இலங்கை வான்பரப்பின் விமான ஓடுபாதை மூடப்பட்டிருந்தமை காரணமாக சிங்கப்பூர் மற்றும் கோலாலம்பூர் நோக்கி பயணித்த எத்தியோப்பிய விமானம் ஒன்று சென்னைக்கு திருப்பி அனுப்பப்பட்டதாக தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
எத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபாவிலிருந்து நேற்று முன்தினம் சிங்கப்பூர் மற்றும் கோலாலம்பூர் நோக்கிப் பயணித்த EV368 ரக விமானம், சென்னைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் இந்தியாவின் ஒடிசா மாநிலத்திலிருந்து அக்னி-5 ஏவுகணை சோதனையை மேற்கொண்டிருந்தது.
அக்னி-5 ஏவுகணை பரிசோதனை காரணமாக இலங்கை வான்பரப்பின் விமான ஓடுபாதை குறித்த காலப்பகுதியில் சில மணிநேரங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டிருந்ததாக அந்த ஊடகம் தெரிவித்திருக்கிறது.
எனினும், இதனால், இலங்கைக்கு பயணித்த விமானப் பயணங்களில் எதுவும் மாற்றம் ஏற்பட்டிருக்கவில்லை. எவ்வாறாயினும் இந்த இடைநிறுத்தம் சிறு நேரத்தில் வழமைக்கு வந்ததாக தெரியவந்துள்ளது.
இதேவேளை இது குறித்து கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து எந்தவிதமான உத்தியோகபூர்வ தகவல்கள் எவையும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.