மறுவாழ்வு வழங்கப்பட்ட முன்னாள் போராளிகளில் தனியார் துறையில் பணியாற்றி வருவோருக்கு 10 ஆயிரம் ரூபா உதவித் தொகை வழங்கப்படவுள்ளது.
அதற்கான பதிவுகளை மேற்கொள்ளுமாறு யாழ்ப்பாண மாவட்ட மறுவாழ்வுக் கிளையின் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது:
மறுவாழ்வு வழங்கப்பட்டு சமூகத்துடன் இணைக்கப்பட்ட முன்னாள் போராளிகளில் தனியார் நிறுவனங்களில் பணியாற்றுவோருக்கு 10 ஆயிரம் ரூபா உதவித்தொகை வழங்க வரவு – செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டது.
அந்த உதவித்தொகையை யாழ்ப்பாண மாவட்டத்தில் வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பதிவு செய்யப்பட்ட தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் முன்னாள் போராளிகள் இந்த உதவித்தொகையைப் பெற முடியும்.
பணியாற்றும் நிறுவனத்தால் அவர்களுக்கு ஊழியர் சேமலாப நிதித் தொகை செலுத்தப்பட்டிருக்க வேண்டும் என்பது கட்டாயம்.
இந்த விடயங்கள் பின்பற்றப்படும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் மறுவாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள் தமது விபரங்களை யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்திலுள்ள மறுவாழ்வுக் கிளையில் பதிவு செய்ய வேண்டும்.
தகுதியானவர்களுக்கான 10 ஆயிரம் ரூபா உதவித்தொகை அவர்கள் பணியாற்றும் நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றார்.