திருடியதாகச் சொல்லப்படும் நெக்லஸை அணிந்தவாறு, முகநூலில் புகைப்படத்தைப் பதிவேற்றிய இலங்கைப் பணிப்பெண்ணுக்கு ஷார்ஜா நீதிமன்றம் ஆறு மாத சிறைத் தண்டனையும் அதன் இறுதியில், நாடு கடத்துமாறும் உத்தரவிட்டது.
இந்த இலங்கைப் பெண், அரபு வீடொன்றில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில், அந்த வீட்டின் உரிமையாளரின் மனைவிக்குச் சொந்தமான நெக்லஸ் திருடு போனது.
திருடுபோன நெக்லஸை அணிந்தபடி, குறித்த இலங்கைப் பெண் தனது முகநூலில் புகைப்படம் ஒன்றைப் பதிவேற்றியிருந்தார்.
இதை தற்செயலாகக் கண்டு அதிர்ச்சியுற்ற உரிமையாளரின் மனைவி, அது குறித்து பொலிஸாருக்குத் தகவல் தெரிவித்தார்.
பொலிஸ் விசாரணையின்போது, குறித்த பணிப்பெண் தாம் நெக்லஸைத் திருடவில்லை என்று கூறினாலும் அவரது வீட்டு குப்பைவாளியில் இருந்து நெக்லஸை பொலிஸார் கண்டெடுத்தனர்.
அதுபற்றி விசாரித்தபோது, அதைத் தமது உரிமையாளரின் மனைவி தனக்குப் பரிசாகத் தந்ததாகவும் அது தங்கமாக இருக்காது என்று நினைத்து குப்பைவாளியில் வீசியதாகவும் தெரிவித்துள்ளார்.