அதிபரை மண்டியிட வைத்த ஊவா மாகாண முதலமைச்சருக்கு எதிராக விசாரணை!!

பதுளை தமிழ் மகளிர் பாடசாலை ஒன்றின் பெண் அதிபரை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பாக ஊவா மாகாண முதலமைச்சருக்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.இதற்கு அமைய சம்பந்தப்பட்ட பாடசாலை அதிபரிடம் வாக்குமூலம் பெற்றுக்கொண்டுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணைகளை நடத்தி அறிக்கை ஒன்றை சமர்பிக்க உள்ளதாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழு கூறியுள்ளது.ஊவா மாகாண முதலமைச்சரின் கடிதம் ஒன்றுக்கு அமைய மாணவி ஒருவரை பாடசாலையில் சேர்த்து கொள்ளவில்லை என்ற காரணத்தினால் முதலமைச்சர், அதிபரை அச்சுறுத்தியுள்ளார்.

கடந்த 2 ஆம் திகதி ஊவா மாகாண முதலமைச்சரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் முதலமைச்சரின் அச்சுறுத்தல் காரணமாக அவரிடம் மண்டியிட்டு மன்னிப்பு கோரியதாக பாடசாலை அதிபர் நேற்று கூறியிருந்தார்.

இதேவேளை முதலமைச்சர் தன்னை அச்சுறுத்தவில்லை என பாடசாலை அதிபர் இதற்கு முன்னர் கூறியிருந்தார்.தனக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் காரணமாகவே தான் அப்படி கூறியதாக நேற்று அதிபர் குறிப்பிட்டிருந்தார்.