகம் செய்ததாக ஜனநாயக போராளிகள் கட்சியின் பொதுச் செயலாளர் இராசையா கதிர் கூறியுள்ளார்.
தமிழீழ விடுதலை புலிகளின் முக்கிய தளபதிகளில் ஒருவரான சதாசிவம் கிருஸ்ணகுமார் எனும் இயற்பெயர் கொண்ட கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களின் 25 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது.
ஜனநாயக போராளிகள் கட்சியினரின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு கைவேலிப்பகுதியில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இந்த நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன.
ஜனநாயக போராளிகள் கட்சியின் மகளீர் பிரிவினை சேர்ந்த ராதா தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் கேணல் கிட்டு உள்ளிட்ட பத்து மாவீரர்களின் திருவுருவப்படத்திற்கு சுடர் ஏற்றி மலர்மாலை அணிவித்து வணக்கம் செலுத்தப்பட்டது.
இந்த நினைவேந்தல் நிகழ்வில் கருத்து தெரிவித்த ஜனநாயக போராளிகள் கட்சியின் செயலாளர் கதிர், முன்னாள் போராளி கேணல் கிட்டு இறந்த பின்பும் அவரது வார்த்தைகள் விடுதலை புலிகள் மீண்டும் எழுச்சி பெற உதவியதாக தெரிவித்தார்.
மாவீரர் குடும்பத்தைச் சேர்ந்த கனகசுந்தரம் ஜனமந்தும், இந்த நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டதுடன், யுத்தத்தின் போது அங்கவீனமாக்கப்பட்ட முன்னாள் போராளிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் பாதுகாக்கப்பட வேண்டும் என இதன்போது அவர் வலியுறுத்தினார்.