சென்னை: ஜல்லிக்கட்டு போராட்டம் நடைபெற்று ஓராண்டு நிறைவடைவதை ஒட்டி, சென்னை மெரினா கடற்கரையில் போலீஸ் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து, சென்னை மெரினா கடற்கரையில் கடந்த ஆண்டு ஜனவரி 18ம் தேதி இளைஞர் புரட்சி வெடித்தது. பெரும் அறவழி போராட்டத்திற்கு பணிந்த மத்திய, மாநில அரசுகள், ஜல்லிக்கட்டு நடைபெற வசதியாக சட்டத் திருத்தம் கொண்டுவந்தன. இதையடுத்து இந்த வருடம் பாலமேடு, அவனியாபுரம், அலங்காநல்லூர் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும், ஜல்லிக்கட்டு விமரிசையாக நடைபெற்றது.
வெற்றிகரம்
ஜல்லிக்கட்டு மட்டுமின்றி, ரேக்ளா பந்தையம், மஞ்சுவிரட்டு போன்ற மாடு சார்ந்த பல போட்டிகள் வெற்றிகரமாக நடைபெற்றன. இதனால், இந்த ஆண்டு பொங்கல் களை கட்டியது. நேற்று நடைபெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை முதல்வரும், துணை முதல்வரும் துவக்கி வைத்து நடத்தி கொடுத்தனர்.
கடந்த ஆண்டு நிலை
கடந்த ஆண்டு, இதே காலகட்டத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை என்பதால் தமிழகம் முழுக்க கொந்தளிப்பான சூழல் நிலவி வந்தது. போராடிய மாணவர்கள் தடியடிக்கு உள்ளாக்கப்பட்டனர்.
வெற்றி தினம்
இந்த நிலையில், மெரினா புரட்சி வெடித்து ஓராண்டு நிறைவடைகிறது. இந்த நிகழ்வு நடைபெற்று ஓராண்டு ஆக உள்ளதால், இளைஞர்கள் அதை வெற்றிதினமாக கொண்டாடுவார்கள் என்று தகவல் பரவியதால் காலை முதல், மெரினா பீச்சில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
போலீசார் குவிப்பு
போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு 20 ரோந்து வாகனங்களில் கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்களை திரளாக செல்ல விடாமல் போலீசார் தடுத்து வருகிறார்கள். இதனால் பொதுமக்கள், காதலர்கள் அவதிப்படுகிறார்கள்.