மைத்திரியை தூண்டும் சந்திரிக்கா!

நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவை தோற்கடித்து, அவரை அரசியலில் இருந்து முற்றாக துடைத்தெறிய போவதாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கம்பஹா மாவட்டத்தை சேர்ந்த கூட்டு எதிர்க்கட்சியின் சில நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் அவர் இதனை கூறியுள்ளார்.

“எமக்கு எதிராக சந்திரிக்காவே மைத்திரியை தூண்டி விடுகிறார். அவர் அரசியலில் இருந்தால், எமக்கு அரசியல் எதிர்காலம் இல்லை. இதனால், சந்திரிக்காவை தோற்கடிக்க அத்தனகல்லையில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு ஆதரவான 5 குழுக்களை தேர்தலில் களமிறக்கியுள்ளேன். 5 குழுக்கள் வாக்குகளை பிரித்தால் சந்திரிக்காவின் அணி தோல்வியடைந்து விடும்” என பசில் ராஜபக்ச கூறியுள்ளார்.

gYZ1Khuமேலும் அத்தனகல்லைக்கு சென்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் அணியை தோற்கடிக்க வேலைகளை செய்யுமாறும் பசில் கம்பஹா மாவட்டத்தை சேர்ந்த கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

கடந்த 1948 ஆம் ஆண்டு முதல் பண்டாரநாயக்கவினர் அல்லது அவர்களின் ஆதரவை பெற்றவர்கள் மற்றும் அணிகளே அத்தனகல்லை தொகுதியில் வெற்றி பெற்று வந்துள்ளனர். இதன் காரணமாகவே பசில் ராஜபக்ச அந்த தொகுதி மீது முக்கிய கவனம் செலுத்தியுள்ளார்.

இதனால், அத்தனகல்லை தொகுதியில் பசில் ராஜபக்ச அதிகளவில் பணத்தை செலவிட்டு, அந்த தொகுதி எங்கும் கடும் பிரசாரங்களை முன்னெடுத்து வருகிறார்.

அதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் கம்பஹா மாவட்ட தலைவியான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, உள்ளூராட்சி சபைத் தேர்தல் வெற்றிக்காக அத்தனகல்லை தொகுதி முழுவதும் கூட்டங்களை நடத்தி மீண்டும் செயற்பாட்டு ரீதியான அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த தேர்தலின் பின்னர் செயற்பாட்டு ரீதியான அரசியலில் இருந்து விலகி சுதந்திரமான பிரஜையாக சமூக சேவையில் ஈடுபட போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.