ரஷ்யாவுக்கான சிறிலங்காவின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவின் 94 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்கள் விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளதாக, நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினர், நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
2006ஆம் ஆண்டு உக்ரேனிடம் இருந்து, நான்கு மிக் 27 போர் விமானங்கள். கொள்வனவு செய்யப்பட்டபோது இடம்பெற்ற மோசடிகள் தொடர்பாக நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினர், விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பான வழக்கு கோட்டே நீதிவான் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
நேற்றைய வழக்கு விசாரணையின் போதே, தற்போது உக்ரேனில் மறைந்து வாழ்வதாக கூறப்படும் உதயங்க வீரதுங்கவின் 94 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்கள் பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளதாக நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினர்,தெரிவித்துள்ளனர்.
தொம்பேயில், 40 மில்லியன் ரூபா பெறுமதியான 8 ஏக்கர் நிலம், 25 மில்லியன் ரூபா பெறுமதியான ஒரு ஏக்கர் நிலம், பொரளையில் 29 மில்லியன் ரூபா பெறுமதியான ஆடம்பர அடுக்குமாடிக் குடியிருப்பு என்பன உதயங்க வீரதுங்கவுக்கு சொந்தமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினர், தெரிவித்துள்ளனர்.