மதுபான விவகாரம் குறித்து நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் கொண்டுவரப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் குறித்து அமைச்சரவையில் சலசலப்பு ஏற்பட்டதையடுத்து அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்தக் கூட்டத்தில் இருந்து வெளிநடப்புச் செய்தார்.
மேற்கு நாடுகள் பரிந்துரைக்கும் அனைத்தையும் நாட்டில் நடைமுறைபடுத்த முயற்சிக்க வேண்டாம் என ஜனாதிபதி கடும் தொனியில் வலியுறுத்தியுள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்தக் கூட்டம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் சற்று முன் நடைபெற்றது.
கூட்டத்தின் ஆரம்பத்திலேயே பேசிய ஜனாதிபதி, பிணைமுறி விவகாரத்தை ஆராய்வதற்காக ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமித்ததை ஐ.தே.க. உறுப்பினர்கள் சிலர் கடுமையாக விமர்சிப்பதாகவும் ஐ.தே.க.வைப் பிளவுபடுத்தும் முயற்சிகளில் ஜனாதிபதி இறங்கியிருப்பதாக போலிப் பிரசாரம் செய்வதாகவும் குறிப்பிட்டார்.
‘இதுபோன்ற விமர்சனங்கள் தொடர்ச்சியாக நீடித்தால், ஐ.தே.க. தனியே அரசைப் பொறுப்பேற்று நடத்திக் காட்டட்டும்’ என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
தனது பதவிக்காலம் குறித்து நீதிமன்ற ஆலோசனை பெற்றது ஏன் என்றதையும் அமைச்சரவையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெளிவுபடுத்தியுள்ளார்.
கடந்த வாரம் இடம்பெற்ற முக்கிய இரண்டு நிகழ்வுகளான ஜனாதிபதி பதவிக்காலம் மற்றும் நிதி அமைச்சர் கொண்டுவந்த மதுபான நிலையங்களின் நேர மாற்றம், பெண்களை வேலைக்கு அமர்த்தல் ஆகிய விவகாரங்கள் குறித்து நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் அதிக முக்கியத்துவம் கொடுத்து விவாதிக்கப்பட்டுள்ளது.
இதில் ஜனாதிபதியின் பதவிக்காலம் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏன் நிதிமன்ற ஆலோசனையினை பெற்றார் என்பதைகான காரணங்களை அமைச்சரவையில் தெளிவுபடுத்தியுள்ளார்.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தான் அரச நிருவாகிகள், தனது செயலாளர் மற்றும் சட்டத்தரணிகள், இலஞ்ச ஊழல் தடுப்பு விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் ஆகியோருடன் தனது அடுத்த கட்ட வேலைத்திட்ட நகர்வுகள் குறித்து கலந்துரையாடியதாகவும் அதன்போது அடுத்த ஆண்டுகளுக்கான வேலைத்திட்டங்களை ஒழுங்கமைக்கும் திட்டம் குறித்து ஆராயப்பட்ட போது விவாதத்தில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டதையும் ஜனாதிபதி அமைச்சரவையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில் 19 ஆம் திருத்த சட்டம் கொண்டுவரப்பட்டு ஜனாதிபதியின் பதவிக்காலம் குறைப்பு அங்கீகரிக்கப்பட்டிருக்கும் நிலையில் அது தற்போதைய ஜனாதிபதி காலத்துடன் தொடர்புபடாது எனவும், ஆகவே வேலைத்திட்டங்களை ஒழுங்கமைக்கும் போது 2020 ஆம் ஆண்டு இறுதி வரைக்கும் அதனை ஒழுங்கமைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் சிலர் அதனை 2019 ஆம் ஆண்டு இறுதி வரையில் ஒழுங்கமைத்தால் தான் பொருத்தமாக இருக்கும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில் தான் கலந்துரையாடலை நிறுத்திவிட்டு சட்டமா அதிபரை தொடர்புகொண்டு என்னை சந்திக்க வருமாறு தெரிவித்தேன். அவருடன் நான் தனிப்பட்ட ரீதியில் இந்த விடயம் குறித்து குறித்து தனக்கு ஆலோசனை வழங்குமாறு குறிப்பிட்டேன்.
ஒரு சில தினங்களில் தான் பதில் கூறுவதாக கூறிய சட்டமா அதிபர் ஆராய்ந்ததன் பின்னர் என்னால் 6 ஆண்டுகளுக்கு ஜனாதிபதியாக செயற்பட முடியும் என தெரித்தார்.
எனினும் இந்த விடயம் குறித்து உறுதியாக ஒரு தீர்மானம் பெறவேண்டும் என்றால் நாம் நீதிமன்றத்தை நாட வேண்டும் என சட்டமா அதிபர் எனக்கு ஆலோசனை வழங்கினார்.
இந்நிலையிலேயே நான் சட்டமா அதிபர் திணைக்களத்தின் உதவியுடன் உயர் நீதிமன்றத்தை நாடி ஆலோசனை பெற்றுக்கொண்டேன். மற்ற எந்த காரணிகளும் இதன் பின்னணியில் இல்லை.
எனது அடுத்த கட்ட வேலைத்திட்ட ஒழுங்குபடுத்தல் எந்த காலம் வரையில் செய்ய முடியும் என்ற அடிப்படையில் நான் இதனை செய்தேன் என ஜனாதிபதி அமைச்சரவையில் விளக்கமளித்துள்ளார்.
மேலும் கடந்த வாரம் நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் கொண்டுவரப்பட்ட மதுபான சாலைகளின் நேர அட்டவணையில் முன்னெடுக்கும் மாற்றங்கள் மற்றும் பெண்கள் மதுபானசாலைகளில் பணிபுரிவது என்ற திருத்தப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் குறித்தும் ஜனாதிபதி நிதி அமைச்சர் மங்கள சமரவீரவிடம் வினவியுள்ளார்.
அமைச்சராக இவ்வாறான முக்கியமான திட்டங்களை கொண்டுவரும் நிலையில் அதுகுறித்து தனக்கு அறியத்தராதது ஏன் எனவும் கேள்வி எழுப்பிய ஜனாதிபதி, இலங்கை நாடானது கலாசார பண்பாட்டு அரசியல் பின்னணியில் இயங்கிவரும் நிலையில் மேற்கு நாடுகள் திணிக்கும் சகல கொள்கையையும் நாம் ஏற்றுகொள்ள வேண்டிய அவசியம் இல்லை, நான் அரசாங்கத்தை நடத்துவது நாட்டினை வீணாக்கும் நோக்கத்தில் அல்ல.
ஆகவே உடனடியாக இந்த திட்டங்களை நிறுத்த வேண்டும் என கடுமையான தொனியில் வலியுறுத்தியுள்ளதுடன் இந்த விவகாரம் சற்று சூடு பறக்கும் விவாதங்களாகவும் மாற்றம் பெற்றுள்ளது.
இந்நிலையில் சமத்துவம் என்ற அடிப்படையில் தான் அவ்வாறான வேலைத்திட்டங்களை முன்னெடுத்ததாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
எனினும் நிதி அமைச்சர் மங்கள சமரவீர வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலை உடனடியாக ரத்து செய்யக் கோரிய ஜனாதிபதி சில காரசார விவாதங்களை அடுத்து ஆசனத்தை விட்டு வெளியேறியதாக தெரியவருகின்றது.
பின்னர், பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அமைச்சர்கள் சிலர் ஒன்று சேர்ந்து ஜனாதிபதியைச் சந்தித்து அவரைச் சமாதானப்படுத்தி மீண்டும் அமைச்சரவைக் கூட்டத்துக்கு அழைத்து வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.