தற்போதைய அரசாங்கத்தை பதவி இறக்கிவிட்டு மஹிந்த ராஜபக் ஷவை மீண்டும் நாம் ஆட்சிக்கு கொண்டு வரப்போகிறோமா?
அது ஒரு புத்திசாலித்தனமான முடிவாக இருக்கமுடியுமா என்பதை கருத்தில் கொண்டு மக்கள் இந்த தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட் சித் தலைவருமாகிய இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
திருகோணமலை நகரசபை, வேட்பாளர்களுடன் கூடிய மக்கள் கலந்துரையாடலொன்று நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை மாலை மட்டிக்களி ராஜவரோதயம் சதுக்கம் விநாயகபுரத்தில் நகரசபை அபயபுர வட்டார வேட்பாளர் தம்பிராஜா ராஜ்குமார் தலைமையில் நடைபெற்றது.
அதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இக்கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் க.துரைரெட்ண சிங்கம், முன்னாள் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி. தண்டாயுதபாணி, நகரசபை வேட்பாளர்களான த.ராஜ்குமார், ரமேஷ், என் ராசநாயகம், க. செல்வராஜா, திருமலை நவம், திருமதி. சரோஜினி, கோகிலராஜா, வ.ராஜ்குமார், தனராஜ், சே.ஸ்ரீஸ்கந்தராஜா மற்றும் பட்டணமும் சூழலும் பிரதேசசபை வேட்பாளர்களும் கலந்து கொண்டனர்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்;
“கொடிய ஆட்சியொன்றை இறக்கி, நல்லாட்சியொன்றைக்கொண்டு வந்தார்கள். அவ்வாட்சியை மாற்றிக் காட்டுவோமென சிலர் சூளுரைக்கின்றார்கள். அந்நிலைமை ஏற்படுமானால் யார் ஆட்சிக்கு வருவார்கள் என்பதை மக்கள் உணர்ந்து புத்திசாலித்தனமாக செயற்படவேண்டும்.
உள்ளூராட்சித் தேர்தல் முடிவடைந்த பின்பு இந்த நாட்டின் பிரதமர் கதிரையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ ஏறுவார் என்று முன்னாள் அமைச்சரும் எதிரணி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளதை பத்திரிகையில் படித்தேன்.
அதேபோல் நடைபெறவுள்ள இந்த உள்ளூராட்சி தேர்தலானது மிக முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில் தேர்தலின் முடிவுகள் இலங்கையில் தமிழீழம் உருவாகப் போகின்றதா? அல்லது ஒற்றையாட்சி தொடரப் போகின்றதா/ என்பதை தீர்மானிக்கப் போகிறது என்று முன்னாள் தலைவர் ஜனாதிபதி மஹிந்த கூறியிருந்தார்.
இதிலிருந்து தேர்தலின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ளவேண்டும் தமிழ் மக்கள். தமிழ்த் தேசியக்கூட்டமைப்பினர் அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் மக்களுடைய பிரச்சினைகளை நாம் தீவிரமாக கையாளவில்லையென்றும் எம்மீது குற்றச்சாட்டுகளை சுமத்த முயற்சிக்கின்றார்கள் அது தவறு.
நாங்கள் அரசாங்கத்தின் பங்காளிகளல்ல. நாங்கள் அரசாங்கத்தில் அமைச்சர் பதவிகளை ஏற்கவில்லை.
ஏற்கவும் மாட்டோம். தமிழ் மக்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வு காணும்வரை நாம் எதையும் ஏற்கப்போவதில்லை. அரசாங்கத்தின் பங்காளிகளாக இருக்கப்போவதுமில்லை.
உள்ளக சுயநிர்ணய அடிப்படையில் தீர்வு தரப்பட வேண்டும். அவர்கள் வாழும் பிரதேசங்களில் அவர்களின் கருமங்களைதாமேகையாளக்கூடிய நிலைமை உருவாகும்வரையில் நாங்கள் அமைச்சர் பதவிகளை ஏற்கமாட்டோம்.
இந்நாட்டில் ஏலவே ஒரு கொடூரமான ஆட்சியிருந்தது. எமது மக்களின் ஆதரவுடன் 2015 ஆம் ஆண்டு அவ்வாட்சிக்கு முடிவு கட்டப்பட்டது.
மக்களின் ஜனநாயக உரிமையின் முழுமையான பலம் அந்த தேர்தலில் பயன்படுத்தியே மேற்படி கொடிய ஆட்சி மாற்றப்பட்டது.
அம்மாற்றத்தைப் பயன்படுத்தி தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வுகாண அரசியல் சாசன ரீதியாக நிரந்தரமான அரசியல் தீர்வைக் காணுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முயற்சிகள் எடுத்து வருகின்றோம்.
சம்பூரில் 1000 ஏக்கருக்கு மேற்பட்ட மக்களுடைய காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. அதேபோல் முல்லைத்தீவு கேப்பாபுலவு ஆகிய இடங்களில் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன.
10 நாட்களுக்கு முன்பு 136 ஏக்கர் காணி கேப்பாபுலவில் மக்களுக்கு விடுவிக்கப்பட்டுள்ளது. இன்னும் 70 ஏக்கர் காணி விடுவிக்கப்பட வேண்டும்.
இது சம்பந்தமாக ஜனாதிபதிக்கு கடுமையான கடிதம் எழுதியிருக்கிறேன். கிளிநொச்சியில் காணி விடுவிக்கப்பட்டுள்ளது. வலிகாமம் மற்றும் மயிலிட்டி துறைமுகம் திருப்பி மக்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது எனவே பல கருமங்கள் நடைபெறுகின்றன.
சிறையிலிருந்த 50 வீதமான கைதிகள் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். காணாமல்போனோர் தொடர்பில் சட்டம் நிறைவேற்றப்பட்டு அவ்விசாரணைகள் விரைவில்ஆரம்பிக்கப்படவுள்ளது.
ஆனால் தாமதம் நிலவுகிறது என்பதை ஏற்றுக்கொள்கிறேன். இது விடயம் தொடர்பில் காரசாரமாக அரசாங்கத்தை கண்டித்து வருகின்றோம். சர்வதேச சமூகத்துடன் பேசும்போது அரசாங்கத்தை கண்டித்திருக்கின்றோம். கூடிய அழுத்தங்களை கொடுத்து வருகிறோம்.
பதவிக்காக மக்களுடைய உரிமைகளை விற்பவர்கள் நாங்களல்ல. அதை நாம் ஒருபோதும் செய்யமாட்டோம். நடைபெறவுள்ள தேர்தலில் நீங்கள் அளிக்கப்போகின்ற வாக்குகள் தமிழர்களுடைய நிலைப்பாட்டை பிரதிபலிக்கவேண்டும்.
எமது மக்கள் ஒருமித்து ஒற்றுமையாக அளிக்கின்ற வாக்குகள் ஒருமித்த நாட்டுக்குள் நாடு பிரிக்கப்படாமல் வரலாற்று ரீதியாக தமிழ் மக்கள் வாழ்ந்துவந்த பிரதேசங்களில் தமது இறைமையின் அடிப்படையில் ஆரோக்கியமான, கௌரவமான அந்தஸ்தைப்பெறுவதற்கு உறுதியான தீர்வு வெளிவரவேண்டும். அதுதான் இந்த தேர்தலில் நாம் அடையக்கூடிய முக்கியமான விடயம்.
உள்ளூரட்சி மன்றப்பட்டியலை, அதிக பலத்துடன் உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அது மட்டுமன்றி நிறைவேற்று அதிகாரத்தை உள்ளூராட்சி மன்றங்களுக்கு ஒப்படைக்க ஒழுங்கு செய்யப்பட வேண்டுமென்ற கருத்து தற்பொழுது நிலவிவருகிறது அதை நாம் வரவேற்கின்றேம்.
அந்த நிலைமை ஏற்படுமாக இருந்தால் உள்ளூராட்சி மன்றங்கள் நியாயமான அதிகாரங்களை பயன்படுத்தி கருமங்களை கையாளக்கூடிய ஒரு நிலைமை உருவாகும்.
எங்கள் மக்களின் கைகளில் எப்பொழுதும் இருக்கின்ற பலம் வாய்ந்த ஆயுதம் மக்களுடைய வாக்காகும். மக்களுடைய வாக்கென்பது இறைமையுடைய முதலம்சமாகும்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளை நாட்டிலுள்ளவர்கள் சர்வதேச சமூகத்தினர் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். வடகிழக்கு வாழ் தமிழ் மக்கள் என்னவிதமாக வாக்களிக்கப் போகிறார்கள் என்று தமிழ் மக்கள் ஒற்றுமையாக ஒருமித்து வாக்களிப்பார்களா என்பதை மிக உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருக்கிறார்கள்.
தமிழ் மக்கள் குறிப்பிட்ட கொள்கைக்காக நீண்ட காலமாக போராடி வந்திக்கிறார்கள். தங்கள் இறைமை மதிக்கப்படவேண்டும். உள்ளக சுயநிர்ணய உரிமை மதிக்கப்பட வேண்டும்.
தாங்கள் வாழும் பிரதேசங்களில் பல்வேறு விடயங்கள் தொடர்பில் சுயநிர்ணய அடிப்படையில் தங்களுக்குரிய அதிகாரங்களைப் பயன்படுத்தி காக்கவேண்டிய உரிமை இருக்க வேண்டுமென்று கருதுகிறார்கள்.
ஐ.நா.வின் சர்வதேசப் பிரகடனத்தின் அடிப்படையில் குறித்த மக்களை ஆட்சி புரிவதற்கு அடிப்படை ஒழுங்கு என்னவெனில் அம்மக்களின் சம்மதமாகும். மக்களுடைய சம்மதமில்லாமல் அம் மக்களை ஆட்சி புரிய முடியாது.
கடந்த எழுபது வருடங்களாக நாட்டை ஆண்டவர்கள் தமிழ் மக்களுடைய சம்மதமில்லாமல் தமிழ் மக்களை ஆட்சி புரிந்து வந்திருக்கின்றார்கள்.
இது ஒரு தொடர்கதையாக இருந்து வந்திருக்கிறது.
நாங்கள் ஆட்சியாளர்களுக்கு எமது சம்மதத்தை தெரிவிக்கவில்லையென நான் கூறுவதற்கு காரணமென்னவென்றால் 1947 ஆம் ஆண்டு தொட்டு வடகிழக்கில் இன்றுவரை ஜனநாயக ரீதியாக அளிக்கப்பட்ட ஒட்டுமொத்த முடிவுகளை நோக்கினால் ஆட்சி புரிந்தவர்களுக்கு எம்மை ஆளுவதற்கு நாம் சம்மதம் வழங்கவில்லை. சம்மதம் இல்லாமல்தான் ஆட்சி புரிந்து வருகின்றார்கள்.
போர் முடிந்த பின் ஐ.நா. முன்னை நாள் செயலாளர் பான் கீ மூன் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தபோது அவரை நான் த.தே.கூ. அமைப்பினரோடு சென்று சந்தித்தேன். யாழில் சந்தித்தவேளை அவரிடம் ஒரு விடயத்தை தெளிவாக கூறினேன்.
இலங்கை சுதந்திரமடைந்த பிறகு இந்நாட்டில் வாழும் தமிழ் மக்கள் அவர்களின் சம்மதத்துடன் ஆட்சி புரியப்படவில்லை. மாறாகவே அவர்கள் மீது ஆட்சி புரியப்பட்டிருக்கிறது.
இது ஐ.நா. பிரகடனத்துக்கு மாறான விடயமென்று கூறியதுடன் இது தொடர முடியாது எனக் கூறினேன்” என இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் முன்னாள் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி. தண்டாயுதபாணி, பாராளுமன்ற உறுப்பினர் க.துரைரெட்ணசிங்கம் ஆகியோரும் உரையாற்றினர்.