செஞ்சுரியன்: தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் தோல்விக்கு கோலியின் தலைக்கனமும், ரவி சாஸ்திரியின் மவுனமும் தான் முக்கிய காரணம் என்ற கருத்து எழுந்துள்ளது.
தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி, 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு டெஸ்டிலும் இந்திய அணி தோல்வியடைந்தது. இதன் மூலம் டெஸ்ட் தொடரை இந்திய அணி இழந்தது.
இதற்கு பின் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் இந்திய கேப்டன் கோலி, சிறந்த லெவனை தேர்வு செய்யாதது குறித்து கேள்வி எழுப்பிய பத்திரிக்கையாளரிடம் பாய்ந்தார்.
இந்நிலையில் சூப்பர் பார்மில் இருந்த புவனேஷ்வர் குமாரை நீக்கியது, ரகானேவை அணியில் சேர்க்காதது, தவறை திருத்திக்கொள்ளாத புஜாராவுக்கு மீண்டும் வாய்ப்பு அளித்தது, உள்ளிட்ட கேப்டன் கோலியின் செயல்கள் தற்போது அவருக்கு எதிராக திரும்பதுவங்கியுள்ளது.
இதற்கு கோலியின் அதிப்படியான தலைக்கனம் தான் காரணம் என பல முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவிக்க துவங்கியுள்ளனர். தவிர, இதை கேட்க வேண்டிய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தொடர்ந்து மவுனம் சாதிக்கிறார்.
இந்நிலையில் அணியின் வெற்றிக்கு சிறந்த லெவனை தேர்வு செய்வது கேப்டனின் கடமையாகும், அதை விடுத்து கோலி அணியில் சேர்க்கும் வீரர்கள் சிறப்பாக செயல்பட வேண்டும் என அவர் நினைக்கிறார். இதை பத்திரிக்கையாளர்கள் சந்திப்பிலும் நியாப்படுத்த முயற்சித்தார்.
கோலி தனக்கு அதிகமாக கைகொடுக்கும் ஆக்ரோஷம், மற்றவர்களுக்கு எடுபடவில்லை என்பதை உணரவேண்டும். தன்னம்பிக்கைக்கும் தலைக்கனத்துக்கும் ஒரு மெல்லிசான கோடு அளவே வித்தியாசம் உள்ளது என்பதை புரிந்து கொண்டு செயல் பட வேண்டும். இல்லை என்றால் வேறு கேப்டனை தேர்வு செய்ய பிசிசிஐ., தயாராகும் நிலை நிச்சயமாக உருவாகும் என முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவிக்க துவங்கியுள்ளனர்.