முதலமைச்சர் என்னை மண்டியிட செய்தார்! அதிபர் கண்ணீருடன் தெரிவிப்பு!

ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்க, தன்னை மண்டியிட வைத்து மன்னிப்புக்கோர பணித்தார் என பதுளை மாவட்ட மகளிர் தமிழ் பாடசாலை அதிபர் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

குறித்த பாடசாலையில் மாணவி ஒருவரை சேர்ப்பதற்கான அரசியல்வாதியின் கடிதத்துடன் நபர் ஒருவர் சென்றுள்ளனர்.

எனினும் தான் அரசியல்வாதிகளின் உத்தரவுகளுக்கு செயற்படுவதற்கு அதிபராக இணையவில்லை என கூறி அதிபர் கடிதத்தை நிராகரித்துள்ளார்.

இதனையடுத்து குறித்த பாடசாலையின் அதிபரை தன் வீட்டிற்கு அழைத்த ஊவா மாகாண முதலமைச்சர் தன்னிடம் மன்னிப்பு கோருமாறு பணித்திருந்தார் என அண்மையில் செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட பாடசாலையில் இன்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தலைமையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன் போது கருத்து தெரிவித்த பாடசாலையில் அதிபர்,

“நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர், கடந்த 2ஆம் திகதி பதுளை மாவட்ட மகளிர் தமிழ் பாடசாலையில், மாணவி ஒருவரை இணைத்துக்கொள்ளுமாறு கூறினார்.

அவர், ஊவா மாகாண முதலமைச்சரின் பிரத்தியேக செயலாளரின் கையொப்பம் அடங்கிய கடிதம் ஊடாகவே அந்த மாணவியை பாடசாலையில் இணைத்துக்கொள்ளுமாறு கூறினார்.

எனினும், அதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, ஊவா மாகாண முதலமைச்சரின் செயலாளர், முதலமைச்சரின் உத்தியோகபூர்வ இல்லத்துக்கு தம்மை செல்லுமாறு கூறினார்.

அங்கு சென்ற போது முதலமைச்சர் தம்மை தகாத வார்த்தைகளால் திட்டினார். அவர் பேசியதை பொறுத்துக்கொள்ள முடியாமல் மண்டியிட்டுக் கும்பிட்டேன்.

எனக்கு அது வேதனையாக இருக்கின்றது. என்னுடைய சமூகத்திற்காகவே நான் அவரிடம் மண்டியிட்டேன். இன்று என்னுடைய சமூகமே ஏன் மண்டியிட்டு கும்பிட்டீர்கள் என கேட்கின்றது.

என்னுடைய வேலை இல்லாமல் போனாலும் பரவாயில்லை. இதற்கு ஒரு தீர்வு காணப்பட வேண்டும். என்னிடம் நிறைய ஆவணங்கள் இருக்கின்றன.

வழக்கு தொடுத்தாலும் பரவாயில்லை. என்னுடைய சமூகத்திற்கான அதற்கும் முகம்கொடுக்க தயாராகவே இருக்கின்றேன்” என அதிபர் மேலும் கூறியுள்ளார்.