எகிப்து நாட்டில் உயர்குடியில் பிறந்தவர்கள் இறந்தால், அவர்களின் உடல்கள் பதப்படுத்தப்பட்டு அடக்கம் செய்யப்படுவது வழக்கம். இவை ‘மம்மி’ என அழைக்கப்படுகிறது. எகிப்தில் கண்டுபிடிக்கப்பட்ட பல மம்மிகளை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்கின்றனர்.
எகிப்து தலைநகர் கெய்ரோ அருகே உள்ள டேர் ரிபே என்ற கிராமத்தில் கடந்த 1907ம் ஆண்டு இரு மம்மிகள் அருகருகே கண்டு பிடிக்கப்பட்டன.
அதில் இருந்த தகவல்கள் மூலமாக, அந்த இரு மம்மிகளும் உள்ளூர் ஆளுநரின் மகன்கள் நம்-நக்த், நக்த்-ஆங் என தெரிய வந்தது.
சுமார் 3,800 ஆண்டுகளான இந்த மம்மிகள் ஆய்வுக்காக இங்கிலாந்தின் மான்செஸ்டர் பல்கலைக் கழக மியூசியத்துக்கு எடுத்து வரப்பட்டன.
இவைதான் இந்த மியூசியத்தில் உள்ள மிகவும் பழமையான மம்மி. இந்த இரு மம்மிகளும் ஒன்றுக்கொன்று தொடர்புடையதா என நீண்ட காலமாக விவாதம் நடந்து வந்தது. இதை உறுதி செய்வதற்காக மரபணு (டிஎன்ஏ) சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டது.
இரு மம்மிகளில் உள்ள பற்களில் இருந்து டிஎன்ஏ எடுக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இரு உடல்களிலும் ‘எம்1ஏ1’ எனப்படும் மைட்டோகான்டிரியல் ஹேப்லோடைப் என்ற மரபணுக்கள் ஒரே மாதிரியாக இருந்தன. இது தாயிடம் இருந்து குழந்தைகளுக்கு செல்லும் மரபணு.
இதன்மூலம், இருவரும் ஒரு தாய் வயிற்றில் பிறந்தவர்கள் என்பது உறுதியானது. ஆனால், தந்தை வழியாக வரும் ‘ஒய்’ குரோமோசோம் மரபணு தொடரில் வேறுபாடுகள் இருந்தன.
இதன் மூலம், இருவரும் வேறு, வேறு தந்தைக்கு பிறந்த ஒன்று விட்ட சகோதரர்கள் என கண்டறியப்பட்டது.
நம்-நக்த், நக்த்-ஆங் ஆகியோரின் தாய்க்கு கள்ளத்தொடர்பு இருந்திருக்கலாம், இறந்து பல ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும், எகிப்தின் பழங்கால கள்ளக்காதலை அம்பலப்படுத்தி விட்டது இந்த டிஎன்ஏ சோதனை.