பிராமண சமூகத்தில் பிறந்து மயானத்தில் வேலை!

முட்டை வாடை கூட பிடிக்காத தமக்கு பிணவாடை பழகியது எப்படி என உணர்ச்சி பொங்க விவரிக்கிறார் மயான மேலாளர் ஜெயந்தி.

தமிழகத்தின் திருச்சியில் பிராமண குடும்பத்தில் மூன்றாவது மகளாக பிறந்தவர் ஜெயந்தி, பொருளாதாரத்தில் எம்.ஏ பட்டம் பெற்றுள்ள ஜெயந்தி, வேறு சமூகத்தைச் சேர்ந்தவரை காதலித்து திருமணம் செய்து கொண்டவர்.

திருமணத்திற்கு பின் குடும்ப வறுமையின் காரணமாக உறவினர்களின் எதிர்ப்பை மீறி நாமக்கல் நகராட்சி மின் மயானத்தில் பூங்கா பராமரிப்பு பணியில் இணைந்துள்ளார்.

அதன்பின் அந்த மயானத்தில் சடலங்கள் எரிக்கும் பணிக்கு ஆள் தேவைப்பட்டதால், அந்த பணியை தாமே செய்வதாக அதிகாரிகளிடம் முறையிட்டு அந்த பணியை பெற்றுள்ளார் ஜெயந்தி.

2013-ஆம் ஆண்டு நாமக்கல் நகராட்சி மின் மயானத்தின் சடலங்களை எரிக்கும் ஆப்பரேட்டராக பொறுப்பேற்றுக் கொண்ட அவர், “முட்டை வாடை கூட பிடிக்காத எனக்கு, தற்போது பிண வாடை எல்லாம் சகஜமாகிவிட்டது” என ஒரு பத்திரிக்கைக்கு பேட்டி அளித்தது பிரபலமானது.

மேலும், சடலங்களை எரிக்கும் பணியில் ஈடுபடுவது, கடவுளுக்கு செய்யும் பணிக்கு ஈடாக கருதி வேலை செய்கிறேன். தற்போது என் கணவரும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றும் ஜெயந்தி கூறியுள்ளார்.

 

 

இதுவரை 2800 சடலங்களை மின்மயானத்தில் தகனம் செய்துள்ள ஜெயந்தியின் அச்சமில்லாத துணிச்சலை பாராட்டி, தமிழக அரசு சார்பில் ‘கல்பனா சாவ்லா’ விருது வழங்கி அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

‘செய்யும் தொழிலே தெய்வம்’ என்ற பழமொழியை பின்பற்றி சிறப்பாக பணியாற்றிய ஜெயந்திக்கு, அண்மையில் அதே மயானத்தின் மேலாளராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.