படுகொலை செய்யப்பட்ட தினத்துக்கு முன்தினம் : லசந்தவின் அலுவலகத்தை வட்டமிட்ட புலனாய்வாளர்கள்!!

சண்டே லீடர் பத்­தி­ரி­கையின் முன்னாள் ஆசி­ரியர் லசந்த விக்­ர­ம­துங்­க படுகொலை செய்யப்பட்ட 2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9 ஆம் திகதிக்கு முதல் நாள், அவரது அலுவலகத்தை மருதானை திரிப் போலி இராணுவ புலனாய்வு முகாமைச் சேர்ந்த இராணுவ புலனாய்வாளர்கள்  சிலர் வட்டமிட்டமை தாம் இதுவரை முன் னெடுத்துள்ள விசாரணைகளில் உறுதியாகியுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவு நீதிமன்றுக்கு நேற்று அறிவித்தது.

1515393731782லசந்த விக்ரமதுங்க படுகொலை தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுக்கும் குழுவின் பிரதானிகளில் ஒருவரான குற்றப் புலனாயவுப் பிரிவின் பொலிஸ் பரிசோதகர் சுதத் குமார இதனை கல்கிசை நீதிவான் மொஹம்மட் மிஹாலுக்கு அறிவித்தார்.

அத்துடன் இந்தகொலை இடம்பெற்ற காலப்பகுதியில் அது தொடர்பில் விசாரணை செய்த கல்கிசை பொலிஸாரும் அதன் பின்னர் விசாரித்த பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரும் (ரி.ஐ.டி.) கொலையாளிகளைக் கண்டுபிடிக்க விசாரணைகளை செய்யாது சாட்சியங்களை அழிக்கவே விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை தற்போதையன் விசாரணைகள் ஊடாக வெளிப்படுத்தப்ப்ட்டுள்ளதாகவும் அவர் நீதிவானுக்கு விஷேட மேலதிக விசாரணை அறிக்கையை சமர்பித்து தெரியப்படுத்தினார்.

லசந்த விக்ரமதுங்க படு கொலை விவகாரம் தொடர்பிலான வழக்கு விசாரணைகள் நேற்று காலை, கல்கிசை நீதிவான் மொஹம்மட் மிஹால் முன்னிலையில் இடம்பெற்றது.

இதன்போது நீதிமன்றில் மேலதிக விசாரணை அறிக்கையை முன்வைத்த பொலிஸ் பரிசோதகர் சுதத் குமார, பின்வருமாறு நீதிமன்றில் கருத்துக்களை முன்வைத்தார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நாம் இந்த படு கொலை தொடர்பிலான விசாரணைகளை கையேற்று ஆரம்பித்தோம்.

அதன்படி தற்போது வரை 950 வாக்கு மூலங்களை நாம் பதிவு செய்துள்ளோம். அதில் 295 பேர் இராணுவ புலனாய்வாளர்களாவர். இவர்களின் கையெழுத்து மற்றும் கைவிரல் ரேகைகளும் பெறப்பட்டுள்ளன.

குறிப்பாக சசந்தவின் காரில் இருந்த சந்தேகிக்கத்தக்க கைவிரல் ரேகை அடையாளத்துடன் இவர்களின் கை ரேகையும், லசந்தவை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்ற நபர்களின் கைரேகைகளையும் நாம் ஒப்பீடு செய்தோம். எனினும் அவை அதனுடன் ஒத்துப் போகவில்லை.

இந்நிலையில் லசந்த விக்ரமதுங்கவின் காரை குறித்த தினம் பின் தொடர்ந்த தொலைபேசி இலக்கம் ஒன்றினை மையப்படுத்தியே விசாரணைகள் செல்கின்றன.

அந்த இலக்கமானது மருதானை திரிப்பொலி புலனாய்வு முகாமுக்குரிய இலக்கமாகும். இந் நிலையில் இந்த விவகாரத்தில் ஆரம்பத்தில் விசாரணைகளை முன்னெடுத்த பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் 17 இராணுவ புலனாய்வாளர்களைக் கைது செய்திருந்தனர்.

பின்னர் அவர்களை விடுதலையும் செய்தனர். இந்நிலையில் அவர்கள் எதற்காக கைது செய்யப்பட்டனர், ஏன் விடுவிக்கப்பட்டனர், அவர்களுக்கும் இக்கொலைக்கும் இடையிலான தொடர்பு என்ன என்பது குறித்து தற்போது தீவிர விசாரணை இடம்பெறுகின்றது.

எல்லாவற்றைனையும் விட, லசந்த கொலை செய்யப்பட்ட தினத்துக்கு முதல் தினம் அவரது அலுவலகம் அமைந்திருந்த பகுதியில் மருதானை திரிபொலி புலனாய்வு முகாம் உறுப்பினர்கள் சிலர் வட்டமிட்டு தகவல் சேகரித்தமை தொடர்பில் தகவல்கள் விசாரணைகளில் உறுதியாகியுள்ளது.

இதனைவிட, லசந்த கொலை செய்யப்பட்ட தினம், முதலில் தனது மனைவி சொனாலியைப் பார்க்கச் சென்றுள்ளார்.

அங்கிருந்து மீள அலுவலகம் வரும் போதே கொலை செய்யப்பட்டுள்ளார். இந் நிலையில் அந்த பாதைகளின் இரு மருங்கிலும் அபோது இருந்த சி.சி.ரி.வி. கமரா பதிவுகளைப் பெற்றும் விசாரணை நடக்கின்றது.

குறித்த பதிவுகள் முதலில் மொறட்டுவ பல்கலைக்கு அனுப்பட்ட போதும், அவர்களால் அதனை மீளப் பெற முடியாது என அறிவித்துள்ளனர்.

அந்த கமராக்களை ஆய்வு செய்யும் பொறுப்பு தற்போது ‘சேர்ட்’ நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதன் அறிக்கை இன்னும் கிடைக்கவில்லை.

இதனைவிட லசந்தவை பின் தொடர்ந்த தொலைபேசி இலக்கம் பயன்படுத்தப்பட்ட தொலைபேசியை விற்பனைச் செய்தவர், கொள்வனவு செய்தவர் யார் என்பதை வெளிப்படுத்தவும் பழைய பற்றுச் சீட்டுக்களை ஆராய்ந்து விசாரணை செய்து வருகின்றோம்.

அத்துடன் லசந்த விக்ரமதுங்கவின் கொலை இடம்பெற்ற போது, அங்கிருந்த அவரது காருக்குள் இருந்து அவரது குறிப்புப் புத்தகம் உள்ளிட்டவையை கல்கிசை பொலிஸ் நிலையத்தின் அப்போதைய உப பொலிஸ் பரிசோதகர் வீரசிங்க வழக்குப் பொருளாகவே எடுத்துள்ளமையும், பின்னர் பொலிஸ் புத்தகத்தில் அவர் இட்ட பதிவுகள் கிழிக்கப்பட்டு புதிய பதிவுடன் கூடிய பக்கம் ஒட்டப்பட்டுள்ளமையும் விசாரணையில் தெரியவந்தது.

அந்த ஒட்டப்பட்ட பக்கம் போலி ஆவணம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அது தொடர்பிலான விசாரணைகள் வேறாக முன்னெடுக்கப்ப்ட்டுள்ளன.

அத்துடன் லசந்தவை தானே கொலை செய்ததாக கூறி கடிதம் எழுதிவிட்டு முன்னாள் புலனாய்வு துறை உறுப்பினர் ஜயமான்ன என்பவர் தற்கொலை செய்திருந்தார்.

அக்கடிதம் அவரால் எழுதப்பட்டதா என விசாரித்ததில் அது அவர் கையெழுத்து என்பது உறுதியானது. எனினும் அவர் லசந்த கொலையுண்ட திகதியில் கொழும்பிலேயே இருக்கவில்லை என்பது அவரது தொலைபேசி, வேறு அறிவியல் சான்றுகள் ஊடாக உறுதியாகியுள்ளது. அச்சமயம் அவர் கேகாலையில் இருந்துள்ளார்.

லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்ட பின்னர் முதலில் பிரேத பரிசோதனைச் செய்த வைத்தியர் சுனில் உடன் இணைந்து அதனை செய்த உதவி வைத்தியர்கள் யார் என்பதை கண்டறிய விசாரணைகள் இடம்பெற்றன.

அது தொடர்பில் 6 வாக்கு மூலங்கள் பெறப்பட்ட நிலையில் உதவி வைத்தியர்களின் விபரம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களை விசாரணை செய்த பின்னர் பிரதான வைத்தியரான சுனில் குமாரவிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படும்.

இதனைவிட கல்கிசை பொலிஸாரும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரும் லசந்த கொலையாளிகளைக் கண்டறிய விசாரணைகளைச் செய்யாது சாட்சிகளை அழிக்கும் நடவடிக்கைகளிலேயே ஈடுபட்டுள்ளமை இதுவரையான விசாரணை ஊடாக தெரியவந்தது என்றார்.

இதனையடுத்து பாதிக்கப்பட்ட தரப்பு சார்பில் மன்றில் ஆஜராகும் சிரேஷ்ட சட்டத்தரணி அத்துல எஸ். ரணகல, சாட்சிகளை அழிக்க முன்னாள் பொலிஸ் மா அதிபர் ஒருவர் முன்னின்று செயர்பட்டுள்ளதாகவும் தற்போதைய பொலிஸ் மா அதிபரும் இந்த விசாரணைகளில் கரிசனையற்றிருப்பதாகவும் கூறினார்.

இந்நிலையில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக வழக்கு எதிர்வரும் மார்ச் 15 வரை ஒத்தி வைக்கப்பட்டது.

நேற்று விசாரணைகள் இடம்பெற்ற சமயம், லசந்த கொலை வழக்கின் பிரதான சாட்சியைக் கடத்தியமை தொடர்பில் கைதான புலனாய்வுப் பிரிவின் சார்ஜன்ட் மேஜர் பிரேமானத்த உடலாகமவும் மன்றில் ஆஜராகியிருந்தார்.

கடந்த 2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9 ஆம் திகதி லசந்த விக்ரமதுங்க தனது அலுவலகத்துக்கு செல்லும் வழியில் கொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.