10 நிமிட தாமதம்! மாணவனின் உயிரை பறித்த தண்டனை!

சென்னையில் 10 நிமிடம் தாமதமாக வந்த மாணவனுக்கு ஆசிரியர் வழங்கிய தண்டனையால் பரிதாபமாக பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை திருவிக நகரை சேர்ந்தவர் முரளி, இவரது இளைய மகன் நரேந்திர், பெரம்பூரில் உள்ள டான்பாஸ்கோ பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறான்.

பொங்கல் விடுமுறை முடிந்து நேற்று காலை 10 நிமிடம் தாமதமாக பள்ளிக்கு சென்றுள்ளான், இதற்காக உடற்கல்வி ஆசிரியர் வாத்து போல் நடக்கச்சொல்ல தண்டனை வழங்கியதாக கூறப்படுகிறது.

அப்போது மயங்கி விழுந்த மாணவனை உடனடியாக ஆசிரியவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

உடல்நிலை மோசமானதால் மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதித்தனர், எனினும் செல்லும் வழியிலேயே மாணவனின் உயிர் பிரிந்தது.

இதனை தொடர்ந்து மாணவனின் பெற்றோரை அழைத்த நிர்வாகம், இயற்கை மரணம் அடைந்ததாக கூறி பெற்றோரிடம் சடலத்தை ஒப்படைத்தனர்.

ஆனால் நரேந்திருக்கு வழங்கப்பட்ட தண்டனையை இதற்கு காரணம் என மற்ற மாணவர்கள் கூறியதால் ஆத்திரமடைந்த பெற்றோர், உறவினர்கள் பள்ளியின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விரைந்து வந்த பொலிஸ் அதிகாரிகள் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, தண்டனையின் போதே மாணவன் மயங்கி விழுந்தது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து முரளி கொடுத்த புகாரின் பேரில் உடற்கல்வி ஆசிரியரை ஜெய்சிங்கை கைது செய்த பொலிசார் முதல்வர் அருள்சாமியையும் கைது செய்துள்ளனர்.

பிரேத பரிசோனை அறிக்கை வந்த பிறகே மாணவன் இறப்புக்காக காரணம் தெரியவரும் என்றும், முதற்கட்ட விசாரணையில் மூச்சுத்திணறி இறந்திருப்பதாக மருத்துவர்கள் கூறியதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.