மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணைமுறி மோசடி தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கைக்கு அமைய சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சட்டமா அதிபர் மற்றும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஆகியோருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
எல்பிட்டிய பகுதியில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்ட ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்படி, ஆணைக்குழுவின் அறிக்கைக்கு அமைவாக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு இன்று உத்தரவு பிறப்பித்துள்ளதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் இந்த அறிவிப்பை தொடர்ந்து கொழும்பு அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கியில் 2015ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் தொடக்கம் 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற பிணைமுறி விநியோகத்தின் போது மோசடிகள் இடம்பெற்றதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்திருந்தன.
இதனையடுத்து உயர்நீதிமன்ற நீதியரசர் கே.டி.சித்திரசிறி, உயர்நீதிமன்ற நீதியரசர் ஜனாதிபதி சட்டத்தரணி பிரசன்ன ஜயவர்தன மற்றும் பிரதி கணக்காய்வாளர் நாயகம் வி.கந்தசுவாமி ஆகியோர் அடங்கிய ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு ஏற்படுத்தப்பட்டது.
2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27ஆம் திகதி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.
மத்திய வங்கியின் தற்போதைய ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி, முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரன், பிரதமர் ரணில் விக்ரமசிங்க, முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, அமைச்சர்களான கபீர் ஹாசிம், மலிக் சமரவிக்ரம உள்ளிட்டவர்கள் ஆணைக்குழுவில் முன்னிலையாகி சாட்சியமளித்திருந்தனர்.
1400 பக்கங்களை கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 30ஆம் திகதி ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.
குறித்த விசாரணை அறிக்கை தொடர்பில் கடந்த 3ஆம் திகதி ஜனாதிபதி விசேட அறிவிப்பொன்றையும் விடுத்திருந்தார். இதன் போது பிணைமுறி மோசடியுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.
இந்நிலையிலேயே, பிணைமுறி மோசடி குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கைக்கு அமைய சட்டநடவடிக்கை எடுப்பதற்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாக ஜனாதிபதி இன்று கூறியுள்ளார்.
பிணைமுறி மோசடியுடன், அரசியல் வாதிகள் உள்ளிட்ட பலருக்கும் தொடர்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், ஜனாதிபதியின் இந்த உத்தரவினால் கொழும்பு அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாக கொழும்பு அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.