ஹம்பாந்தோட்டையில் நடப்பது என்ன?

இலங்கையை மையமாகக் கொண்டு சீனா தனது திட்டத்தை வகுத்து வருவது ஆபத்தானது என ஜப்பானிய கூட்டுப்படைகளின் தளபதி அட்மிரல் கட்சுரோஷி கவானோ எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Hambantota-port-1021x563இந்தியத் தலைநகர் புதுடில்லியில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதில் அளித்துக் கருத்துரைத்த அவர்,

கடந்த ஓகஸ்ட் மாதம் டிஜிபோட்டியில், சீனாவின் முதலாவது கடல் கடந்த கடற்படைத் தளம் திறக்கப்பட்டுள்ளது. இலங்கையில் ஹம்பாந்தோட்டை துறைமுகம், 99 ஆண்டு குத்தகைக்காக சீனாவுக்கு கடந்த டிசெம்பரில் வழங்கப்பட்டுள்ளது.

டிஜிபோட்டியில் உள்ள சீன கடற்படைத் தளம் இந்தியப் பெருங்கடலில், அந்த நாட்டின் கடல் நடவடிக்கைகளுக்கு வெளிப்படையாகவே உதவியாக இருக்கும்.

மெடிட்ரேரியன் கடலைச் சுற்றிய பகுதிக்கு இலகுவாகச் சென்றடையும் வகையில், சீன கடற்படை தனது செயற்பாடுகளை உறுதியாக விரிவுபடுத்திக் கொண்டிருக்கிறது.

இதேவேளை, இந்தியாவைச் சுற்றி கட்டமைப்புகளை உருவாக்குவதற்காக சீனா தனது நிதியை முதலீடு செய்து வருகிறது. பிராந்தியத்தில் தனது இராணுவத் தளங்களின் வலையமைப்பை உறுதியாக விரிவுபடுத்திக் கொண்டிருக்கிறது.

சீனாவின் கடற்படை விரிவாக்க மூலோபாயத்துக்கு உதவும் கட்டமைப்புகளுக்கு உதாரணமாக, பாகிஸ்தானின் குவடார் துறைமுகம், சீனாவின் முதலீட்டுடன் செயற்படுத்தப்பட்டு வருகிறது.

இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகம் ஒரு வர்த்தக கட்டுமானமே என்று இலங்கை அரசாங்கமும், சீனாவும் கூறுகின்றன.

ஆனால், 99 ஆண்டு குத்தகை என்பது சீனாவின் இராணுவ முன்னெடுப்புக்கான காத்திரமான நகர்வாகவே மாற்றியுள்ளதாகவே நாம் பார்க்கிறோம்.

சீனா தனது கடல் கடந்த இரண்டாவது தளத்தை தெற்காசியாவில் ஹம்பாந்தோட்டையில் கட்டியெழுப்பினால், சீன கடற்படையின் ஆற்றல்கள் புதிய மட்டங்களுக்கு அதிகரிக்கக் கூடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார் அவர்.

இத்தகைய விநியோக வசதிகளை பயன்படுத்தினால், சீனக் கடற்படைக் கப்பல்கள் தமது நாட்டுக்குத் திரும்பாமல் நீண்ட காலத்துக்கு இந்தியப் பெருங்கடலில் தங்கியிருக்க முடியும்.

சீனா தனது அணுசக்தி நீர்மூழ்கிகள் மற்றும் கடற்படைக் கப்பல்களை அண்மைய ஆண்டுகளாக இந்தியப் பெருங்கடலில் தொடர்ச்சியாக நிறுத்தி வருகிறது.

எமது முக்கியமான கப்பல் பாதைகள் இந்திய பெருங்கடல் மற்றும் தென் சீனக்கடல் வழியாகவே இருக்கின்றன. இந்தப் பிராந்தியத்தில் சீனாவின் கடற்படை விரிவாக்கத்தை எதிர்கொள்ளும் வகையில், அமெரிக்கா, அவுஸ்ரேலியா, இந்தியா ஆகிய நாடுகளுடன் ஜப்பான் இணைந்து பணியாற்றும்.

தற்போதுள்ளது போன்ற சீனாவின் இராணுவ செலவின விரிவாக்கம், தொடர்ந்தால், ஜப்பான் தீவிரமான பாதுகாப்பு அச்சுறுத்தலை எதிர்கொள்ளும். அந்தச் சூழலைக் கணிக்க முடியாது.

சீனாவின் இந்த எல்லை விஸ்தரிப்பான திட்டம் பெரும் அச்சுறுத்தலாக நமக்கு மாறிவிடும். ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை 99 ஆண்டுகளுக்கு குத்தகை எடுத்திருக்கிறது சீனா. இது அபிவிருத்திக்கானது என்று சொல்கிறது இல்லை.

ஆனால் 99 ஆண்டுகளில் சீனாவின் போர்க் கப்பல்கள் இலங்கையில் தரித்து நின்றால் ஆசியாவில் பெரும் அச்சுறுத்தலாக அமையும் என்றார்.