பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஏன் வளைந்து வளைந்து நடனமாடினார் என்பது குறித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச விளக்கம் அளித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரசார கூட்டம் நேற்று பெல்மதுளை பிரதேசத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில்.
இந்த அரசாங்கம் பயணிக்கும் பாதை மிகவும் மோசமானது, மக்களையும் கலாசாரத்தையும் அழிக்கும் நடவடிக்கைகளையே படிப்படியாக முன்னெடுத்து வருகின்றது.
இவர்களை விரைவில் வெளியேற்ற வேண்டும். அதில் எம்மத்தியில் எந்த மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை. இவர்கள் ஆட்சியை கைப்பற்ற பல்வேறு பொய்களை கூறியும் கட்டுக் கதைகளை உருவாக்கியும் கூறினர். மக்களை ஏமாற்றியே இவர்கள் ஆட்சியை கைப்பற்றினர்.
இதன் பின்னணியில் பாரிய சூழ்ச்சி நிகழ்ந்துள்ளது. பண்டாரநாயக்கவின் கொள்கையும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கொள்கையும் இன்று ஐக்கிய தேசியக் கட்சிக்காக காவுகொடுக்கப்பட்டுவிட்டன.
நாம் இத்தனை காலமாக கட்டிக்காத்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தூய்மையான கொள்கை இன்று முழுமையாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினாலேயே அழிக்கப்பட்டு வருகின்றது.
கட்சியில் இருந்து வெளியேறிய சிலர் பண்டாரநாயக்கவின் கொள்கையை ரணில் விக்கிரமசிங்கவின் காலடியில் வைத்து பூஜை செய்ய தொடங்கினர். அன்றுதான் பண்டாரநாயக்க இரண்டாவது தடவையாகும் கொலைசெய்யப்பட்டர்.
இந்த அரசாங்கம் வந்தவுடன் மத்திய வங்கியில் கொள்ளையடிக்கப்பட்டது. மக்களின் பணம் அவர்களின் உழைப்பு ஒருசிலரால் அபகரிக்கப்பட்டது.
இந்த நாட்டில் இடம்பெற்ற மிகப்பெரிய ஊழல் இதுவாகும். இந்நிலையில் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை வெளியிடப்பட்டது. அதன் பின்னர் என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியாது.
ரணில் விக்கிரமசிங்க நாட்டு மக்களை ஏமாற்றிவிட்டார். அறிக்கை வர முதல்நாளே நடனமாடினார். வளைந்து நெளிந்து நடனமாடினார். மிகவும் அழகாக அவரது நடனம் அமைந்தது.
ஆனால் இந்த நடனத்தின் பின்னணி என்ன. அவர் ஆடிய நடனம் குறித்து மட்டுமே நாங்கள் கதைத்துக்கொண்டு விமர்சித்துக்கொண்டு உள்ளோம். ஆனால் மத்திய வங்கி களவினை மூடி மறைத்து மக்களை திசைதிருப்பவே ரணில் விக்கிரமசிங்க அவ்வாறு நடனமாடினார்.
இவர்கள் அனைவருமே மக்களை ஏமாற்றி மக்களின் பணத்தில் கொள்ளையடித்து வாழ்ந்து வருகின்றனர். இந்த நாட்டுக்கு சிறிதும் பொருந்தாத ஒரு அரசியல் காலசாரம் இன்று உருவாக்கப்பட்டு வருகின்றது.
ஒரு சிலர் தாம் தூய்மையான நாட்டினை உருவாக்கி வருவதாக கதை கூறி வருகின்றனர். ஐக்கிய தேசியக் கட்சியோ மற்றுபுரம் மக்களின் சொத்துக்களை கொளையடித்து மத்திய வங்கியை தூய்மையாக தூசுபடாது சுத்தம்செய்து வைத்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.