கரூர் மாவட்டத்தில் காவல்துறையின் தடையை மீறி சேவல்கட்டு என்கிற சேவல் சண்டை நடத்தியதாக ஐந்து சண்டை சேவல்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி ஒன்றியத்தில் இருக்கிறது கிறிக்காரன்பட்டி. மாடுகளை வைத்து ஜல்லிக்கட்டு நடத்துவதுபோல் சேவல்களை வைத்து இங்கு பாரம்பர்யமாகச் சேவல்கட்டு நடத்தி வருவது வழக்கம்.
ஆனால், சேவல் சண்டையைப் பணம் வைத்து விளையாடுவது, எதிரி சேவல்களை வீழ்த்த சேவல்களின் கால்களில் விஷக்கத்தியை வைத்து கட்டிவிட்டு சண்டை போட வைப்பது, சேவல்களின் வாயில் சரக்கை ஊத்துவது என்று சேவல் சண்டையைச் சர்ச்சைக்குரிய வகையில் நடத்துவதாக காவல்துறை இரண்டு வருடங்களுக்கு முன்பு சேவல்கட்டு நடத்த தடை போட்டது. அந்தத் தடையை மீறிதான் குறிக்காரன்பட்டியில் சேவல்கட்டை சிலர் நடத்த, பறந்து வந்த அரவக்குறிச்சி போலீஸ், அங்கு விளையாட வைத்திருந்த ஐந்து சேவல்களின் கால்களைக் கட்டி கைதுசெய்து கொண்டுபோய், லாக்கப்பில் அடைத்திருக்கிறது.
இதுகுறித்து நம்மிடம் பேசிய அந்தப் பகுதியைச் சேர்ந்த சிலர், “காவல்துறை சொல்வதுபோல், எந்தச் சூதாட்டமும் நடத்தலை. சேவல்களை வைத்து சேவல்கட்டுதான் நடத்துகிறோம்.
ஜல்லிக்கட்டு நடத்துவது எப்படி நமது பாரம்பர்யமோ அப்படிதான் இந்தச் சேவல்கட்டும் நமது பாரம்பர்யம். ஜல்லிக்கட்டில் மாடு பிடிப்பவர்களுக்கு உயிர்போகும் ஆபத்து இருக்கு. ஆனால், சேவல்கட்டில் அப்படி எந்த ஆபத்தும் இல்லை.
ஆனால், வேணும்ன்னே காவல்துறை சேவல்கட்டுக்குத் தடை போட்டிருக்கு. நாங்க இதற்காகவே, வளர்த்த சேவல்களையும் கைது பண்ணி தூக்கிட்டுப் போயிட்டாங்க. சேவல்கட்டு மீதான தடையை உடனே நீக்கணும். அதேபோல், எங்ககிட்ட இருந்து பறித்த சேவல்களையும் காவல்துறை திருப்பித் தரணும்” என்றார்கள்.