தமிழகத்தில் இசைத்துறையில் சாதனை படைத்து வரும் சில பெண்களின் சாதனைப் பயணத்தை வழங்கி வரும் பிபிசி தமிழ், இன்று மிருதங்கத்தில் மிளிரும் அஸ்வினியைப் பற்றி உங்களுக்கு வழங்குகிறது.
மிருதங்க வித்வான் என்றதும் திடகாத்திரமான ஓர் ஆண் தலையை ஆட்டி வாசிக்கும் காட்சிதான் பலருக்கும் கண்ணில் விரியும்.
ஆனால் சென்னையைச் சேர்ந்த அஸ்வினி (19) என்ற இளம்பெண் மிருதங்கம் வாசிக்கும் காட்சியைப் பார்த்த பின்னர், அந்த பிம்பம் உடைந்து போனது.
1,500க்கும் மேற்பட்ட கச்சேரிகளில் வாசித்த மிருதங்க கலைஞர் அஸ்வினி சென்னையில் நடக்கும் மார்கழி கச்சேரிகள் மட்டுமல்லாது, திருமண இசைக்கச்சேரிகள் மற்றும் குடும்பவிழாக்களிலும் மிருதங்கம் வாசிக்கிறார்.
ஆறுவயதில் தாயின் பாடல்களுக்கு தாளம் கொட்டத் தொடங்கிய அஸ்வினி, பதின்மவயதிலேயே, முன்னணி பாடகர்கள் தேர்ந்தெடுக்கும் மிருதங்கக் கலைஞராக உயர்ந்துள்ளார்.
”அம்மா ரமா பாட்டு ஆசிரியர். அவர் பாடும்போது வீட்டில் இருக்கும் பெட்டியில் தாளம் போடுவேன். அம்மாவும், அப்பாவும் ஒரு டோலக் பொம்மையை விளையாடுவதற்கு வாங்கித் தந்தனர்.
அதிலும் சரியான தாளம் போடவே, என்னை மிருதங்க சக்கரவர்த்தி டி.கே.மூர்த்தியிடம் அழைத்துச் சென்றார்கள்,” என இசைத்துறைக்குள் அடியெடுத்துவைத்த கதையை கூறினார் அஸ்வினி.
டி.கே.மூர்த்தியிடம் கற்ற இசைப்பாடம்
அஸ்வினி, டி.கே.மூர்த்தியிடம் வாசித்துக் காட்டியபோது அவர் மிருதங்கம் கற்றுக்கொடுப்பதாக ஒப்புக்கொண்ட தருணம் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள் என்கிறார் அஸ்வினியின் தந்தை ஸ்ரீனிவாசன்.
டி.கே.மூர்த்தியிடம் முறையாக பயின்ற பின்னர்,அவருடன் இணைந்து வாசிக்கும் வாய்ப்பும் அஸ்வினிக்கு கிடைத்திருக்கிறது.
”என் அக்கா அஞ்சனியும் வீணை வாசிக்கக் கற்றுக்கொண்டிருந்ததால், அவளையும் என்னையும் இசைவகுப்புக்குக் கூட்டிச்செல்லவேண்டும், பள்ளிக்கு கூட்டிச்செல்லவேண்டும் என்பதால், பாட்டு ஆசிரியராக என் அம்மா தனது வேலையை விட்டுவிட்டார்.
சாலைவிபத்தில் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையில் இருந்த அப்பா நம்பிக்கை அளிக்கும் விதமாக மட்டுமே பேசுவார்,” என பெற்றோரின் பங்களிப்பைப் பற்றி பேசினார் அஸ்வினி.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் தனி நபர்களின் கச்சேரிகள் என ஒவ்வொரு நாளும் உயரத்தைத் தொட அஸ்வினிக்கு வாய்ப்புகள் கிடைக்கின்றன.
இசைக்கு பாலினபேதம் இல்லை
”இசைத்துறையில் உள்ள பெண்கள் பெரும்பாலும் பாடகர்களாக அல்லது வாசிப்பு கலைகளை எடுத்துக்கொண்டால் வீணை அல்லது வயலின் கலைஞர்களாக இருப்பார்கள்.
மிருதங்கம் வாசிக்கும் பெண்கள் மிகவும் குறைவு. பல இடங்களில் கச்சேரி முடிந்த பின்னர் என்னிடம் பேசவரும் ரசிகர்கள் என்னைப் பார்த்து ஆச்சரியமடைந்ததாக கூறுவார்கள். என்னை கலைஞராக பாருங்கள், பெண் என்ற வித்தியாசம் பார்க்க தேவையில்லை என்று கூறுவேன்,” என்கிறார் அஸ்வினி.
மிருதங்கம் வாசிக்கும் பெண்களின் கைகள் மென்மைதன்மையை இழந்துவிடும், மிருதங்கம் ஆண்களுக்கான இசைக்கருவி என பலவிதமான கருத்துகளை அஸ்வினி எதிர்கொண்டுள்ளார். ”இசைக்கு ஆண் பெண் என்ற பேதம் கிடையாது.
மிருதங்கம் வாசிப்பது எனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது என்பதால் உணர்வோடு வாசிக்கின்றேன். தாளம்போடுவது என்னுடைய அனிச்சைசெயல்களில் ஒன்றாகிப்போனது. என் கைகள் மென்மையாகத்தான் இருக்கின்றன, மிருதங்கம் வாசிப்பதால் மனஉறுதி அதிகமாகியுள்ளது” என்கிறார் அஸ்வினி.
மிருதங்கம் வாசிப்பதில் அஸ்வினி சிறந்துவிளங்குவதாகக் கூறும் கலைமாமணி பூஷணி கல்யாணராமன், ”என் சமீபத்திய கச்சேரிகளுக்கு நான் அஸ்வினியை மிருதங்கம் வாசிக்க அழைத்திருந்தேன்.
பாடலுக்கு ஏற்ற ஜதிசேர்ப்பதில் முழுகவனம், இளவயதிலேயே ஆர்வத்தோடும்,விருப்பத்துடன் வாசிப்பதால் நான் அவரை தேர்ந்தேடுகிறேன். சில நேரங்களில் பெண் கலைஞர்கள் மட்டுமே சேர்ந்து கச்சேரி செய்யும் வாய்ப்பு கிடைக்கும். அந்த நேரத்தில் அஸ்வினி மிருதங்கம் வாசிப்பது மேடைக்கு மேலும் அழகு சேர்ப்பதாக அமைந்துவிடும்,” என்றார்.
பிரம்மவாத்தியம் என்ற மிருதங்கத்தை தன்வசப்படுத்திக்கொண்ட அஸ்வினிக்கு பல்வேறு நாடுகளில் உள்ள தாளவாத்தியங்களை கற்கவேண்டும் என்று விருப்பம் மேலோங்கியுள்ளது.
”உலக நாடுகளில் உள்ள தாளவாத்தியக் கலைஞர்களோடு சேர்ந்துவாசிக்க வேண்டும். நவீன காலத்திற்கு ஏற்ற ப்யுசன்(fusion) முறையில் வாசிக்கவேண்டும்,” என்றும் ஆசைப்படுகிறார் அஸ்வினி.