சென்னையில், தான் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் கமல்ஹாசன், `என் ஆயுளுக்குள் இந்தியாவைப் பெருமையடையச் செய்வேன்’ என்று பேசியுள்ளார்.
சென்னை நந்தம்பாக்கம் ட்ரேட் சென்டரில், சில நாள்களுக்கு முன்னர் நடந்த ஆனந்த விகடன் சினிமா விருதுகள் விழாவில் பேசிய கமல்ஹாசன், `ஜனவரி 26-ம் தேதி முதல் களத்தில் இறங்கப்போகிறேன். பயணத்தை எங்கிருந்து, எப்படித் தொடங்குகிறேன் என்பதை வருகிற 18-ம் தேதி வெளியாகும் ஆனந்த விகடனில் எழுதியிருக்கிறேன்’ என்று அறிவித்து, அரசியல் களத்தில் கவனம் ஈர்த்தார். இப்படி நேரடி அரசியலில் முழுவீச்சில் இறங்கியுள்ள கமல், வேளச்சேரியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பரபரப்பாகப் பேசியுள்ளார்.
விழாவில் பேசிய கமல், `கல்வி, சுகாதாரம், போக்குவரத்து போன்றவை சரியாக இல்லை. அதை, டிஜிட்டல் முறையில் சரிசெய்யவே நான் வந்துள்ளேன். இந்தியாவின் பெருமை தமிழகத்திலிருந்து தொடங்கும். அதற்கான பயணத்தை அடுத்த மாதத்திலிருந்து தொடங்க உள்ளேன். அப்போது, பல சகோதரர்கள் கிடைப்பார்கள். என் ஆயுளுக்குள் இந்தியாவைப் பெருமையடையச் செய்வேன்’ என்றார் நம்பிக்கையுடன்.