யாழ்ப்பாணம் வண்ணார்ப்பண்ணைப் பகுதியில் நேற்று(19) மூன்று வயதான குழந்தை ஒன்று கத்தியால் குத்திக் கொலைசெய்யப்பட்டுள்ளதோடு வயதான பெண் ஒருவரும் குத்துக்காயங்களுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் வெட்டிக் கொன்ற நபர் தானும் மாண்ட கொடூர சம்பவம் அப்பகுதி எங்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு குடிப்பதற்கு பணம் கேட்டதால் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினையே கொலைக்கு காரணம் என பொலிஸார் முதற்கட்ட விசாரணையில் தெரிவித்துள்ளனர். .
வண்ணார் பண்ணை வட மேற்கு பத்திரகாளி அம்மன் கோவில் வீதியில் நேற்றுக் காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பத்திரகாளி வீதியில் உள்ள குணரத்தினம் என்பவருடைய மகனான ஈஸ்வரன் எனும் முப்பத்து மூன்று வயதுடைய நபர் வீட்டில் இருந்த அவருடைய தாயார் மற்றும் அவரது தம்பியின் பிள்ளை ஆகியோரை கோடரியால் வெட்டியுள்ளார்.
சம்பவ இடத்திலேயே குழந்தை உயிரிழந்துள்ளதுடன், சந்தேக நபரின் தாயார் 55 வயதுடைய பரமேஸ்வரி படுகாயமடைந்த கழுத்து மற்றும் தலையில் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த கொலையினை மேற்கொண்டதாகச் சந்தேகிக்கப்படும் குறித்த நபர், விசம் அருந்திய நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதற்காக கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்தார்.
சிறுமியின் தாய் கர்ப்பிணியாக உள்ளதுடன் சம்பவம் இடம்பெற்ற போது வைத்தியசாலை 8.30 மணியளவில் சென்றிருந்தார்.
வீடு திரும்பிய போது வீட்டு வாசலில் என்ன நடந்ததது… என்ன நடந்தது என ஏக்கத்துடன் வந்தனர். அப்போது யாரும் என்ன நடந்தது என கூற துணிவில்லாது அழுது புலம்பினர்.
இதன்போது வீட்டுக்குள் சென்ற கர்ப்பிணி பெண்ணான தாய் மற்றும் தந்தை தமது பிள்ளை இரத்த வெள்ளத்தில் உயிர் அற்றுகிடப்பதை பார்த்து கதறி அழுதனர்.
இந்நிலையில் யாழ்ப்பாணம் மேலதிக நீதவான் வி.இராமக்கமலன் சம்பவ இடத்திற்கு சென்று விசாணைகளை மேற்கொண்டார். பின்னர் சிறுமியின் உடல் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த யாழ்ப்பாணப் பொலிஸார் இதுகுறித்து விசாரணைகளை மேற்கொண்டனர் இதன் போது கொலையாளியான ஈஸ்வரனுக்கு முதலில் மனநோய் என தெரிவிக்கப்பட்டது எனினும் குடும்பப் பிரச்சினை காரணமாகவே இந்தக் கொலை ஏற்பட்டதாக மரண விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.
இவர் திருமணம் ஆகவில்லை யாழ்.நகரில் நகைக்கடையொன்றில் வேலை செய்வதாகவும் மது அருந்துபவர் எனவும் வீட்டிற்கு வந்து பணம் கேட்டு தொந்தரவு செய்வதாகவும் வீட்டிற்கு வரும் போது கஞ்சா மற்றும் போதைப்பொருள் அடங்கிய பொருட்களை அருந்திவிட்டே வருவதாகவும் பொலிஸாருக்கு குடும்பத்தினர் தெரிவித்தனர்.
இவ்வாறான நிலையிலேயே இக் கொலை இடம்பெற்றுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன் போது தாயினை தாக்கியதை சிறுமி பார்த்ததை யாருக்கும் சொல்லாம் என்ற காரணத்தினாலேயே சிறுமியையும் கொலைசெய்திருக்கலாம் அத்துடன். நகைக்கடையில் வேலை செய்வதால் பொட்டாசியம் கலவையை அருந்தியே தற்கொலை செய்திருக்கலாம் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.