“விடுமுறை வேண்டும்: ஒன்றாம் வகுப்பு மாணவனை கத்தியால் குத்திய மாணவி!”

லக்னௌ:  பள்ளிக்கு விடுமுறை வேண்டும் என்பதற்காகத்தான் லக்னௌ பள்ளியின் ஒன்றாம் வகுப்பு மாணவனை  சக பள்ளி மாணவி கத்தியால் குத்தியுள்ளார் என்ற அதிர்ச்சித் தகவல் தெரிய வந்துள்ளது.

Capturecszcஉத்தரப் பிரதேச மாநிலம் லக்னௌவின் த்ரிவேணி நகரில் அமைந்துள்ளது பிரைட்லாண்ட் பள்ளி. இப்பள்ளியில்தான் புதனன்று காலைஇந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இந்த பள்ளியில் ஒன்றாம் வகுப்பு பயிலும் மாணவன் ஹ்ரித்திக். காலை பள்ளியில் பிரார்த்தனை முடிந்தவுடன், அதே பள்ளியில் பெரிய வகுப்பில் பயிலும் மாணவி ஒருவர் ஹ்ரித்திக்கை கழிப்பறைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு அவனைக் கடுமையாகத் தாக்கிய அவர் பின்னர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியினை எடுத்து ஹ்ரித்திக்கை குத்தியுள்ளார்.

இந்த தாக்குதலில் கடுமையான ரத்த சேதம் அடைந்த ஹ்ரித்திக் அங்கேயே மயங்கி விழுந்து விட்டான். பின்னர் அவனைப் பார்த்த மாணவர் ஒருவர் அளித்த தகவலின் பேரில், அவன் உடனடியாக அருகில் இருந்த கிங் ஜார்ஜ் மருத்துவ பல்கலைக் கழக மருத்துவனையில் சேர்க்கப்பட்டான் என்று பள்ளியின் தலைமை ஆசிரியர் ரீனா மனஸ் காவல்துறையினரிடம் தெரிவித்தார்.

மருத்துவமனையில் சிகிச்சைக்குப் பிறகு கண் விழித்த ஹ்ரித்திக் ஆண்கள் போல் தலைமுடியினை வெட்டியிருந்த மாணவி ஒருவர்தான் தன்னை அழைத்துச் சென்றார் என்றும், தன்னால் அவரை அடையாளம் காட்ட முடியும் என்றும் தெரிவித்தான்.  ஹ்ரித்திக் தற்பொழுது தொடர்ந்து ஆபத்தான கட்டத்தில் இருப்பதால் தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கிறான்.

பள்ளியின் இரண்டாம் மாடியில் அமைந்துள்ள குறிப்பிட்ட அந்த கழிப்பறையானது தற்பொழுது பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதே நேரம் பள்ளியில் முழுமையாக சிசிடிவி பொருத்தப்பட்டிருந்தாலும், குறிப்பிட்ட கழிப்பறையின் அருகே சிசிடிவி  இல்லாத காரணத்தால் மாணவியை கண்டுபிடிப்பது சிரமம் என்று பள்ளி ஆசிரியர் ஒருவர் விசாரணை அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

இந்நிலையில் வியாழன் அன்று ஹ்ரித்திக்கை கத்தியால் குத்திய அதே பள்ளியில் பயிலும் 7-ஆம்வகுப்பு மாணவி கைது செய்யப்பட்டர். அவரை விரைவில் சிறார் நீதி ஆணையத்தின் முன்பு ஆஜர் செய்ய உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

அதேசமயம் பள்ளியின் தலைமை ஆசிரியர் ரீனா மனஸ் அலட்சியம் மற்றும் குற்றத்தினை மறைக்க முயன்ற குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

அதே நேரத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரித்திக்கை மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் சென்று பார்த்து, அவரது பெற்றோருக்கு ஆறுதல் கூறியுள்ளார்.