உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகளில் இன, மதங்களைப் பயன்படுத்தி பிரசாரம் செய்யும் பகுதிகளில் வடமாகாணம் முன்னிலை வகிப்பதாக ஸ்ரீலங்காவின் முன்னணி தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்களில் ஒன்றான பெப்ரல் தகவல் வெளியிட்டுள்ளது.
இம்முறை தேர்தலில் பாதாள உலகக் குழுவுடன் தொடர்புடைய மற்றும் படுகொலைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்களும் போட்டியிடுகின்ற நிலையில் வாக்காளர்கள் அவதானமாக தெரிவுசெய்ய வேண்டும் என்றும் அந்த அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.
மார்ச் 12 இயக்கம் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பு கொழும்பில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஸ்ரீலங்காவின் முன்னணி தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்களில் ஒன்றான பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி இந்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு தேர்தல் பிரசார நடவடிக்கைகளினால் கிடைத்திருக்கும் முறைப்பாடுகள் குறித்து தெளிவுபடுத்தினார்.
“அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இன்று இன, மதங்களையும் தேர்தலில் வாக்குகளைப் பெற்றுக்கொள்ளவும், பிரசார நடவடிக்கைகளுக்காகவும் பயன்படுத்துவதை அவதானிக்க முடிகின்றது. விசேடமாக வடக்கில் யாழ்ப்பாணத்தில் மதத்தை அடிப்படையாக முன்னிலைப்படுத்தி தேர்தல் பிரசார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இது மிகவும் கவலைக்குரிய விடயமாகும். இப்படிப்பட்ட சம்பவங்கள் எல்லா இடங்களிலும் இடம்பெறுகின்றது என்று நான் கூறவில்லை.
இன,மத, குலங்களையும் தேர்தலுக்காக பயன்படுத்துகின்றனர். இப்படிப்பட்ட விடயங்களைப் பயன்படுத்தி வாக்குகளைப் பெறுவோர் நாட்டிற்காகவும், மக்களுக்காகவும் சேவை செய்வார்களா? இதுகுறித்து மக்கள் தத்தமது மனசாட்சியைத் தொட்டு வினவிக்கொள்ள வேண்டும். கொழும்பு மாவட்டத்தில் இப்படிப்பட்ட 9 பேர் தொடர்பாகவும், கேகாலை மாவட்டத்தில் 7 பேர், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் 6 பேர், இரத்தினபுரி மாவட்டத்தில் ஐவர் தொடர்பிலும் எமக்கு முறைப்பாடு கிடைத்திருக்கிறது.
தங்களது தொகுதியிலும் இப்படிப்பட்ட நபர்கள் இருக்கிறார்களா என்பதை வாக்காளர்கள் அவதானித்து அறிந்துகொள்ள வேண்டும். கொலைக் குற்றங்கள் எதிர்கொண்டுள்ள அறுவர், பாதாள உலகைச் சேர்ந்த ஐவர் என எமக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது. இப்படிப்பட்டவர்களின் நிலையை அறிந்தும் ஏன் சில தொகுதி அமைப்பாளர்களும், கட்சித் தலைவர்களும் தேர்தலில் களமிறங்குவதற்கான சந்தர்ப்பத்தை வழங்கியிருக்கிறார்கள் எனத் தெரியவில்லை” என்றார்.