20 நிமிடங்களில் முடிந்த வீரப்பனின் 20 ஆண்டுகால சாம்ராஜ்யம்!!
2004 அக்டோபர் 18ஆம் தேதியன்று தமிழக அதிரடிப்படையால் சுட்டுக் கொல்லப்பட்டார் சந்தனக்கடத்தல் வீரப்பன். வீரப்பன் பிரபலமாவதற்கு முன்பு தமிழ்நாட்டில் வனத்துறை ரோந்து குழுவின் தலைவராக இருந்தார் கோபாலகிருஷ்ணன்.
வலுவான தோள்களையும், திடமான புஜங்களையும் கொண்ட அவரை ‘ராம்போ’ என்று அவருடைய நண்பர்கள் அழைத்தனர். சந்தன கடத்தல் வீரப்பனின் வன்னியர் சாதியை சேர்ந்தவர் `ராம்போ’ கோபால கிருஷ்ணன் என்பது குறிப்பிடத்தக்கது.
1993 ஆம் ஆண்டு ஏப்ரல் 9-ஆம் தேதி காலை கோலாத்பூர் கிராமத்தில் ஒரு பெரிய சுவரொட்டி காணப்பட்டது. அதில் கேவலமான வார்த்தைகளில் ராம்போ மீது வசைமாரி பொழியப்பட்டிருந்தது.
ராம்போவுக்கு தைரியம் இருந்தால் வீரப்பனை நேராக வந்து பிடிக்கட்டும் என்ற சவாலும் விடுக்கப்பட்டிருந்தது.
வீரப்பனை பிடிக்க நேரடியாக செல்ல முடிவெடுத்தார் ராம்போ கோபாலகிருஷ்ணன். அவருடைய ஜீப் பாலாறு பாலத்தை அடைந்ததும் பழுதடைந்துவிட்டது.
ஜீப்பை அங்கேயே விட்டுவிட்டு, காவல்துறையிடமிருந்து இரண்டு பேருந்துகளை பெற்றுக்கொண்டார் ராம்போ. முதல் பேருந்தில் ராம்போவுடன் 15 உளவாளிகள், 4 போலிசார், 2 வனத்துறை காவலர்கள் ஏறிக்கொண்டனர்.
தமிழ்நாடு காவல்துறை இன்ஸ்பெக்டர் அசோக் குமார், ஆறு போலிசாருடன் இரண்டாவது பேருந்தில் பயணித்தார். விரைந்து வரும் பேருந்துகளின் ஓசை வீரப்பனின் குழுவினருக்கும் கேட்டது. ராம்போ ஜீப்பில் வருவார் என்று அவர்கள் எதிர்பார்த்திருந்தார்கள்.
ஆனால் தொலைவில் இருந்தே போலிசாரின் வருகையை மோப்பம் பிடித்து விசிலடித்த வீரப்பன், முதலில் வந்த பேருந்தின் முன்புற இருக்கையில் ராம்போ இருப்பதையும் பார்த்துவிட்டார்.
அவர்கள் இலக்கு வைத்திருந்த குறிப்பிட்ட ஒரு இடத்திற்கு பேருந்து வந்ததும், வீரப்பனின் சகா சைமன், நிலக்கண்ணி வெடிகளுடன் 12 வோல்ட் மின்சாரத் திறன்கொண்ட கார் பேட்டரியின் கம்பிகளை இணைத்துவிட்டார்.
மிகப்பெரிய வெடிப்பு நிகழ்ந்தது. 3000 டிகிரி செல்சியஸ் வெப்பம் உருவானது. பேருந்துக்கு கீழே இருந்த நிலப்பகுதி சற்று உள்வாங்கியது.
பேருந்து காற்றில் பஞ்சாய் பறந்தபோது, கற்களும், உலோகத் துண்டுகளும், பேருந்தின் பாகங்களுடன் உள்ளேயிருந்த மனிதர்களின் உடல் பாகங்களும் உருக்குலைந்து எல்லா திக்குகளிலும் வீசியெறியப்பட்டன. இவை ஒரு மணி நேரத்திற்கு ஆயிரம் கிலோமீட்டர் என்ற வேகத்தில் பறந்ததாக கூறப்படுகிறது.
வீரப்பனை சுட்டுக்கொன்ற தமிழக சிறப்பு அதிரடிப்படைக்கு தலைமை தாங்கியவரும், உள்துறை அமைச்சக மூத்த பாதுகாப்பு ஆலோசகருமான கே.விஜயகுமார், வீரப்பனுக்கு எதிரான அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்ட தனது அனுபவங்களை புத்தகமாக எழுதியுள்ளார்.
‘வீரப்பன்: சேசிங் தி பிரிகண்ட்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புத்தகத்தில் இந்த சம்பவம் பற்றி விஜயகுமார் கூறுகிறார், “அந்தக் காட்சி மிகவும் கொடூரமானது.
தொலைவில் ஒரு குன்றின் உச்சியில் நின்றிருந்த வீரப்பனும் வெடிப்பின் அதிர்வை உணர்ந்தார். வெப்பத்தால் அவரது முழு உடலும் வியர்வையில் நனைந்துபோனது. சிறிது நேரத்தில் இரண்டாவது பேருந்தில் அங்கு வந்த இன்ஸ்பெக்டர் அசோக் குமார், முதல் பேருந்தில் வந்த அனைவரும் உருக்குலைந்திருப்பதை கண்டார்”.
“அங்கிருந்த சடலங்களையும், காயமடைந்தவர்களையும் இரண்டாவது பேருந்தில் ஏற்றிக்கொண்டு கிளம்பினோம்.
ஆனால் வெடிப்பில் சிக்கி தொலைவில் தூக்கி எறியப்பட்ட சுகுமாரை நாங்கள் கவனிக்கவில்லை சுகுமார் இல்லை என்பது பேருந்து கிளம்பிய பிறகுதான் தெரியவந்தது.
படுகாயமடைந்த சுகுமார் சற்று நேரத்தில் அங்கேயே இறந்துபோனார்” என்று அந்த கருப்பு தினத்தை பற்றி அசோக்குமார் விஜயகுமாரிடம் தெரிவித்தார்.
இதுதான் வீரப்பனின் முதல் பெரிய வெற்றி. இந்த சம்பவமே வீரப்பனை பற்றி இந்தியா முழுவதும் அறியச்செய்தது.
1952 ஆம் ஆண்டு ஜனவரி 18 அன்று பிறந்த வீரப்பன், தனது 17 வயதில் முதல்முறையாக யானை வேட்டையாடினார் என்று கூறப்படுகிறது. யானைகளின் நெற்றியில் சுட்டு அவற்றை கொல்வது வீரப்பனுக்கு பிடித்தமான உத்தி என்று கூறப்படுகிறது.
வீரப்பன் பிடிபட்டபோது…
கே.விஜயகுமார் கூறுகிறார், “காவல்துறை அதிகாரி ஸ்ரீநிவாஸ் வீரப்பனை ஒருமுறை கைது செய்தார். அப்போது தனக்கு கடுமையான தலைவலி இருப்பதாக கூறிய வீரப்பன், தலைக்கு எண்ணெய் வைத்தால் தலைவலி குறையும் என்று பாதுகாவலர்களிடம் கேட்டுக்கொண்டார்.
கொடுக்கப்பட்ட எண்ணெயை தலையில் தடவுவதற்கு பதில் கையில் தடவினார் வீரப்பன். சில நிமிடங்களில் அவரது கைகளில் போடப்பட்டிருந்த கைவிலங்கு மணிக்கட்டில் இருந்து கழன்றது”.
“வீரப்பன் போலிஸ் காவலில் சில தினங்கள் இருந்தபோதிலும், அவரது விரல் ரேகைகள் எடுக்கப்படவில்லை.”
பி.ஸ்ரீநிவாஸ் என்ற வனத்துறை அதிகாரியின் தலையை துண்டித்த வீரப்பன், அவரது தலையை கால்பந்தாக்கி தன் சகாக்களுடன் விளையாடினார் என்று சொல்லப்படுகிறது.
இந்த ஸ்ரீநிவாஸ்தான் வீரப்பனை முதன்முறையாக கைது செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
“வீரப்பனின் இளைய சகோதரர் அர்ஜுனனிடம் ஸ்ரீனிவாஸ் தொடர்ந்து தொடர்பில் இருந்தார். வீரப்பன் ஆயுதங்களை கைவிட தயாராக இருக்கிறார், நீங்கள் வாருங்கள், அவர் உங்களை வழியில் சந்திப்பார் என்றும் அர்ஜுனன் கூறினார்”.
“சிலரை அழைத்துக்கொண்டு வீரப்பனை சந்திக்க ஸ்ரீனிவாஸ் சென்றார். தன்னுடன் வருபவர்கள் அனைவரும் ஒருவர் பின் ஒருவராக தன்னைவிட்டு விலகிவிடுவார்கள் என்று ஸ்ரீனிவாஸ் நினைத்துக்கூட பார்க்கவில்லை.”
ஸ்ரீநிவாஸ் மரணம்
“ஒரு சமயத்தில் வீரப்பனின் சகோதரர் அர்ஜுனன் மட்டுமே ஸ்ரீநிவாசுடன் இருந்தார். ஒரு குளத்தை அவர்கள் நெருங்கி வந்தபோது ஒரு புதரிலிருந்து சிலர் வெளிவருவதை அவர்கள் கண்டார்கள்”.
அவர்களில் உயரமாக இருந்த ஒருவரின் மீசையும் மிகப்பெரியதாக இருந்தது. வீரப்பன் ஆயுதங்களை கைவிடுவதாக சொன்னது உண்மை என்று முதலில் நம்பிய ஸ்ரீநிவாஸ், தன்னுடைய நம்பிக்கை தவறு என்று புரிந்துக்கொண்டபோது காலம் கடந்துவிட்டது.”
“கையில் துப்பாக்கி வைத்திருந்த வீரப்பன் அவர்களை உற்றுப்பார்த்து எக்காளச் சிரிப்பு சிரித்தான். ஸ்ரீநிவாஸ் திரும்பிப் பார்த்தபோது அர்ஜுனன் மட்டுமே அவர் பின்னால் நின்றான்”.
“ஸ்ரீநிவாஸை பார்த்து கடகடவென்று சிரித்த வீரப்பன், அவர் பேசுவதற்கு முன்னரே துப்பாக்கியால் சுட்டுவிட்டான். அவரை சுட்டதில் திருப்தியடையாத வீரப்பன், ஸ்ரீநிவாசின் தலையை வெட்டியெடுத்து, தன்னுடைய சகாக்களுடன் சேர்ந்து, தலையை கால்பந்துபோல் உதைத்து விளையாடினார்”.
வீரப்பனின் கொடூரம்
குற்றம் புரிபவர்கள் செய்த பலவிதமான கொடுமைகளை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். ஆனால் ஒரு கொள்ளையன் தன்னைக் தற்காத்துக் கொள்வதற்காக பச்சிளம் மகளை கொன்ற கதையை கேள்விபட்டதுண்டா?
“1993இல் வீரப்பனுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அந்த சமயத்தில் வீரப்பனின் குழுவில் நூறு பேர் இருந்தார்கள். பிறந்த குழந்தையின் அழுகைக்குரல் சுமார் 110 டெசிபல்களைக் கொண்டதாக இருக்கும்.. காட்டில் இரவு நேரத்தில் குழந்தையின் அழுகுரல் இரண்டரை கிலோ மீட்டர் தூரத்திற்கு கேட்கும்” என்கிறார் விஜய்குமார்.
“குழந்தையின் அழுகுரலால் ஒருமுறை வீரப்பன் சிக்க நேர்ந்தது. எனவே தனக்கு சிக்கலை ஏற்படுத்தக்கூடிய குழந்தையின் அழுகுரலை நிரந்தரமாக நிறுத்திவிட்டான் வீரப்பன்”.
“1993ஆம் ஆண்டு கர்நாடக சிறப்பு அதிரடிப் படை தேடுதல் நடத்தியபோது, சமதளமாக இருந்த இடத்தின் ஒரு பகுதியில் மட்டும் சற்றே மேடாக இருந்தது. நிலத்தை தோண்டிப் பார்த்தால் அங்கு பச்சிளம் குழந்தையின் சடலம் கிடைத்தது.”
காட்டில் நூறு நாட்கள்
2000ஆவது ஆண்டில் கன்னட திரையுலகைச் சேர்ந்த பிரபல திரைப்பட நடிகர் ராஜ்குமாரை கடத்திச் சென்று 100 நாட்களுக்கு மேல் பிணைக்கைதியாக வைத்திருந்த வீரப்பன், தமிழகம் மற்றும் கர்நாடக மாநில அரசுகளுக்கு மிகப்பெரிய பிரச்சனையாக உருவானார்.
2001 ஜூன் 11ஆம் தேதியன்று ஐ.பி.எஸ் அதிகாரி விஜயகுமாரின் தொலைபேசி ஒலித்தது. அழைத்தது, அம்மா என்று அனைவராலும் அழைக்கப்பட்ட ஜெயலலிதா.
சுற்றிவளைக்காமல் நேரடியாக பேசிய ஜெயலலிதா, “சந்தன கடத்தல் வீரப்பனின் அட்டகாசம் தலைக்கு மேல் போய்விட்டது. அவனை பிடிக்க உருவாக்கப்படும் தமிழ்நாடு சிறப்பு அதிரடிப்படை தலைவராக உங்களை நியமிக்கிறேன். உத்தரவு நாளை உங்களுக்கு கிடைத்துவிடும்” என்று கூறினார்.
சிறப்பு அதிரடிப்படை தலைவராக பொறுபேற்றுக் கொண்ட விஜயகுமார், சந்தன கடத்தல் வீரப்பன் பற்றிய தகவல்களை திரட்டத் தொடங்கினார். வீரப்பனின் கண்களில் பிரச்சனை ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. பிரபலமான தனது மீசைக்கு சாயம் போடும்போது, சாயத்தின் சில துளிகள் கண்களில் தெறித்ததால் வீரப்பனின் கண்கள் பழுதுபட்டன.
விஜயகுமார் சொல்கிறார், “ஆடியோ மற்றும் வீடியோ கேசட்டுகளை வெளியுலகத்திற்கு அனுப்புவதில் விருப்பம் கொண்டவன் வீரப்பன்.
அப்படி ஒருமுறை அனுப்பியிருந்த வீடியோவில், ஒரு காகிதத்தில் எழுதியிருந்ததை படிக்க வீரப்பன் சிரமப்பட்டதை பார்த்து, அவன் கண்களின் பிரச்சனை இருக்கலாம் என்று யூகித்தோம்.
வியூகம் வகுக்கும்போது, எங்கள் படையில் இருந்தவர்களை குறைத்துவிட்டேன். குழு பெரிய அளவில் இருந்தால், உணவுக்கான பொருட்களை வாங்கும்போது, பலரின் கவனம் எங்கள் மீது விழும் என்பதே அதற்கு காரணம்.”
வீரப்பனை பிடிக்க வலை விரித்தோம். கண் சிகிச்சைக்காக காட்டில் இருந்து மருத்துவமனைக்கு வரவேண்டிய கட்டாயம் வீரப்பனுக்கு இருந்தது. அதற்காக நாங்கள் அனுப்பிய சிறப்பு ஆம்புலன்சில் ‘எஸ்.கே.எஸ் மருத்துவமனை, சேலம்’ என்று எழுதியிருந்தது.
அந்த ஆம்புலன்சில் எங்கள் அதிரடிப்படையின் வெள்ளைதுரையும், வண்டியோட்டியாக சரவணனும் இருந்தார்கள்.
வீரப்பன் தனது முக்கிய அடையாளமான மீசையை நறுக்கி சிறிதாக்கியிருந்தார். வெண்ணிற ஆடை அணிந்து சாதாரண நபரைப்போன்ற தோற்றத்தில் இருந்தார்.
“முன்னரே நிர்ணயிக்கப்பட்ட இடத்திற்கு வந்ததும், ஆம்புலன்ஸ் ஓட்டுனர் திடீர் பிரேக் போட்டார். உள்ளே அமர்ந்திருந்தவர்கள் அனைவரும் தங்கள் இடத்தில் இருந்து கீழே விழுந்தார்கள்.
பிரேக் போட்ட வேகத்தில் டயரில் இருந்து புகை கிளம்பியது. அருகில் மறைந்திருந்த எங்களால் டயர் எரியும் வாசத்தை நுகரமுடிந்தது. வண்டியில் இருந்து இறங்கிய சரவணன் என்னருகே ஓடிவந்தார்”.
விஜய்குமாரின் வெற்றி அனுபவம்
“வீரப்பன் ஆம்புலன்சின் உள்ளே இருக்கிறார் என்று சரவணன் சொன்னதைக் கேட்டதும், ‘உங்களை சுற்றி வளைத்துவிட்டோம். ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு சரணடையுங்கள்’ என்று மெகாபோனில் உரக்கச் சொன்னேன்.
அதற்கு துப்பாக்கிச் சூடு பதிலாக வந்தது. பிறகு நாங்கள் நான்குபுறங்களிலும் இருந்து தாக்குதல் நடத்தினோம். ஆம்புலன்சில் இருந்து துப்பாக்கிச் சூடு நிற்கும்வரை சரமாரியாக சுட்டோம்.”
“நாங்கள் மொத்தம் 338 ரவுண்டு துப்பாக்கிச் சூடு நடத்தினோம். புகைமூட்டம் சூழ்ந்த அந்த இடத்தில் எல்லாம் முடிவடைந்தது என்ற குரல் உயர்ந்து ஒலித்தது.
10 மணி 50 நிமிடத்தில் தொடங்கிய நடவடிக்கை 20 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. சிம்மசொப்பனமாக விளங்கிய வீரப்பன் மற்றும் ஆம்புலன்சில் இருந்த அவனது மூன்று கூட்டாளிகளின் கடைசி அத்தியாயம் முடிவுக்கு வந்தது.”
எங்களின் சரமாரியான துப்பாக்கிச்சூட்டில் வீரப்பன் மீது இரண்டு குண்டுகள் மட்டுமே தாக்கியது என்பது அதிசயமாக இருந்தது. 1960களில் பிரான்சு அதிபர் சார்லஸ் டி காலேவின் காரை நோக்கி 140 குண்டுகள் சுடப்பட்டாலும், அவற்றில் ஏழு குண்டுகள் மட்டுமே காரை துளைத்தன என்று படித்தது நினைவுக்கு வந்தது.
விஜயகுமார் ஆம்புலன்சிற்கு சென்று பார்த்தபோது வீரப்பன் உயிருடன் இருந்தாரா?
“வீரப்பனின் உடலில் உயிர் ஒட்டிக்கொண்டிருந்தது. மூச்சு லேசாக வந்துகொண்டிருந்தாலும், முடிவு நெருங்கிவிட்டதாகவே உணர்ந்தேன்.
வீரப்பனின் இடது கண்ணை ஒரு குண்டு துளைத்திருந்தது. அவர்கள் அனைவரையும் மருத்துவமனைக்கு அனுப்ப முடிவு செய்தேன்”.
வீரப்பன் இறந்துவிட்டதை அதிரடிப்படை வீரர்களால் நம்பவே முடியவில்லை. ஏனெனில் வீரப்பனை சுற்றிவளைக்கும் நடவடிக்கை இது என்பது ஒருசிலரைத் தவிர வேறுயாருக்குமே தெரியாமல் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது.
இறந்தது வீரப்பன் என்பது உறுதியானதும், அதிரடிப் படையினர் கரைபுரண்ட மகிழ்ச்சியில் விஜயகுமாரை தோளில் தூக்கி கொண்டாடினார்கள்.
ஈரடியை ஓரடியாக எடுத்து வைத்து விரைந்த விஜய்குமார், தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவை தொலைபேசியில் அழைத்தார். தொலைபேசியை எடுத்த முதலமைச்சரின் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், “மேடம் படுக்கைக்கு சென்றுவிட்டார்கள்” என்று சொன்னார்.
“நான் கூறும் தகவலைக் கேட்டால் அவர்கள் மகிழ்ச்சியடைவார்கள், முதலமைச்சரிடம் நேரடியாக பேசவேண்டும்” என்று விஜயகுமார் பதிலளித்தார்.
“அடுத்த நிமிடம் தொலைபேசியில் பேசிய ஜெயலலிதா, வீரப்பனின் கதை முடிந்த தகவலை கேட்டதும் மிகவும் உற்சாகமடைந்தார். எனக்கும், குழுவினருக்கும் பாராட்டு தெரிவித்த ஜெயலலிதா, முதலமைச்சராக பதவியேற்ற பிறகு கேட்கும் முதல் நற்செய்தி இதுதான் என்று கூறினார்”.
பிறகு ஆம்புலன்சுக்கு சென்று மீண்டும் ஒருமுறை அதைப் பார்வையிட்டபோது, ஆம்புலன்சின் மேற்புறத்தில் பொருத்தப்பட்டிருந்த நீல விளக்கு எரிந்து கொண்டிருந்தது.
நீலவிளக்கை அணைக்குமாறு ஆணையிட்டார் விஜயகுமார். அணைக்கப்பட்டது விளக்கு மட்டுமல்ல, இந்தியாவிற்கே சிம்மசொப்பனமாக திகழ்ந்த வீரப்பனின் சரித்திரமும்தான்.