நாவற்குழி பகுதிக்கு பொறுப்பாகவிருந்த தளபதியை முன்னிலையாகுமாறு யாழ். மேல் நீதிமன்றம் உத்தரவு
யாழ். நாவற்குழி பகுதியில் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பான வழக்கில் அக்காலப்பகுதியில் நாவற்குழி பகுதிக்கு பொறுப்பாகவிருந்த தளபதி துமிந்த கெப்பிட்டிவெலானவை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு யாழ். மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1996ம் ஆண்டு நாவற்குழி படைமுகாமில் இராணுவ தளபதியாக இருந்த துமிந்த கெப்பிட்டிவெலான தலைமையிலான படையினரால் கைது செய்யப்பட்ட 24 இளைஞர்கள் பின்னர் காணாமல் போயிருந்தனர்.
இது தொடர்பில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய உறவினர்கள் சட்டத்தரணிகளான கு. குருபரன் மற்றும் எஸ். சுபாசினி ஆகியோர் ஊடாக யாழ். மேல்நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.
இவ்வழக்கில் 1ம் எதிரியாக துமிந்த கெப்பிட்டிவெலான, 2ம் எதிரியாக இலங்கை இராணுவ தளபதி மற்றும் 3ம் எதிரியாக சட்டமா அதிபர் ஆகியோர் குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், இந்த வழக்கு இன்று யாழ் மேல் நீதிமன்றில் நீதிபதி மா. இழஞ்செழியன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.
இதன்போது மனுதாரார் சார்பில் முன்னிலையாகிய சட்டத்தரணிகள் சம்பவம் இடம்பெற்ற காலப்பகுதியில் நாவற்குளி தளபதியாக இருந்த துமிந்த கெப்பிட்டிவெலான தற்போதும் இராணுவ சேவையில் இருப்பதனை சுட்டிக்காட்டினார்கள்.
இதனைத் தொடர்ந்து நீதிபதி மா.இளஞ்செழியன் இவ்வழக்கின் முதலாம் எதிரியான துமிந்த கெப்பிட்டிவெலானவை எதிர்வரும் ஏப்ரல் மாதம் இரண்டாம் திகதி முன்னிலையாகுமாறு உத்தரவிட்டுள்ளார்.