கோவையில் சிறுவனின் அறுவை சிகிச்சையின்போது உடலில் துணியை வைத்து தைத்த தனியார் மருத்துவமனையின் மருத்துவர்கள் மூவர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்தவர் வினோத். இவரது நான்கரை வயது மகன் விஷ்ணு, வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்.
இதையடுத்து, கோவை, ராம் நகரில் உள்ள எஸ்ஆர்ஜி தனியார் மருத்துவமனையில் கடந்த செப்டம்பர் மாதம் சேர்க்கப்பட்டார்.
பரிசோதனையில், அவருக்கு சிறுநீரகத்தில் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஆனால், அறுவை சிகிச்சைக்குப் பிறகும் அவர் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.
இந்த நிலையில், மற்றொரு தனியார் மருத்துவமனையில் சோதனை செய்து பார்த்தனர். இதில் உடலில் அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் துணி இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
சிறுநீரக பாதிப்புக்காக அறுவை சிகிச்சை மேற்கொண்டபோது தவறுதலாக உடலில் பஞ்சும், சிறிய துணியும் வைத்த தைக்கப்பட்டது தெரிய வந்தது.
இதனையடுத்து எஸ்ஜிஆர் மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கடந்த வாரம் கோவை மாநகர காவல் ஆணையர் மற்றும் உதவி ஆணையர் ஆகியோரிடம் வினோத்குமார் புகார் அளித்தார்.
இது தொடர்பாக எஸ்ஆர்ஜி தனியார் மருத்துவமனையின் மருத்துவர்கள் தர்மேந்திரா, வினோத், கண்ணதாசன் ஆகியோர் மீது காட்டூர் காவல்துறையினர் தற்போது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.