இந்தியாவும், இஸ்ரேலும் ஒன்பது மாத இடைவெளியில் சுதந்திரம் பெற்ற நாடுகள். இந்தியா 1947 ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திரம் பெற்றால், இஸ்ரேல் 1948, மே 14இல் சுதந்திரம் பெற்றது.
அரபு நாடுகளால் எழுப்பப்பட்ட கடுமையான ஆட்சேபனைகளுக்கு மத்தியில் இஸ்ரேல் சுதந்திர நாடானது. தன்னை ஒரு நாடாக உலகம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக இஸ்ரேல் போராடியது.
1948 மே 14ஆம் தேதியன்று இஸ்ரேல் சுதந்திர நாடாக அறிவிக்கப்பட்டபோது, ஐக்கிய நாடுகள் சபை அதே நாளில் இஸ்ரேலை அங்கீகரித்தது.
இஸ்ரேல் சுதந்திரம் பெற்ற அன்றே அதை அப்போதைய அமெரிக்க அதிபர் ஹாரி எஸ். ட்ரூமன் அங்கீகரித்தார். டேவிட் பென் க்யூரியான் இஸ்ரேலின் முதல் பிரதமராக பதவியேற்றுக்கொண்டார். இஸ்ரேலின் நிறுவகராகவும் அவர் அறியப்படுகிறார்.
அப்போது இந்தியா இஸ்ரேலுக்கு எதிராக இருந்தது. பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் உருவாக விரும்பாத இந்தியா அதற்கு எதிராக ஐ.நா.வில் இந்தியா வாக்களித்தது.
ஆனால் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் என இரண்டு நாடுகளை உருவாக்கும் முன்மொழிவு ஐ.நா சபையில் மூன்றில் இரண்டு பங்கு அறுதிப் பெரும்பான்மையுடன் நிறைவேறியது.
முதல் உலகப் போரின் போது பிரிட்டிஷ் அரசாங்கத்தால் பால்ஃபோர் பிரகடனம் வெளியிடப்பட்டது.
1917 நவம்பர் இரண்டாம் தேதியன்று வெளியிட்ட இந்த பிரகடனத்தின்படி, பாலஸ்தீனத்தில் “யூத மக்களுக்கான நாட்டை” நிறுவுவதற்கான தனது ஆதரவை பிரிட்டன் அறிவித்தது.
முதலில் எதிர்த்த இந்தியா, பின்னர் அங்கீகாரம் வழங்கியது
பால்ஃபோர் பிரகடனத்தை அமெரிக்கா ஆதரித்தாலும், அன்றைய அமெரிக்க அதிபர் ஃப்ராங்க்ளின் டி. ரூஸ்வெல்ட் அரபு நாட்டு மக்கள் மற்றும் யூதர்களைக் கலந்தாலோசிக்காமல் அமெரிக்கா இது தொடர்பாக எந்தவிதத்திலும் தலையிடாது என்று கூறிவிட்டார்.
இறுதியாக, 1950 செப்டம்பர் 17அன்று, இஸ்ரேலை இறையாண்மை நாடு என்பதை இந்தியா அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்தது. அதன்பிறகு, 1992இல் இஸ்ரேலுடன் ராஜிய உறவுகளை இந்தியா தொடங்கியது.
இஸ்ரேல் விடயத்தில் இந்தியா மற்றும் நேருவின் நிலைப்பாட்டை பட்டவர்த்தனமாக்கியது உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் நேருவுக்கு எழுதிய ஒரு கடிதம். இஸ்ரேலுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று கடிதம் மூலம் தூது விட்ட ஐன்ஸ்டீனின் கோரிக்கையை நிராகரித்தார் நேரு.
ஐன்ஸ்டீன் நேருவுக்கு எழுதிய கடிதம்
இஸ்ரேலுக்கு ஆதரவளிக்கவேண்டும் என்று நேருவுக்கு கடிதம் எழுதவேண்டும் என்று விஞ்ஞானிக்கு எப்படி தோன்றியது? இஸ்ரேலை உருவாக்குவதில் அவருக்கு என்ன ஆர்வம்?
மத்திய கிழக்கு விவகாரங்களின் நிபுணர் கமர் ஆகா கூறுகிறார், “ஐன்ஸ்டீன் ஒரு யூதர். ஐரோப்பாவில் யூதர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட அட்டூழியங்களை அவர் கண்டார். யூதர்களின் படுகொலைகளுக்கு ஐன்ஸ்டீன் நேரடி சாட்சி”.
அவர் மேலும் கூறுகிறார், “1948 இல் இஸ்ரேல் உருவாவதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்தாலும் பிறகு 1950 இல் அங்கீகரித்தது.
இடைப்பட்ட இரண்டு ஆண்டுகளில், இஸ்ரேலின் இருப்பை ஏற்றுக்கொள்ளும் மனமாற்றம் நேருவுக்கு எப்படி ஏற்பட்டது என்ற கேள்வி எழுகிறது”.
“யூதர்களுக்கு எதிரான கொடுமைகள், அட்டூழியங்களின் வலி மற்றும் வேதனையை நேரு அறிந்திருந்தார்.
அவர் எதிர்த்தது பாலஸ்தீன பிரிவினையையே, யூதர்களை அல்ல. மேலும், இஸ்ரேல் உருவான சமயத்தில், பிரிவினையால் ஏற்பட்ட பிரச்சனைகளை இந்தியா நேரடியாக அனுபவித்துக் கொண்டிருந்தது” என்பதே நேருவின் இஸ்ரேல் எதிர்ப்பு நிலைப்பாட்டுக்கு காரணம் என்கிறார் கமர் ஆகா.
பிரிவினை பிரச்சனைகளை, சிக்கல்களை, கொடுமைகளை இந்தியாவில் நிதர்சனமாய் கண்ட நேரு, அதனால் லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாவார்கள் என்பதை புரிந்துக்கொண்டார். பிரிவினைத் தீயில் இந்தியா வெந்துக் கொண்டிருந்த நிலையில், மற்றொரு பிரிவினைக்கு ஆதரவளிப்பது சாத்தியமா?” என்று கேள்வி எழுப்புகிறார் கமர் ஆகா.
முதல் பார்வையில் காதல் மலரவில்லை
இந்தியாவும் இஸ்ரேலும் தற்போது நெருங்கிய நண்பர்களாக இருந்தாலும், இஸ்ரேல் என்ற நாடு உருவானதுமே அதை நட்பு நாடாக இந்தியா ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை வரலாறு சுட்டிக்காட்டுகிறது.
1950 இல், இந்தியா இஸ்ரேலை அங்கீகரித்தாலும், அதன்பின் 42 ஆண்டுகளுக்கு பிறகே, 1992ஆம் ஆண்டில் காங்கிரஸ் ஆட்சியில் பிரதமர் பி.வி. நரசிம்ம ராவ் இரு நாடுகளுக்கும் ராஜிய ரீதியிலான உறவுகளுக்கு அச்சாரம் இட்டார்.
இன்றும் இஸ்ரேலை ஏற்றுக்கொள்ளாத நாடுகள் உள்ளன. இஸ்லாமிய நாடுகளில் ஜோர்டான் மற்றும் எகிப்து தவிர வேறு நாடுகள் எதுவும் இஸ்ரேலுடன் உறவு வைத்துக் கொள்ளவில்லை.
ஐன்ஸ்டீன் யூத மதத்திற்கு பெரும் ஆதரவாளராக இல்லை என்றாலும், யூதர்களுக்காக ஒரு தனி நாட்டை உருவாக்கும் கோரிக்கையை முன்னெடுத்தார் அவர்.
அப்படியொரு நாடு உருவாகினால், யூதர்களும், அவர்களின் கலாசாரமும் பாதுகாக்கப்படும் என்று நம்பிய ஐன்ஸ்டீன், தாய்நாடு என்று சொல்லிக்கொள்ள நாடு எதுவும் இல்லாமல் உலகம் முழுவதும் சிதறிப்போயிருக்கும் யூத அகதிகளுக்கு நம்பிக்கையும், பாதுகாப்பும் கிடைக்கும் என்று நம்பினார்.
இஸ்ரேல் மீதான ஐன்ஸ்டீனின் காதலுக்கு காரணம் என்ன?
அரேபியர்களும், யூதர்களும் இஸ்ரேலில் ஒன்றாகவே இருக்க வேண்டும் என்று விரும்பினர் ஐன்ஸ்டீன்.
அவர் யூத தேசத்தின் ஆதரவாளராகவும் இருக்கவில்லை. இஸ்ரேல் அதிபராக தன்னை முன்மொழிந்த இஸ்ரேலின் முதல் பிரதமர் பென் க்யூரியவின் விருப்பத்தையும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் நிராகரித்தார்.
யூதர்களின் சரித்திரத்தை முழுமையாக அறிந்திருந்த நேரு இஸ்ரேல் விவகாரம் பற்றி பலவிதமாக சிந்தித்தவர்.
ஐரோப்பாவில் யூதர்களுக்கு நடைபெற்ற கொடுமைகளை பற்றி அறிந்திருந்த நேரு, அதை எதிர்த்து எழுதினார், தொடர்ந்து குரல் எழுப்பினார்.
ஆனால் பாலஸ்தீனத்தை பிரிப்பதில் நேருவுக்கு உடன்பாடில்லை. பல நூற்றாண்டுகளாக அரேபியர்கள் பாலஸ்தீனத்தில் வாழ்ந்து வருவதாக கூறிய அவர், யூத நாடு உருவாகினால் அவர்கள் அங்கிருந்து அகற்றப்படுவார்கள் என்று அஞ்சினார். இதையே ஐன்ஸ்டீனின் கடிதத்திற்கு பதிலாக்கினார்.
1947 ஜூன் 13ஆம் தேதியன்று ஐன்ஸ்டீன் நேருவுக்கு எழுதிய நான்கு பக்க கடிதத்தில், இந்தியாவில் தீண்டாமையை ஒழித்ததற்கும், நேருவின் நவீன கருத்துக்களுக்கும் அவர் பாராட்டு தெரிவித்திருந்தார்.
அதோடு, உலகின் பல இடங்களிலும் யூதர்களுக்கு எதிராக பாகுபாடு காட்டப்படுவதையும், அவர்களுக்கு எதிரான கொடுமைகள் நடைபெறுவதையும் சுட்டிக்காட்டினார்.
ஐன்ஸ்டீனின் கோரிக்கையை நேரு ஏற்கவில்லை
நேருவுக்கு ஐன்ஸ்டீன் எழுதிய கடிதத்தின் சாராம்சம் இது: “யூதர்கள் பல நூற்றாண்டுகளாக நாடில்லா நாடோடிகளாக இருக்கிறார்கள், லட்சக்கணக்கான யூதர்கள் அழிக்கப்பட்டிருக்கிறார்கள்.
அவர்கள் பாதுகாப்பாக உணரக்கூடிய இடம் உலகில் எங்கும் இல்லை. உங்களுடைய சமூக மற்றும் தேசிய விடுதலை இயக்கத்தை போன்றதே யூதர்களின் இயக்கமும். நீங்கள் யூதர்களுக்கு ஆதரவு கொடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.”
கடிதங்கள் எழுதுவதில் புகழ்பெற்ற நேரு, ஐன்ஸ்டீனின் கடிதத்திற்கு ஒரு மாதம்வரை பதிலளிக்கவில்லை. பிறகு எழுதிய கடிதத்தில், “யூதர்களைப் பற்றி என் மனதில் ஆழமான உணர்வுகள் இருக்கின்றன, அதே நேரத்தில் அரேபியர்கள் பற்றியும் நான் அனுதாபம் கொள்கிறேன்.
யூதர்கள் பாலஸ்தீனத்தில் செய்துள்ள அற்புதமான பணியையும் நான் அறிவேன். அங்கு வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதில் யூதர்களின் மகத்தான பங்களிப்பையும் மதிக்கிறேன்.
ஆனால் இத்தனைக்கு பிறகும் அரபு நாடுகளில் யூதர்கள் மீது நம்பிக்கை ஏன் ஏற்படவில்லை? என்ற கேள்வி என் மனதில் தொடர்ந்து எழும்புகிறது”.
இந்த கேள்வியை எழுப்பிய நேரு மேலும் விரிவாக தனது மறுப்பை பதிவு செய்தார். “யூதர்களின் நிலைமைக்கு “ஆழ்ந்த அனுதாபத்தை” தெரிவிக்கும் இந்தியா, யூதர்களுக்கு எந்த விதத்திலும் உதவி செய்ய தயார்.
எது எப்படியிருந்தாலும், எந்த நாட்டின் “தேசியக் கொள்கைகளும்” அடிப்படையில் “சுயநல கொள்கைகளே” என்பதை மறுக்கமுடியாது”.
இறுதியாக 1950ஆம் ஆண்டில் இஸ்ரேலை அங்கீகரித்த நேரு, அரேபிய நாடுகளுடன் நெருங்கிய நட்பு பாராட்டும் இந்தியா, அவர்களை எதிர்க்கவேண்டாம் என்பதால் இஸ்ரேல் உருவாவதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாக குறிப்பிட்டார்.
நேருவின் அரபுக் கொள்கை இந்தியாவிற்கு நன்மை தந்ததா?
அரபு நாடுகளுக்கு நண்பனாக இருந்த இந்தியாவிற்கு அதனால் கிடைத்த பலன் என்ன?
1974 டிசம்பர் 22, தேதியிட்ட நியூயார்க் டைம்ஸில் வெளியான செய்தி இது: “1965 மற்றும் 1971 இல் பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கு போர் மூண்டபோது, நேரு இஸ்ரேலை அங்கீகரித்தற்கான பதிலை அரபு நாடுகள் கொடுத்தன.
இஸ்லாமிய நாடான பாகிஸ்தானுக்கு ஆதரவளித்த அரபு நாடுகள், நேருவின் இஸ்ரேல் அங்கீகாரத்திற்கு தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தின”.
அப்போது இந்திய அரசியல் துறை பேராசிரியராக பணியாற்றிய அடார்கர் ஒரு கட்டுரையில் இது குறித்து இவ்வாறு மேற்கோளிட்டுள்ளார், “அரபு நாடுகளுடனான நட்பு இந்தியாவுக்கு என்ன கொடுத்தது? நமது நியாய உணர்வை அவை மதிக்கவில்லை அல்லது எந்தவித அரசியல் லாபமும் இந்தியாவுக்கு கிடைக்கவில்லை.”
1962ஆம் ஆண்டு இந்தியா மீது சீனா படையெடுத்தபோது, நேரு இஸ்ரேலின் உதவியை நாடினார். அரபு நாடுகளுடன் நேரு வெளிப்படையான இணக்கத்தை காட்டினாலும், நேரு இஸ்ரேலிடம் உதவி கோர தயங்கவில்லை.
ஜெருசலேமில் உள்ள இஸ்ரேலிய ஆவண காப்பகத்தின் ஆவணங்களின் படி, 1962-ல் இந்தியா-சீனா போர் உச்சக்கட்டத்தில் இருந்தபோது, இஸ்ரேல் பிரதமர் டேவிட் பென் க்யூரியன் நேருவுக்கு ஆதரவு அளித்ததோடு, இந்தியப் படைகளுக்கு ஆயுதங்களை வழங்க முன்வந்தார்.
இஸ்ரேலின் கொடி இல்லாத கப்பல்கள் மூலம் கடல் வழியாக ஆயுதங்களைக் அனுப்பவேண்டும் என்று இந்தியா விரும்பியது,
ஆனால் இஸ்ரேலியக் கொடி இல்லாமல் ஆயுதங்களை அனுப்ப முடியாது என்று இஸ்ரேல் மறுத்துவிட்டது என்று அந்த ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
செளதி அரேபியா மற்றும் பஹ்ரைனில் இந்தியத் தூதராக பணியாற்றிய தல்மிஜ் அகமதின் கருத்துப்படி, “பாகிஸ்தான் மற்றும் இந்தியாவிற்கு இடையேயான போர், பனிப்போராக நடைபெற்றது.
அப்போது அமெரிக்காவும் இந்தியாவுக்கு எதிராக இருந்தது. 1971ஆம் ஆண்டில், அரபு நாடுகளும் பிரிந்தன. அந்த நேரத்தில் முடியாட்சி நாடுகள் அமெரிக்காவுக்கு ஆதரவாகவும், இடதுசாரி நாடுகள் ரஷ்யாவுக்கு ஆதரவாகவும் இருந்தன.
இரான், அமெரிக்காவுக்கு வெளிப்படையாக ஆதரவளித்தது. அமெரிக்கா பாகிஸ்தானை ஆதரித்தது. இவை பாகிஸ்தானை கூட்டாளியாக கருதின. அந்த சமயத்தில் உலகம் இரண்டு பிரிவுகளாகப் பிரிந்திருந்தது.
இந்து, இஸ்லாம் என்ற மத வேறுபாடுகள் எதுவும் இல்லை, அடிப்படையிலேயே கொள்கைரீதியாக உலக நாடுகள் பிரிந்திருந்தன என்பது முக்கியமான ஒன்று” என்று விரிவாக வரலாற்றை விவரிக்கிறார் பேராசிரியர் தல்மிஜ் அகமத்.