செல்ஃபீ புகைப்படத்தின் உதவியுடன், கனடாவில் குற்றவாளி ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற கொலை சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கனடாவில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பிரிட்னி என்ற பெண்மனி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டிருந்தார்.
இந்த கொலையை செய்த குற்றவாளியை கண்டுபிடிப்பதற்கு எதுவித ஆதாரங்களும் கிடைக்காமல் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடல் சாஸ்கடோன் என்ற பகுதியிலிருந்து கண்டெடுக்கப்பட்டதுடன், இடுப்புப்பட்டி ஒன்றும் குறித்த இடத்தில் கிடைத்தது.
இதைத் தொடர்ந்து, இந்த கொலைக்கு பிரிட்னியின் நண்பியான ரோஸ் காரணமாக இருக்கலாமென பொலிசார் சந்தேகத்தினை வெளியிட்டிருந்த போதிலும் அதற்கான ஆதாரங்கள் கிடைக்கவில்லை.
இப்படியான சூழ்நிலையில், பிரிட்னியின் தோழி சைனி ரோஸ் ஃபேஸ்புக்கில் பகிர்ந்த ஒரு செல்ஃபி புகைப்படம், ரோஸ்தான் கொலையாளி என உறுதி செய்துள்ளது.
குறித்த புகைப்படத்தில் ரோஸ் அணிந்திருந்த இடுப்புப்பட்டி சம்பவ இடத்தில் கண்டெடுக்கப்பட்ட இடுப்புப்பட்டியுடன் ஒத்துப்போயுள்ளது.
இதைத் தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்திருந்த பொலிசார், ரோஸ்தான் கொலையாளி என்பதனை உறுதி செய்துள்ளதுடன், அவரை கைதும் செய்துள்ளனர்.
இதையடுத்து ரோஸ் குற்றத்தை ஒப்புக் கொண்டதுடன், குறித்த சமயத்தில் இருவரும் போதையிலிருந்தாகவும், இதன் போது ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தினாலேயே இந்த சம்பவம் இடம்பெற்றதாகவும் தெரிவித்துள்ளார்.
இளைஞர்களால் விரும்பி எடுக்கப்படும் செல்ஃபி சில சமயங்களில் பல மர்மான விடயங்கள் வெளிவருவதற்கும் உதவுகின்றமை குறிப்பிடத்தக்கது.