திருச்சி மாவட்டம், மணப்பாறை தாலுகா, வையம்பட்டி அருகேயுள்ள பெரியஅணைக்கரைப்பட்டி உள்ளது. இங்குள்ள புனித தூயசெபஸ்தியார் தேவாலயத்தின் பொங்கல் விழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி வரும் 21 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.
இந்த விழாவில் பங்கேற்க மதுரை, திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சை, திருச்சி ஆகிய ஊர்களில் இருந்து வரும் ஜல்லிக்கட்டு காளைகளும், மாடுபிடி வீரர்களும் கலந்து கொள்கின்றனர்.
அவர்களுக்கு வெள்ளிக்காசு, தங்க காசு, அலுமாரி, சைக்கிள், கார், பைக் உள்ளிட்ட பல்வேறு பரிசுபொருட்கள் வழங்குவார்கள்.
இந்நிலையில் இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் சேலம் மாவட்டம், மேட்டுப்பட்டி சேர்ந்த 21 வயது இளம்பெண் ஒருவர் தான் வளர்த்த காளையை போட்டிக்கு அழைத்து வருவதாகவும், அந்தக் காளையை தனி ஒருவனாக அடக்கிய வீரருக்கு காளையை கொண்டு வந்த இளம்பெண்ணும், காளையும் பரிசு என்று அறிவித்துள்ளனர்.
நேற்று வையம்பட்டியில் நடந்த வாரச்சந்தையின் போது கருங்குளம் கிராமத்தைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவர் சாலையில் நின்று கொண்டு காளையை அடக்கினால் இளம் பெண் இலவசம் என அறிவிப்பு செய்துள்ளார்.
இதனை அந்த வழியாக சென்றவர்கள் போனில் வீடியோ எடுத்து வாட்ஸ்அப், முகநூலில் பதிவேற்றம் செய்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இது குறித்து ஜல்லிக்கட்டு விழாக்குழுவினர் கூறுகையில் இது தவறான அறிவிப்பு எனவும், அவர் மதுபோதையில் இவ்வாறாக அறிவிப்பு செய்துள்ளதாகவும் கூறி இது போன்று எந்த ஒரு அறிவிப்பும் விழாக்குழு சார்பில் வெளியிடப்படவில்லை எனவும் கூறி மறுப்பு தெரிவித்துள்ளனர்.
இதேபோல வையம்பட்டி காவல்துறையினர் தங்களுக்கு இதுபோன்ற அறிவிப்பு குறித்து தகவல் வரவில்லை எனவும் விழாக்குழுவினர் புகார் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினர்.