ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அலுவலகத்திற்குள் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பாடல்களை ஒலிபரப்புவது தான் இந்தக் கட்சியின் கொள்கையா என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கேள்வியெழுப்பியுள்ளார்.
வத்தளையில் இடம்பெற்ற நிகழ்வின் பின்னர் பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக தொடர்ந்தும் கருத்துரைத்த அவர், இன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிறுவுநர் பண்டாரநாயக்க இருந்திருந்தால் இதயம் வெடித்து செத்திருப்பார்.
இந்தக் கட்சியை பிளவு படுத்துகின்ற நோக்கம் என்பது எங்களுக்கு இல்லை. அமைச்சுப் பொறுப்பில் இருந்து கொண்டு, அதிகாரங்களை வைத்திருப்பவர்களே கட்சியை காட்டிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நாட்டின் வளங்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்து கொண்டிருக்கிறார்கள்.
இது தான் பண்டாரநாயக்கவின் கொள்கையா? இன்று பிரபாகரனின் பாடல்களை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அலுவலகத்தில் ஒலிக்க விடுவது தான் இந்தக் கட்சியின் கொள்கையாக மாறியிருக்கிறது என்றார்.
அண்மையில் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அலுவலகத்தில் விடுதலைப் புலிகளின் தமிழீழ எழுச்சிப் பாடல்கள் ஒலிக்கவிடப்பட்டு தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.
இது தென்னிலங்கையில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.