பிழைப்பிற்காக பெண்களை வர்ணித்து பாட்டு எழுதும் வைரமுத்துவுக்கு, ஆண்டாள் குறித்து அவதுாறு பேச எந்த தகுதியும் இல்லை. அவர், மன்னிப்பு கேட்காவிட்டால், மெரினாவில் மீண்டும் மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும்என, இந்து மக்கள் கூட்டத்தில் எச்சரிக்கை விடப்பட்டது.
அண்மையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில், கவிஞர் வைரமுத்து, ஆண்டாள் குறித்து அவதுாறாக பேசியதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து அவருக்கு எதிராக தமிழகம் முழுவதும், போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இயக்குநர் பாரதிராஜா, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட பலர் வைரமுத்துவுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டனர். மேலும் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி ஆகியோரும் வைரமுத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.
இந்நிலையில் வைரமுத்துவுக்கு எதிராக, ‘வாழ்க இந்து நீதி தர்மம்’ எனும் தலைப்பில் ஜீயர்கள், மடாதிபதிகள், சிவாச்சாரியார்கள், இந்து அமைப்புகள், ஆன்மீக வாதிகள் உள்ளிட்டோர் பங்கேற்ற கூட்டம், சென்னை, அரசு விருந்தினர் மாளிகை அருகே நடைபெற்றது.
ஆண்டாள் குறித்து அவதுாறு பேச யாருக்கும் அருகதை கிடையாது. இந்து மதம் சகிப்புத்தன்மை நிறைந்தது. இந்துக்கள் சட்டத்தை மதிப்பவர்கள். இந்துக்கள் இணையும் நேரம் வந்துவிட்டது. எது எதற்கோ குரல் கொடுக்கும் மாதர் சங்கங்கள், பெண்மையை இழிவாக பேசிய பேச்சுக்கு குரல் கொடுக்காதது ஏன்? என போராட்டத்தில் கேள்வி எழுப்பினர்.
இவ்வுலகில், பெண்களின் பெயரில் தான் நதி, ஆறுகள் ஓடுகின்றன. பெண் குலத்தின் தெய்வம் ஆண்டாள் நாச்சியார் குறித்து அவதுாறு பேசிய வைரமுத்து, ராமனை கூட அவதுாறாக பேசியுள்ளார். ஆன்மிகம் தேவையில்லை என்போர், அதைப் பற்றி ஏன் பேச வேண்டும் என்றும் அவர்கள் முழக்கமிட்டனர்.
பிழைப்பிற்காக பெண்களை வர்ணித்து பாட்டு எழுதும் வைரமுத்துவுக்கு, தெய்வப்புலவர் ஆண்டாள் நாச்சியார் குறித்து அவதுாறு பேச எந்த தகுதியும் கிடையாது… இப்போது உள்ளவர்கள் பிழைப்பிற்காகவும், பதவிக்காகவும் தமிழை வளர்ப்பதாக நடிக்கின்றனர். வைரமுத்துவின் அவதுாறு பேச்சு, இந்துக்களின் எழுச்சிக்கு வித்திட்டு உள்ளது என தெரிவித்தனர்.
வைரமுத்து தன் தவறை உணர்ந்து, நாளை மாலைக்குள் ஸ்ரீவில்லிபுத்துாரில் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால், மெரினாவில் மீண்டும் போராட்டம் வெடிக்கும் என்று போராட்டம் நடத்தியவர்கள் தெரிவித்தனர்.