இலங்கை தமிழரசுக் கட்சி தவறுகளை களைந்து மக்கள் நலன்சார்ந்தும் தமிழ்த் தேசிய இனத்தின் விடுதலை சார்ந்தும் செயற்படுவதற்காக எம்முடன் இணைவார்களாயின் அரவணைத்து செயற்பட நாம் தயாராகவே உள்ளோம்.
அத்துடன் எமது புதிய கூட்டணி ஜனநாயகக் கட்டமைப்புக்குரிய மாற்று அணிக்கான அடித்தளமொன்றை இட்டுள்ளதாகவும் தமிழ்த்தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளில் ஒன்றான ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ்பிரேமச்சந்திரன் கேசரிக்கு அளித்த பிரத்தியேக செவ்வியில் தெரிவித்தார்.
அச்செவ்வியின் முழு வடிவம் வருமாறு,
கேள்வி:- கொள்கையிலிருந்து தமிழரசுக்கட்சி விலகிச் செயற்படுவதாக கூறி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறிய ஈ.பி.ஆர்.எல்.எப். தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைந்தமைக்கான காரணம் என்ன?
பதில்:- சர்வ அதிகாரம் படைத்த முன்னாள் ஜனாதிபதியை வீழ்த்தி நாட்டில் ஜனநாயகத்தை தாபிப்பதற்கு கட்சி பேதமின்றி முழுநாடும் ஒன்றிணைந்தது.
அரசியல் கட்சிகளுடன் மனிதவுரிமை அமைப்புகளும், சமூக ஆர்வலர்களும், தொழிற்சங்கங்களும், ஏராளமான பொது அமைப்புகளும் கைகோர்த்து செயற்பட்டதை இந்த நாடு அறியும்.
அதைப் போன்றே தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவுடன் உருவான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்கள் வழங்கிய ஆணையைக் கைவிட்டு அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலை ஏற்று செயற்படும் ஒரு போக்கைக் கடைப்பிடித்தபொழுது அவர்களுடன் தொடர்ந்தும் பயணிக்க முடியாத ஒரு சூழல் ஏற்பட்டது.
அதனைத் திருத்தி சரியான பாதையில் செலுத்துவதற்காக மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் பலனளிக்கவில்லை.
ஆகவே, எமது மக்கள் கொடுத்த ஆணையை முன்னெடுத்துச் செல்வதற்கு தமிழ் அரசியல் கட்சிகளையும் பரந்துபட்ட தமிழ் அமைப்புக்களையும் ஒன்றிணைத்து ஒரு மாற்று அணியை உருவாக்க வேண்டிய தேவை ஏற்பட்டது.
இதற்காக நாம் பலதரப்பினருடனும் பேச்சுவார்த்தைகளை நடாத்தினோம். வடக்கு, -கிழக்கில் உள்ள எட்டு மாவட்டங்களில் நாங்கள் உள்ளூராட்சி தேர்தலுக்கு முகங்கொடுக்க வேண்டியேற்பட்டது.
இதற்கு சகல மக்களாலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய எல்லோருக்கும் தெரிந்த பரீட்சயமான சின்னமாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதயசூரியன் சின்னமே இருந்தது.
தந்தை செல்வா மற்றும் ஜி.ஜி. பொன்னம்பலம் போன்றவர்களால் உருவாக்கப்பட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலாவது தேர்தலிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு தமிழீழ விடுதலைப் புலிகளாலும் அங்கீகரிக்கப்பட்ட ஒரு சின்னமாக உதயசூரியன் இருந்தது.
எம்முடன் இணைந்து பயணிக்கும் அனைத்து கட்சிகளும் அமைப்புகளும் அதனை ஏகமனதாக அங்கீகரித்தன.
ஆனந்தசங்கரி அவர்களுடன் கலந்துரையாடி அவரும் அதனை ஒரு பொதுச்சின்னமாக ஏற்றுக்கொள்வதற்கும் அது தொடர்பான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை அங்கீகரித்து ஏற்றுக்கொள்வதற்கும் தயாராக இருந்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஸ்தாபகக் கட்சிகளில் தமிழர் விடுதலைக் கூட்டணியும் ஒன்று.
2012ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் கிளிநொச்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டபோது கூட்டமைப்பில் மீண்டும் இணைந்துகொண்ட தமிழர் விடுதலைக் கூட்டணியின் சின்னத்திலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிட்டு இரண்டு பிரதேச சபைகளையும் கைப்பற்றியது.
அந்த நேரத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மானத்தைக் காப்பாற்றியதும் உதயசூரியன் சின்னம்தான்.
தமிழர்களின் உரிமைகளைப் பெறுவதற்கான ஆயுதப் போராட்டம் 2009ஆம் ஆண்டு மௌனிக்கச் செய்யப்பட்டதன் பின்னர், எமது தேசிய இனப் பிரச்சினையை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய முழுப்பொறுப்பும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தோள்களில் வந்திறங்கியது.
இதனை நிறைவேற்றுவதற்கு அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளையும் ஓரணியில் திரட்ட வேண்டிய தேவையை நாம் உணர்ந்ததன் விளைவே ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணியும், சித்தார்த்தன் தலைமையிலான புளொட்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணைவதற்கு பிரதான காரணமாக இருந்தது.
ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னர், நடைபெற்ற அனைத்துத் தேர்தல்களிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு மக்கள் வழங்கிய ஆணையை நிறைவேற்றுவதை தற்போதைய தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளும் அமைப்புகளும் ஏற்றுக்கொண்டதன் பேரில், தமிழர் விடுதலைக் கூட்டணியின் சின்னமான உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட முடிவு செய்யப்பட்டது.
கேள்வி:- தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியையும் இணைந்த கட்டமைப்பை உருவாக்க முடியாது போனதேன்?
பதில்:- தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடன் ஒரு பரந்துபட்ட வலுவான கூட்டமைப்பை உருவாக்குவது தொடர்பாக பலசுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடாத்தியிருந்தோம்.
பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் இருந்தாலும்கூட, தேர்தல் அறிவிக்கும்வரையிலும் எங்களது பேச்சுவார்த்தை தொடர்ந்த வண்ணமே இருந்தது.
இதன் காரணமாக எம்மால் ஒரு பொதுச் சின்னத்தைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள முடியவில்லை.
ஏனையோர் அனைவரும் ஏற்றுக்கொண்ட பொதுச்சின்னத்தை தமிழ் தேசிய மக்கள் முன்னணியினாலோ அல்லது தமிழ்க் காங்கிரஸினாலோ ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
இத்தகைய காரணங்களால் நாம் உருவாக்கிய தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பில் அவர்களால் இணைந்துகொள்ளவும் முடியவில்லை.
குறைந்தபட்சம் ஒரு போட்டித் தவிர்ப்பு ஒப்பந்தத்தையாவது மேற்கொள்ள நாம் முயற்சி செய்தோம். ஆனால் அதனையும் ஏற்பதற்கு அவர்கள் தயாராக இருக்கவில்லை.
கேள்வி:- சிறு தேர்தலாக கருதப்படும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் கூட கூட்டமைப்புக்கு எதிரான பலமான மாற்று அணியொன்றை உருவாக்க முடியாது போயுள்ளமையை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?
பதில்:- ஒரு பரந்துபட்ட ஐக்கிய முன்னணியை உருவாக்குவது என்பது இலகுவான காரியமல்ல.
பல்வேறுபட்ட கருத்துக்களை உடைய சக்திகளை ஒரு பொதுவான கொள்கையின் கீழும் அதனை ஒட்டிய குறைந்தபட்ச வேலைத்திட்டத்தின் கீழும் இணைப்பதென்பது சாதாரண விடயமல்ல.
ஒரு கட்சிக்குள்ளேயே பல்வேறு கருத்து வேறுபாடுகள் நிலவும் சூழலில், பல அமைப்புக்களை இணைத்து ஒரு மாற்று அணிக்கான அடித்தளத்தை நாம் இட்டுள்ளோம். தற்போது தோன்றியுள்ள மாற்று அணி முழுமையான அரசியல் கட்சிகளை ஒன்றாக அணி திரட்டாதபோதும், எதிர்காலத்தில் அவர்களை ஒன்றிணைப்பதற்கான அடித்தளத்தை நாம் இட்டிருக்கிறோம்.
ஐக்கியம் என்ற பெயரில் சர்வாதிகாரப் போக்குடன் செயற்பட்டு கொள்கைகளைக் கைவிட்டு தமிழரசுக் கட்சியை பலப்படுத்துவதை மட்டுமே நோக்கமாகக் கொண்ட அந்தக் கட்சியின் எதேச்சாதிகாரத் தன்மையிலிருந்து அரசியல் தலைமைகளை மீட்டெடுத்து ஒரு ஜனநாயகப் பாதையில் தெளிவான கொள்கையுடன் முன்னேறுவதற்கு நாம் அடித்தளமிட்டுள்ளோம்.
கேள்வி:- உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டமைப்பாக களமிறங்கியுள்ள உங்கள் தரப்பின் பிரதான இலக்கு அல்லது தொனிப்பொருள் என்ன?
பதில்:- வடக்கு–-கிழக்கில் இடம்பெற்ற பாரிய யுத்தத்தின் விளைவாக கிராமிய நகர கட்டமைப்புக்கள் அனைத்தும் அழிவுக்குள்ளாகின. சகலவிதமான அபிவிருத்திகளும் முடக்கப்பட்டன.
அது மட்டுமன்றி, மிக நீண்டகாலமாக பொருளாதாரத் தடை விதிக்கப்பட்ட பிரதேசமாகவும் அவை இருந்தன. யுத்தம் முடிவுற்றதன் பின்னரும்கூட இதனை மீளக்கட்டியெழுப்புவதற்கான எந்தவிதமான திட்டமிடல்களும் அரச தரப்பிலிருந்து ஏற்படுத்தப்படவில்லை.
கடந்த உள்ராட்சி சபைத்தேர்தல்களில் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு முழுமையான ஆதரவினை வழங்கியதுடன், வடக்கு-, கிழக்கின் மிகப் பெரும்பாலான சபைகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வசமே இருந்தது.
இதற்கு நியமிக்கப்பட்ட தவிசாளர்களில் பெருமளவிலானவர்கள் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்தவர்களாகவே இருந்தனர். இச்சபைகளின் பெருமளவிலான தவிசாளர்கள் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டிருந்தனர். இதனை நாம் சுட்டிக்காட்டியபோதும், எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல், தொடர்ந்தும் ஊழல் நடைபெறுவதற்கு தமிழரசுக் கட்சி துணைபோயிருந்தது.
அரசியல் மற்றும் அபிவிருத்தி விடயங்களைக் கணக்கில் கொண்டு ஊழலற்ற வினைத்திறன் மிக்க, தன்னிறைவு பெற்ற கிராமங்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு நீடித்திருக்கும் அபிவிருத்தி மற்றும் நிலையான அரசியல் தீர்வு என்னும் தொனிப்பொருளில் நாம் இம்முறை உள்ளூராட்சித் தேர்தல்களை முகங்கொடுக்கிறோம்.
கேள்வி:- தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைந்து ஈ.பி.ஆர்.எல்.எப். ஆரம்பித்துள்ள பயணத்துக்கு மக்கள் அங்கீகாரம் அளிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளதா?
பதில்:- நாங்கள் மாற்று அணி ஒன்றை அறிவித்த உடனேயே தமிழரசுக் கட்சி அச்சம் கொள்ளத் தொடங்கிவிட்டது.
தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு என்ற பெயரில் நாங்கள் இயங்கத் தொடங்கியவுடன், தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு என்ற பெயரை முடக்கும்படி தமிழரசுக் கட்சியினர் தேர்தல் ஆணையாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.
தேர்தல் ஆணையாளரும் அது தொடர்பில் எம்முடன் பேசினார். அந்தப் பெயரை தற்காலிகமாகக் கைவிடும்படி கோரினார்.
நாங்கள் அதனை மறுதலித்து எந்தச் சட்டத்தின்கீழ் இத்தகைய கோரிக்கையை விடுக்கிறீர்கள் என்று கேட்டது மட்டுமன்றி, அவ்வாறு ஏதாவது தேர்தல் சட்டங்கள் இருப்பின் எமக்கு எழுத்து மூலம் அறிவிக்கும்படி கோரினோம்.
இதுவரை தேர்தல்கள் ஆணையகத்திடமிருந்து இந்த விடயம் தொடர்பில் எத்தகைய எழுத்துமூல அறிவித்தலும் கிடைக்கவில்லை.
தமிழரசுக் கட்சியின் வேண்டுதலின்பேரில்தான் தேர்தல் ஆணையகமும் இவ்வாறு செயற்பட முனைந்தது. தமிழரசுக் கட்சி எம்மைக்கண்டு அஞ்சுவதற்கு இது ஒன்றே தக்க சான்றாகும்.
நாம் கொள்கை சார்ந்து தொடுக்கும் வினாக்களுக்கும் தெரிவிக்கும் கருத்துக்களுக்கும் பதிலளிக்காமல் தமிழரசுக் கட்சியினர் ஏதேதோ பேசி விடயத்தை திசை திருப்புகின்றனர். இதுவும் தமிழரசுக் கட்சியின் தோல்வி அச்சத்தின் வெளிப்பாடே.
அதுமட்டுமன்றி, தமிழரசுக் கட்சியினர் மக்கள் கொடுத்த ஆணையை கைவிட்டு அரசாங்க நிகழ்ச்சி நிரலுக்குள் செயற்படுகின்றனர் என்பதும் மக்கள் மத்தியில் பாரிய விமர்சனங்களை ஏற்படுத்தியிருக்கின்றது.
இடைக்கால அறிக்கை தொடர்பாகவும் இல்லாதவற்றை உள்ளது என்று மக்களை ஏமாற்றும் முயற்சியும் மக்கள் மத்தியில் தமிழரசுக் கட்சியின் மீது நம்பிக்கையின்மையை ஏற்படுத்தியுள்ளது.
கொழும்பில் ஒரு கதையையும் யாழ்ப்பாணத்தில் வேறொரு கதையையும் பேசி உளுத்துப்போன பாரம்பரிய அரசியலை தொடரும் தமிழரசுக் கட்சியினரை தமிழ் மக்கள் வெறுத்து ஒதுக்கத் தொடங்கியுள்ளனர்.
இத்தகைய ஒரு சூழலில், ஒரு மாற்று அணியின் தேவை மக்களால் உணரப்பட்டிருக்கின்றது.
இத னை அனைவரும் உணர்ந்ததன் விளைவாகத்தான் தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பும் உதயமானது. இது மக்களின் தேவையைக் கருதி மக்களால் உருவாக்கப்பட்ட அமைப்பாகும். வடக்கு, -கிழக்கில் அவர்கள் பாரிய வெற்றியை ஈட்டுவார்கள் என்பது பட்டவர்த்தனமான உண்மை.
கேள்வி:- தமிழ் மக்கள் பேரவையின் செயற்பாடுகளில் தொடர்ந்தும் பங்குபற்றுவீர்களா?
பதில்:- கூட்டமைப்பின் பெயரைப் பயன்படுத்தி தமிழரசுக் கட்சி தமிழ் மக்களின் நலன்களிலிருந்து விலகிச் சென்றுவிட்டதன் காரணமாகவே அந்தக் கட்சிக்கும் அரசாங்கத்திற்கும் சர்வதேசத்திற்கும் தமிழ் மக்களின் அபிலாஷைகளை உரத்துத் தெரிவிப்பதை நோக்கமாகக் கொண்டே தமிழ் மக்கள் பேரவை உதயமானது.
தமிழ் மக்கள் பேரவை என்பது கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டது. தமிழ்த் தேசிய இனத்தின் உரிமைகளை வென்றெடுக்கும்வரை தமிழ் மக்கள் பேரவை போன்ற மக்கள் அமைப்புக்கள் செயற்படவேண்டிய தேவை உள்ளது. அத்தகைய அமைப்புக்கள் செயற்படும்வரை அத்தகைய அமைப்புக்களில் எமது பங்களிப்பும் இருக்கும்.
கேள்வி:- முறையான கட்டமைப்பினைக் கொண்ட அரசியல் கூட்டமைப்பினை உருவாக்க வேண்டும் என்பதில் உறுதியாக தாங்கள் இருக்கின்றபோதும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தற்போதைக்கு மாற்றுத்தலைமை அவசியமில்லை என்கின்றாரே?
பதில்:- இது முதலமைச்சர் விக்னேஸ்வரனிடம் கேட்க வேண்டிய கேள்வி என நான் கருதுகிறேன்.
இருந்தபொழுதிலும், எம்மைப்பொறுத்தவரையில் மாற்றுத் தலைமை தேவை என்பதை மக்கள் ஏகமனதாக ஏற்றுக்கொண்டுள்ளனர்.
தமிழரசுக் கட்சியின் தவறான கொள்கையே ஒரு மாற்றுத் தலைமையின் அவசியத்தை வலியுறுத்துகிறது.
ஆகவே, தமிழ் மக்களுக்கு நீதியான நியாயமான தீர்வு எட்டப்படவேண்டுமாயின் மாற்றுத் தலைமை ஒன்றின் தேவை அவசியம் என்பதை கௌரவ முதலமைச்சரும் ஏற்றுக்கொள்வார் என்று கருதுகிறேன்.
கேள்வி:- எதிர்காலத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியையும் இணைத்துச் செயற்படுவதில் முனைப்பு காட்டுவீர்களா?
பதில்:- நாம் ஒரு பரந்துபட்ட ஐக்கிய முன்னணியை உருவாக்க விளைகின்றோம். தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்கு எம்மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய நிரந்தரத் தீர்வு ஒன்றைக் காண்பதில் ஒருமித்த கருத்துடைய அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்பதே எமது நோக்கம். அந்தக் கொள்கையின் அடிப்படையில் ஓரணியில் திரளக்கூடிய அனைவரையும் இணைத்துக்கொண்டு நாம் செயற்படுவோம்.
கேள்வி:- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் மீண்டும் இணைந்து கொள்வது தொடர்பில் உங்களின் நிலைப்பாடு என்னவாகவுள்ளது?
பதில்:- தமிழரசுக் கட்சிக்கும் எமக்கும் இடையில் தனிப்பட்ட கோபதாபங்கள் ஏதும் இல்லை.
ஆனால் கூட்டமைப்பு என்ற பெயரில் தமிழரசுக் கட்சி எதேச்சதிகாரமாகச் செயற்பட்டு மக்களின் நலனிலிருந்து விலகிச் சென்றமையும் மக்கள் வழங்கிய ஆணையை மறந்து கொள்கைகளைக் கைவிட்டு அடிப்படைக் கோரிக்கைகளிலேயே சமசரம் செய்துகொண்டதாலும் நாங்கள் தொடர்ந்தும் தமிழரசுக் கட்சியுடன் பயணிக்க முடியாத சூழல் உருவானது.
இந்தத் தவறுகளை களைந்து மக்கள் நலன்சார்ந்து தமிழ்த் தேசிய இனத்தின் விடுதலை சார்ந்து செயற்படுவதற்காக எம்முடன் இணைவார்களாயின் அரவணைத்து செயற்பட நாம் தயராகவே உள்ளோம்.
கேள்வி:- உள்ளூராட்சிமன்றங்களில் உங்களின் தரப்பு பெரும்பான்மையை பெறமுடியாது போனால் இணைந்து நிர்வாகத்தினை ஏற்படுத்துவதற்கு முனைவீர்களா? அவ்வாறு இணைவதாயின் எந்த அடிப்படையில் யாருடன் இணைய முற்படுவீர்கள்?
பதில்:- தேர்தல் முடிவுகள் வெளிவந்ததும் இந்த விடயம் தொடர்பில் நாம் சரியான முடிவுகளை மேற் கொள்வோம்.