யார் வாரிசு எம்.ஜி.ஆர் சொத்துகளுக்கு??

எம்.ஜி.ஆர் ஆரம்பித்த கட்சிக்காக உரிமை கொண்டாடி நடக்கும் மோதல்கள்தான் கடந்த ஓராண்டாக தமிழ்நாட்டுக்குத் தலைப்புச் செய்தி. சரி, எம்.ஜி.ஆர் தனிப்பட்ட முறையில் சம்பாதித்துச் சேர்த்த சொத்துகளின் நிலைமை என்ன? அவற்றை எம்.ஜி.ஆர் என்ன செய்ய விரும்பினார்? இப்போது அவற்றை யார் யார் வைத்திருக்கிறார்கள்?

Capturegஎம்.ஜி.ஆரின் சொத்துகளை நிர்வகிப்பது தொடர்பாக அவருடைய உறவினர்களிடையே இருந்த பகை, 2011-ம் ஆண்டு அவரின் உறவினர் விஜயன் படுகொலையான பின்பே வெளியுலகுக்குத் தெரியவந்தது.

எம்.ஜி.ஆர்., தான் வாழ்ந்த வீட்டை, தன் காலத்துக்குப் பிறகு, காதுகேளாத ஏழை எளிய குழந்தைகளுக்கான பள்ளியாக மாற்ற வேண்டும் என்று உயில் எழுதி வைத்தார்.

அவர் மரணமடைவதற்கு 11 மாதங்களுக்குமுன்பு, 1987 ஜனவரி 18-ம் தேதி, தன் சொத்துகள் குறித்த புதிய உயிலை எம்.ஜி.ஆர் எழுதினார்.

தன் சொத்துக்களாக அவர் பட்டியலிட்டவை… ராமாவரத்தில் எம்.ஜி.ஆர் வாழ்ந்த ‘எம்.ஜி.ஆர் தோட்டம்’ என்கிற வீடு, ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க கட்சி அலுவலகம், தி.நகரில் உள்ள எம்.ஜி.ஆர் நினைவு இல்லம், கோடம்பாக்கம் சத்யா திடலில் 25 கிரவுண்டு நிலத்தில் இயங்கிவரும் எம்.ஜி.ஆர் மேல்நிலைப் பள்ளி, கோடம்பாக்கத்தில் நான்கு கிரவுண்டு நிலத்தில் இயங்கிவரும் எம்.ஜி.ஆர் தொடக்கப் பள்ளி,

வடபழனி காவல்நிலையம் எதிரே எம்.ஜி.ஆர் திடலில் உள்ள ஜே.ஆர்.கே பள்ளி, அடையாறு சத்யா ஸ்டூடியோ, ஆலந்தூரில் 43 முதல் 47 வரை இலக்கமிட்ட ஐந்து கடைகள், விருகம்பாக்கம் மற்றும் சாலிகிராமத்தில் உள்ள சத்யா கார்டன், நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள பத்திரிகை கட்டடம், திருச்சியில் கட்சிக்காக வாங்கிய இரு தளங்கள் கொண்ட பங்களா. இவைதான் எம்.ஜி.ஆர் தன் உயிலில் குறிப்பிட்ட சொத்துகள்.

சினிமாவில் பெரும் வருமானம் ஈட்டி, புகழ்பெற்று விளங்கிய காலத்திலேயே, எம்.ஜி.ஆருக்கும் அவரின் சகோதரருக்கும் இடையே பாகப்பிரிவினை நடந்தது.

சொத்துகளை மூன்று பாகங்களாகப் பிரித்த எம்.ஜி.ஆர்., இரண்டு பங்குகளை தன் சகோதரருக்கு விட்டுக்கொடுத்துவிட்டு, ஒரு பங்கை மட்டும் தனக்கு எடுத்துக்கொண்டார்.

p88a_1514370254 எம்.ஜி.ஆர் சொத்துகளுக்கு யார் வாரிசு! எம்.ஜி.ஆர் சொத்துகளுக்கு யார் வாரிசு! p88a 1514370254ராமாவரம் தோட்டம்

1960-களில் பிரபலமான நடிகராக விளங்கிய எம்.ஜி.ஆர்., நகரின் பரபரப்பிலிருந்து விலகி வாழ விரும்பினார். அதனால், மணப்பாக்கத்தில் 103 கிரவுண்டு நிலத்தை வாங்கி, வீடு கட்டினார்.

முதல் மனைவி சதானந்தவதி காலமான பிறகு, வி.என்.ஜானகியுடன் அந்த வீட்டில் குடியேறினார். எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு, அவர் எழுதிய உயிலின்படி, இந்த வீட்டில் ஜானகி வசித்தார்.

ஜானகியின் காலத்துக்குப்பின், அவரின் தம்பி வாரிசுகளான ஜானு, சுதா, கீதா ஆகியோர் இங்கு வசிக்கின்றனர். மேலும், ஜானகியின் வளர்ப்புப் பிள்ளையான மறைந்த அப்பு இந்த வீட்டில்தான் வசித்தார்.

அப்புவின் தங்கை ராதாவும் இந்த வீட்டில் வசிக்கிறார். ‘இந்த வீட்டை விற்கவோ, அடமானம் வைக்கவோ, யாருக்கும் உரிமை இல்லை’ என உயிலில் எம்.ஜி.ஆர் தெளிவாக எழுதியுள்ளார்.

இந்த வீட்டின் பின்பகுதியில், ‘டாக்டர் எம்.ஜி.ஆர் பேச்சு மற்றும் காது கேளாதோர் மேல்நிலைப் பள்ளி’ இயங்குகிறது. 350 பேர் தங்கிப் படிக்கும் இந்தப் பள்ளியை, ஜானகியின் அண்ணன் மகள்களில் ஒருவரான லதா நிர்வகித்து வருகிறார்.

p88e_1514370139 எம்.ஜி.ஆர் சொத்துகளுக்கு யார் வாரிசு! எம்.ஜி.ஆர் சொத்துகளுக்கு யார் வாரிசு! p88e 1514370139காது கேளாதோர் இல்லம்

எம்.ஜி.ஆர் தன் இறுதிக்காலத்தில் பேசும் திறனை முற்றிலுமாக இழந்தார். தன் குரலால் மக்களை வசீகரித்த ஒரு தலைவரால், இயல்பாகப் பேச முடியாமல் போனது துயரம். காது கேளாதோருக்கான இல்லத்தை ஏற்படுத்த வேண்டுமென அவர் உயில் எழுதி வைத்ததற்கு இதுதான் காரணம்.

இந்தப் பள்ளிக்கு முக்கியத்துவம் அளித்து எம்.ஜி.ஆர் எழுதிய அந்த உயிலில், ‘ராமாவரம் தோட்டத்தில் உள்ள காலியிடங்களை எல்லாம் சேர்த்து, அதில் ‘டாக்டர் எம்.ஜி.ஆர் பேச்சு மற்றும் காது கேளாதோர் இல்லம்’ என்ற பெயரில் வாய்பேச இயலாதோர், காது கேளாதவர்கள் இல்லம் ஏற்படுத்த வேண்டும்.

அவர்கள் கட்டணமின்றி தங்கியிருப்பதற்கும், உணவுக்கும் ஏற்பாடு செய்ய வேண்டும். அவர்கள் உடுத்த உடை, மருத்துவ வசதி, கல்வி, தொழிற்பயிற்சி பெறுவதற்கும் இந்தக் காலியிடங்களில் கட்டடங்கள் அமைத்துக் கொள்ள வேண்டும்.

அத்துடன் சிகிச்சையும், பேச்சுப் பயிற்சியும் ஏற்பாடு செய்தாக வேண்டும். இதேபோல், காது கேளாதவர்களுக்கு தங்கும் வசதி, காது கேட்பதற்கான கருவிகள் வாங்கிக்கொடுத்தல் ஆகியவற்றையும் செய்ய வேண்டும். இவை எல்லாவற்றுக்கும் சாலிகிராமத்தில் உள்ள சத்யா தோட்டத்தில் கிடைக்கும் வருமானத்திலிருந்து செலவு செய்ய வேண்டும்’ எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

p88b_1514370384 எம்.ஜி.ஆர் சொத்துகளுக்கு யார் வாரிசு! எம்.ஜி.ஆர் சொத்துகளுக்கு யார் வாரிசு! p88b 1514370384அ.தி.மு.க கட்சி அலுவலகம்

எம்.ஜி.ஆர் சினிமாவில் உச்சத்தில் இருந்த போது வாங்கியதுதான், ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகம். நடிகர் சங்கம், நாடக மன்றம் எனப் பல அவதாரங்களை எடுத்து, இறுதியாகக் கட்சி அலுவலகமாக அது மாறியது. ஜானகி பெயரில்தான் அந்தக் கட்டடம் இருக்கிறது. எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு ஜா. அணி – ஜெ. அணி என அ.தி.மு.க பிரிந்து பின்னர் இணைந்தபோது, இந்தக் கட்டடத்தைக் கட்சிக்கு விட்டுக்கொடுத்தார் ஜானகி.

சத்யா கார்டன்

விருகம்பாக்கம் மற்றும் சாலிகிராமம் ஆகிய இடங்களில் சத்யா கார்டன் என்ற தோட்டம் உள்ளது. அங்கே வாழை, தென்னை போன்றவை பயிரிடப்படுகின்றன. விருகம்பாக்கத்தில் உள்ள சத்யா கார்டன், ஏழை மக்களுக்கான மருத்துவமனையாக முன்பு இருந்தது.

இந்த இரு இடங்கள் மூலம் கிடைக்கும் வருவாய்தான், ராமாவரம் பள்ளிக்கு உணவு, பராமரிப்பு போன்ற செலவு களுக்குப் பயன்படுகிறது.

சத்யா ஸ்டுடியோ

1950-களில், புகழ்பெற்று விளங்கியது நெப்டியூன் ஸ்டுடியோ. பல வெற்றிப்படங்கள் தயாரிக்கப் பட்ட இடம் இது. அடையாறு கரையில் இருந்த அதை, 1960-களில் வாங்கி, தன் தாயின் பெயரைச் சூட்டினார் எம்.ஜி.ஆர்.

அதில், 95 சதகிவித பங்குகள் எம்.ஜி.ஆர் பெயரிலும், ஐந்து சதவிகித பங்குகள் ஜானகி பெயரிலும் இருந்தன. 95 கிரவுண்டு பரப்புள்ள அந்த இடத்தை வாடகைக்கு விட்டு, அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தையும் காதுகேளாதார் பள்ளிக்குச் செலவிட வேண்டுமென்று எம்.ஜி.ஆர் உயில் எழுதினார். அங்கே தற்போது, எம்.ஜி.ஆர் ஜானகி மகளிர் கல்லூரி செயல்படுகிறது.

p88c_1514370222 எம்.ஜி.ஆர் சொத்துகளுக்கு யார் வாரிசு! எம்.ஜி.ஆர் சொத்துகளுக்கு யார் வாரிசு! p88c 1514370222இலவசப் பள்ளிகள்

கோடம்பாக்கத்தில் மூன்று இலவசப் பள்ளிகள் செயல் படுகின்றன. 1959-ல் சிறியதாக ஆரம்பிக்கப்பட்ட எம்.ஜி.ஆர் திடல் பள்ளி, ஏழை எளிய குடும்பங்களின் குழந்தைகளுக்கு கல்விச்செல்வத்தை வழங்கிக் கொண்டிருக்கிறது. இந்தப் பள்ளிகளை, ஜானகியின் தம்பி பிள்ளைகளில் ஒருவரான தீபன் நிர்வகித்துவருகிறார்.

தி.நகர் நினைவு இல்லம்

எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்துக்கு, சென்னையின் மையப்பகுதியில் ஓர் அலுவலகம் வேண்டும் என்று விரும்பிய எம்.ஜி.ஆர்., தி.நகர் ஆற்காடு சாலையில் ஒரு சிறிய வீட்டை வாங்கினார். அங்கே அலுவலகம் திறந்தார்.

தலைவர்கள், சினிமா பிரபலங்கள் பலரும் எம்.ஜி.ஆரை இங்கு வந்துதான் சந்திப்பார்கள். பல அரசியல் திருப்பங்களுக்குக் காரணமாக அந்த வீடு இருந்தது.

தன் காலத்துக்குப்பின், அந்த வீட்டை தனது நினைவு இல்லமாக மாற்ற வேண்டும் என்று எம்.ஜி.ஆர் உயில் எழுதிவைத்தார். இந்த இல்லத்தில் எம்.ஜி.ஆரின் கார், பாடம் செய்யப்பட்ட நிலையில் அவர் வளர்த்த சிங்கம், திரையுலகில் அவர் பெற்ற விருதுகள், அவர் பயன்படுத்திய பொருள்கள் வைக்கப்பட்டுள்ளன.

‘அண்ணா’ பத்திரிகை கட்டடம்

‘அண்ணா அறக்கட்டளை’ சார்பில் தி.மு.க தலைவர்களில் ஒருவரான கே.ஏ.மதியழகனிட மிருந்து நெல்சன் மாணிக்கம் சாலையில் ஓர் இடம் வாங்கப்பட்டது. ‘அண்ணா’ என்ற பெயரில் எம்.ஜி.ஆர் நடத்திய பத்திரிகைக்காக இந்த இடம் வாங்கப்பட்டது. இந்த இடத்தை, ஜா.அணி – ஜெ.அணி இணைப்புக்குப்பின், ஒன்றுபட்ட அ.தி.மு.க-வுக்கு ஜானகி விட்டுக் கொடுத்தார். இன்று, பராமரிப்பின்றி கிடக்கிறது இந்த இடம்.

திருச்சி பங்களா

திருச்சியை தமிழகத்தின் இன்னொரு தலைநகராக அறிவிக்கும் யோசனையை எம்.ஜி.ஆர் முன்வைத்தார். அந்தக் காலகட்டத்தில், அன்றைய அமைச்சர் நல்லுசாமி மூலம் திருச்சி குடமுருட்டி ஆற்றங்கரையிலிருந்து உறையூர் செல்லும் சாலையில் சுமார் 2 ஏக்கரில் பண்ணை வீடு போன்ற ஒரு பங்களாவை எம்.ஜி.ஆர் வாங்கினார்.

இது, 1984-ம் வருடம் ரூ.4 லட்சத்துக்கு வாங்கப்பட்டது. எம்.ஜி.ஆர் வந்து தங்குவதற்கு வசதியாக பங்களாவில் பல வசதிகள் செய்யப்பட்டன.

ஆனால், இதை வாங்கிய சில மாதங்களில் எம்.ஜி.ஆரின் உடல்நிலை பாதிக்கப்பட்டதால், அவரது ஆசை நிராசையாகிப்போனது. ஒருகட்டத்தில், எம்.ஜி.ஆரின் அண்ணன் குடும்பத்தினரும், கட்சி நிர்வாகிகளும் இந்த பங்களாவுக்கு சொந்தம் கொண்டாடி மோதினர். இப்போது யாரும் இல்லாமல், சிதிலமடைந்து கிடக்கிறது இந்த பங்களா.

p88d_1514370181 எம்.ஜி.ஆர் சொத்துகளுக்கு யார் வாரிசு! எம்.ஜி.ஆர் சொத்துகளுக்கு யார் வாரிசு! p88d 1514370181சர்ச்சையும் ‘சம்பவமும்’!

எம்.ஜி.ஆரின் மறைவுக்குப்பிறகு அவரின் சொத்துகள் சம்பந்தமாக அவரின் சகோதரர் சக்ரபாணி குடும்பத்தாரிடமிருந்து பிரச்னை எழுந்தது. அவர்கள், சில சட்டப்பூர்வ நடவடிக்கைகளிலும் இறங்கினர்.

எம்.ஜி.ஆருக்கு சிறுநீரக தானம் அளித்தது சக்ரபாணியின் மூத்த மகள் லீலாவதிதான். தங்கள் குடும்பத்துக்கு எம்.ஜி.ஆர் எதுவும் செய்யவில்லை என்ற வருத்தம் அவர்களுக்கு உண்டு. சக்ரபாணியின் குடும்பத்தார் அதுகுறித்து ஆர்.எம்.வீரப்பன் மூலம் பேச முயன்றனர். ஆனால், அதில் முன்னேற்றமில்லை. எம்.ஜி.ஆர் என்ற மனிதரின் புகழுக்குக் களங்கம் வேண்டாம் என அவர்கள் அந்தப் பிரச்னையை அதன்பின் விட்டுவிட்டனர்.

‘‘தான் எழுதிய உயிலில் சொத்துகளைப் பட்டியலிட்ட எம்.ஜி.ஆர்., அதற்கான வரைபடத்தில் சரியான அளவுகளைக் குறிப்பிடாமல், பொத்தாம்பொதுவாகவே எழுதியிருந்தார்.

பல விஷயங்களை அவர் தெளிவான சட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தி எழுதவில்லை. அதனால், எம்.ஜி.ஆரின் சொத்துகளை நிர்வகிப்பது தொடர்பாக அவர் இறந்த சில மாதங்களிலேயே, ஜானகியின் வாரிசுகளிடையே பிரச்னை ஆரம்பித்துவிட்டது.

நீறுபூத்த நெருப்பாக இருந்த சொத்து மோதல், சொத்துகளை நிர்வகிக்கும் பொறுப்பை ஜானகியின் அண்ணன் மகள் லதாவின் கணவர் ராஜேந்திரன் ஏற்றபின் இன்னும் மோசமானது. ‘உயில்படி நடக்காமல், தன் விருப்பம்போல் செயல்படுகிறார்’ என ராஜேந்திரனுக்கு எதிராக லதாவின் சகோதரிகள் போர்க்கொடி உயர்த்தினர்.

தோட்ட வீட்டின் எஞ்சிய பகுதிகளை ஒருங்கிணைத்து, காதுகேளாதோர் பள்ளியை எழுப்ப வேண்டும் என உயிலில் எம்.ஜி.ஆர் குறிப்பிட்டிருந்தார். ஆனால், அதற்கான பரப்பளவுகளை அவர் துல்லியமாகக் குறிப்பிடவில்லை. அதனால், தோட்ட வீட்டுக்கு சொந்தமான இடத்தையும் ஆக்கிரமித்து காதுகேளாதோர் பள்ளியை லதா ராஜேந்திரன் எழுப்பிவிட்டதாக, சுதா பிரச்னை கிளப்பினார்.

வாடகைக்கு விடச்சொன்ன சத்யா ஸ்டுடியோவை கல்லூரியாக்கியது… எந்தத் தனிநபர் மற்றும் அமைப்புகளிடமிருந்தும் காதுகேளாதோர் பள்ளிக்கு நன்கொடை வசூலிக்கக்கூடாது என்று உயிலில் கூறப்பட்டதற்கு மாறாக நன்கொடை பெறுவது…

இதர சொத்துகளின் வருவாயை உரிய முறையில் செலவிடாதது… கணக்குக் காட்டாதது… இப்படித் தொடர்ந்து பல பிரச்னைகளை எழுப்பி ராஜேந்திரனுக்கு எதிராகச் சட்டப் போராட்டங்களை நடத்திவந்தார் சுதாவின் கணவர் விஜயன்.

பதிலுக்கு ‘ராமாவரம் தோட்டத்தைச் சரிவர பராமரிக்காமல் சிதிலமடைய விட்டார்’ என விஜயன்மீது எதிர்தரப்பு குற்றஞ்சாட்டியது. ஒருவருக்கொருவர் புகார்களால் மோதிக்கொண்டனர். இந்நிலையில், விஜயன் படுகொலை செய்யப்பட்டார். எம்.ஜி.ஆர் சொத்து விவகாரத்தில் நிறைய வில்லங்கங்கள் இருப்பது அப்போதுதான் வெளியே தெரிந்தது.

எம்.ஜி.ஆர் கண்ட கனவுகளை உயில்வழியே நிறைவேற்ற அவர் பெயர் சொல்லி ஆட்சி நடத்தும் தலைவர்களாவது உதவுவார்களா?

நாங்களே பார்த்துக்கொள்கிறோம்”

தனக்குப் பிறகு உயிலை நிறைவேற்றுபவராக தன் வழக்கறிஞர் என்.சி.ராகவாச்சாரியையும், அவருக்குப்பின் லதாவின் கணவர் ராஜேந்திரனையும் எம்.ஜி.ஆர் குறிப்பிட்டிருந்தார்.

ராஜேந்திரன் காலத்துக்குப்பின், உயிலை நிறைவேற்று பவரை நீதிமன்றம் நியமிக்கவேண்டும் என அதில் கூறியிருந்தார். 2013-ம் ஆண்டு ராஜேந்திரன் மரணமடைந்தார்.

அதையடுத்து, அறக்கட்டளை மற்றும் சொத்துகளை நிர்வகிக்க தன்னை நியமிக்கக்கோரி லதா ராஜேந்திரன், உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதற்கு மற்ற அனைவரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அந்த மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்றம், உயில்படி எம்.ஜி.ஆரின் சொத்து மற்றும் அறக்கட்டளையை நிர்வகிக்க ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி டி.அரிபரந்தாமனை 2016-ம் ஆண்டு நியமித்தது. அதை எதிர்த்து லதா ராஜேந்திரன் உள்ளிட்ட அனைவருமே மேல்முறையீடு செய்தனர். அந்த மனுக்களை தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம். ஆனால், சட்டப்படி இரண்டாவது மேல்முறையீட்டுக்கு வாய்ப்பு உள்ளதால் அரிபரந்தாமன் பொறுப்பை ஏற்காமல் இருக்கிறார்.

‘‘எம்.ஜி.ஆர் உயிலில் எழுதிய விஷயங்கள் அனைத்தும் கடந்த காலத்தில் நடந்தேறிவிட்டன. இப்போது நீதிமன்றம் தனியே ஒருவரை நியமிக்கவேண்டியதில்லை.

எம்.ஜி.ஆர் விருப்பம்போல் காதுகேளாதோர் பள்ளி கட்டப்பட்டுவிட்டது. அவரது சொத்துகளில் கிடைக்கும் வருமானத்தில் நினைவு இல்லம் பராமரிக்கப்படுகிறது. பள்ளிகளும் இத்தனை வருடங்களாகத் தொய்வின்றி நடந்துவருகின்றன.

நீதிமன்றத்தால் நியமிக்கப்படுபவர் சம்பிரதாயமாகத்தான் பணியாற்றமுடியும். அதனால் அப்படி ஒருவர் தேவையில்லை என்பது எங்கள் கருத்து. மேலும் அறக்கட்டளையில் இருப்பவர்கள் ஒன்று கூடி சொத்துகளை யார் மேற்பார்வை செய்வது என்பதைத் தீர்மானித்துக்கொள்கிறோம்’’ என்று தொடை தட்டுகிறது லதா தரப்பு.