வைரமுத்துவை முன்னிலைப்படுத்தி தமிழகத்தில் கொல்லைப்புறமாக நுழைய நினைத்தால் அது நடக்காது, அதனை அனுமதிக்க மாட்டோம் என `கடவுள் 2′ பட ஆரம்ப விழாவில் இயக்குநர் பாரதிராஜா பேசினார்.
இயக்குநர் வேலு பிரபாகரன் இயக்கத்தில் பாரதி ராஜா, சீமான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் படம் கடவுள் 2. இந்த படத்தின் துவக்க விழா சென்னையில் இன்று நடந்தது. இதில் பாரதிராஜா, சீமான், வேலு பிரபாகரன், பாடலாசிரியர் சினேகன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பாரதிராஜா பேசுகையில்,
ஆண்டாள் குறித்த சர்ச்சை விவகாரத்தில் வைரமுத்து மன்னிப்பு கேட்ட பின்னரும் அவரை விமர்சிப்பவர்களுக்கு கண்டனம் தெரிவித்தார்.
அதில், வைரமுத்து வருத்தம் தெரிவித்த பின்னரும் அவருக்கு எதிராக போராட்டங்கள், கண்டனங்கள் எழுவது ஏன்? எங்களுக்கு மதம் என்பதே கிடையாது.
அப்படி இருக்கயைில் வைரமுத்துவை முன்னிலைப்படுத்தி தமிழகத்தில் கொல்லைப்புறமாக நுழைய நினைத்தால் அது முடியாது. அதனை அனுமதிக்க மாட்டோம்.
வைரமுத்து தமிழ் மண்ணோடு கலந்தவர். வைரமுத்துவை கரைப்படுத்துவது வைகையை கரைப்படுத்துவது போன்றது. வைரமுத்து என்பவர் தனிமனிதன் அல்ல.
இலக்கியத்திற்கும், தமிழுக்கும் அவர் ஆற்றிய தொண்டு சாதாரணமானது அல்ல. எங்களை ஆயுதம் எடுக்க வைத்து விடாதீர்கள், குற்றப்பமை்பரை ஆக்கிவிடாதீர்கள்.
நாக்கை அறுக்க 10 கோடி என அறிவிக்கும் ஒருவர் அமைச்சராக இருந்தால் நாடு எப்படி முன்னேறும். நான் ஏதோ உணர்ச்சிவசப்பட்டு இங்கே பேசுவதாக எண்ண வேண்டாம்.
தவறுதலாக மறுபடியும் வைரமுத்து மீது எங்கேயாவது வசைபாடியோ அல்லது கைவைத்தோ பார்க்க வேண்டாம். அரசியல் வேறு, இலக்கியம் வேறு. அவரது எழுத்து போல வைரமுத்துவும் கம்பீரமானவர் தான் என்றார்.