துருக்கியில் எதிர்பாராத விதமாக, விமானம் ஒன்று தரையிறங்குகையில் ஓடு பாதையை விட்டு விலகி, அருகில் இருந்த கருங்கடலை நோக்கிய பள்ளத்தில் பாய்ந்துள்ளது.
இதில் அதிஷ்டவசமாக எவருக்கும் உயிராபத்து ஏற்படவில்லை என, அந்நாட்டு அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.
ஓடுபாதையைவிட்டு விலகி கடுங்கடல் நோக்கி பாய்ந்த விமானம்!
இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
துருக்கி அங்காராவில் இருந்து, டிராப்சான் நகரை நோக்கி கடந்த சனிக்கிழமை(13.01.2018) பிகாசஸ் விமான நிறுவனத்தின் விமானம் பயணித்துள்ளது.
இந்த விமானத்தில் 162 பயணிகளும், 2 விமானிகளும், 4 விமான சிப்பந்திகளும் பயணித்துள்ளனர். இந்த நிலையில், டிராப்சன் விமான நிலையத்தில் சனிக்கிழமை இரவு குறித்த விமானம் தரையிறங்கியபோது, எதிர்பாராத விதமாக ஓடு பாதையில் இருந்து விலகி அருகில் இருந்த பள்ளத்தில் பாய்ந்துள்ளது.
மேற்படி விமானம், பள்ளத்தில் கீழ் நோக்கி பாய்ந்தது கருங்கடலில் பாய்வது போன்ற புகைப்படங்கள் அந்நாட்டு இணைய ஊடகங்களில் வெளியாகியுள்ளது.
எனினும், அதிஷ்டவசமாக பயணிகள், விமான ஊழியர்கள் உட்பட விமானத்தில் பயணம் செய்த எவருக்கும் உயிராபத்து இல்லாமல் காயங்களுடன் தப்பியதாக, நேற்று ஞாயிற்றுக்கிழமை அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, விமான நிலையம் நேற்று மூடப்பட்டதுடன், விமானம் ஓடுபாதையில் இருந்து விலகியதற்கான காரணம் குறித்து விசாரணை இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.